சிக்கன நடவடிக்கைகள் ஐரோப்பிய வேலையின்மை விகிதங்களை மிக அதிக அளவிற்கு உயர்த்துகின்றன. By Stefan Steinberg
செவ்வாயன்று Eurostat புள்ளிவிவர நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளில், ஐரோப்பிய அரசியல் உயரடுக்கு ஏற்றுள்ள இடைவிடாச் சிக்கன நடவடிக்கைக் கொள்கை கண்டம் முழுவதும் வேலையின்மை விகிதத்தை மிக அதிக அளவிற்கு உயர்த்தியுள்ளது தெரியவந்துள்ளது.
யூரோப்பகுதியை உருவாக்கியுள்ள 17 ஐரோப்பிய நாடுகளில் வேலையின்மை நவம்பர் மாதம் 11.8% என உயர்ந்து, வேலை இல்லாத தொழிலாளர்கள் எண்ணிக்கையை 11.8 மில்லியன் என ஆக்கிவிட்டது. இது ஒற்றை நாணயம் 1999ல் அறிமுகப்படுத்தப்பட்டபின் மிக அதிக எண்ணிக்கை ஆகும்.
யூரோப் பகுதியில் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது, வேலையின்மை 0.1% உயர்ந்துள்ளது; நவம்பர் 2011ல் இருந்து இது 1.2% கூடுதல் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளிலும் வேலையின்மை 10.7% என முதல் தடவையாக 26மில்லியனை எட்டிவிட்டது.
வேலையின்மையில் மிகப் பெரிய அதிகரிப்புக்கள் சர்வதேச நாணய நிதியம் (IMF), மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பொருளாதார அதிர்ச்சி வைத்தியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ளது. கிரேக்கத்தில் வேலையின்மை செப்டம்பர் மாதம் 26% என உயர்ந்து, 2011 செப்டம்பரைக் காட்டிலும் 7% அதிகமாக உள்ளது. ஆனால் வேலையின்மையில் ஐரோப்பாவில் முன்னணியில் இருப்பது கண்டத்தின் நான்காம் பெரிய பொருளாதாரமான ஸ்பெயினில்தான்; இங்கு தொழிலாளர் தொகுப்பில் 26.6% நவம்பர் மாதம் வேலையற்றோர் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்திய ஐரோப்பிய புள்ளிவிவரங்களைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், பிரித்தானிய Institute of Directors இன் தலைமைப் பொருளாதார வல்லுனர் கிரேம் லீச் கூறினார்: “பல உறுப்பு நாடுகளில் பொருளாதார உள்வெடிப்பு ஒரு பிரச்சினைக்குரிய வேகத்தில்வேகத்தில்தான் தொடர்கிறது என்பது தெளிவு.... தலையங்கத்தில் இடம் பெறும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் மோசமான தகவலைத்தான் உச்சரிக்கின்றன; இத்துடன் ஸ்பெயினில், கிரேக்கத்தில் மற்றும் இத்தாலியில் இளைஞரிடையே வேலையின்மை அரசியல் மற்றும் மனித சமூக தாக்கங்களின் திகிலூட்டும் நிலைகளை கூட்டுகின்றன”.
Eurostat புள்ளிவிவரங்ளின்படி, இளைஞர் வேலையின்மை இப்பொழுது கிரேக்கம், ஸ்பெயினில் 50% வரையும், இத்தாலியில் 30% வரையும் உள்ளன. அனைத்து முக்கிய பொருளாதாரக் குறியீடுகளும் ஐரோப்பாவில் பொருளாதார நிலை மோசமாகி வருகிறது என்பதையும் 2013ல் வேலையின்மை இன்னும் அதிகரிக்கும் என்பதையும்தான் காட்டுகின்றன.
இந்த அப்பட்டமான புள்ளிவிவரம், கண்டம் நெடுகிலும் பல மில்லியன் குடும்பங்களின் மகத்தான இடர்களையும் திகைப்புக்களையும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. இத்தகைய மிக உயர்ந்த வேலையின்மை விகிதங்களின் தவிர்க்க முடியாத விளைவுகள், 1930 இல் இருந்து கண்டிராத மட்டத்திற்கு ஐரோப்பாவில் மிக அதிக வளர்ச்சியுற்ற பொருளாதாரங்களிலும் வறுமை நிலையை தோற்றுவித்துள்ளது.
Oxfam Aid Charity இன் சமீபத்திய அறிக்கையில், கடந்த ஆண்டு இறுதியில் ஸ்பானிய அரசாங்கம் வேலையின்மை நலனிலும் கடுமையான குறைப்புக்களையும் உள்ளடக்கி அறிமுகப்படுத்திய சிக்கன நடவடிக்கைகள், அடுத்த 10 ஆண்டுகளில், 18 மில்லியன் பேர் வறுமையில் வாடுவர், அல்லது மக்கள் தொகையில் 40 சதவீதம் என வகைப்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின் படி, கிரேக்கத்தில் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இப்பொழுது வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். பிரதான நகரங்களில் அன்னசத்திரங்கள் (Soup kitchens) சாதாரணமாகிவிட்டது; நாட்டின் சில பகுதிகளில் பண்டமாற்றுச் சமூகங்கள் அமைக்கப்பட்டுள்ளன; இது வருமானமற்ற ஏழைகள் பொருட்களைப் பறிமாற்றிக் கொள்ள உதவும்.
