Monday, January 7, 2013

பாகிஸ்தானுக்கு எதிராக ஆறுதல் வெற்றியடைந்தது இந்தியா-தொடரை வென்றது பாகிஸ்தான்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இருபதுக்கு 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டி தொடர் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது. 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது.

மூன்றாவது ஒரு