ஜனவரி மாத இறுதியில், ஓய்வூதியம் பெறுபவர்கள், அரசாங்க ஊழியர்களின் வருமானங்களில் தொடர்ச்சியான வெட்டுக்கள் நடைமுறைக்கு வரும்; இவை ஏதென்ஸில் உள்ள அரசாங்கம் ஒப்புக் கொண்ட வெட்டுப் பொதியின் ஒரு பகுதியாகும். பல தொழிலாளர்களின் வருமானங்கள், சமீப காலத்தில் ஏற்கனவே 40% குறைந்து விட்ட நிலையில், மேலும் கூடுதலான சரிவு ஏற்படும்.
National Centre for Social Research இல் சமூக அறிவியலாளராக இருக்கும் அலிகி மௌரிகி EU, IMF ஆகியவற்றால் சுமத்தப்படும் சிக்கனக் கொள்கையின் அரசியல் விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளார்: “வேலையின்மை தொடர்ந்து வளர்கிறது, மந்தநிலை மோசமாகும், இன்னும் அதிக வணிகங்கள் மூடப்படும். இதில் பெரிய வினா எவர் தப்பிப் பிழைப்பர் என்பதே?... கோபமும் பெருந்திகைப்பும் வளர்கின்றன.... இந்த இழிந்த நிலையில் இருந்து மீள்வதற்கு மக்கள் ஒரு வழியை காணாவிட்டால், பெரும் வெடிப்பு எற்படும்.”
உண்மையில், வெகுஜன வேலையின்மை, பரந்த அளவிலான வறுமை ஆகியவை ஐரோப்பிய ஆளும் உயரடுக்கால் “நிரந்தர சிக்கனம்” என்று ஒரு பொருளாதார வர்ணனையாளர் சித்தரித்திருக்கும் திட்டங்களை இயற்றும்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
ஆண்டு இறுதியில் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், ஐரோப்பிய தொழிலாளர்களின் ஊதியங்கள், சமூக நிலைமகளை நிர்ணயித்தல் என வரும்போது சீனாதான் அடையாளக் குறிப்பாக இருக்கும் என்றார். வறிய நிலையின் விளிம்பில் வாழும் மிகப்பெரிய அளவிலான மக்கள் தோற்றுவிக்கப்படுகின்றனர்; இதையொட்டி வேலையில் இருப்பவர்களுடைய ஊதியங்களும் குறைக்கப்படலாம்; சீன சுதந்திர வர்த்தக வலையங்களில் காணப்படும் அதீத சுரண்டல் நிலைகளின் அளவு இதையொட்டிச் சாதிக்கப்படும். கிரீஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் நிலவும் சமூகப் பேரழிவு மற்றும் வறுமையின் உச்சநிலை கண்டம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
மேர்க்கெலின் அரசாங்கமே இந்த இலையுதிர்கால கூட்டாட்சித் தேர்தல்களுக்குப் பின், 2014ல் ஜேர்மனியில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் திட்டங்களைக் கொண்டுள்ளது. சமீபத்தில் ஜேர்மனி கடன் தடையை ஏற்றபின் —அது கடன் வரம்பைக் கடுமையாகக் கொண்டுள்ளது— மற்ற யூரோப் பகுதி நாடுகளையும் அதே வழியைப் பின்பற்றக் கட்டாயப்படுத்தும்.
யூரோப்பகுதிக்கு வெளியே பிரித்தானிய சான்ஸ்லர் ஜோர்ஜ் ஓஸ்போர்ன் (நிதிமந்திரி) வெஸ்ட்மினிஸ்டர் அரசாங்கம் குறைந்தப்பட்சம் 2018 வரையிலேனும் “நிதிய வேதனை” திட்டத்தைத் தக்க வைக்க விரும்புகிறது என்பதைத் தெளிவுபடுத்தினார். கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராடிக் அரசாங்கம் இந்த ஆண்டுக்கான திட்டமிடப்பட்ட வெட்டுக்களில், பொதுநலச் செலவுகளில் ஒரு உச்சவரம்பை அறிமுகப்படுத்துதல் என்பதும் அடங்கியுள்ளது; இதன் அர்த்தம் சமூகத்தின் மிக வறிய அடுக்குகளின் வருமானங்களில் பெரும் வெட்டுக்கள் இருக்கும் என்பதாகும்.
கண்டம் முழுவதும் இத்தகைய தாக்குதல்கள் என்பது தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடனேயே நடந்துள்ளன; அவை ஐரோப்பிய ஆளும் வர்க்கம் தொழிலாளர்களின் ஊதியங்கள், சமூக நிலைகள் குறைக்கப்படுதல் என்னும் கொள்கைக்கு ஆதரவு கொடுப்பதுடன், சீன நிலைக்கும் இங்கும் உள்ள தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள சுரண்டலின் இடைவெளியைக் குறைக்கவும் ஆதரவைக் கொடுக்கின்றன.
0 comments :
Post a Comment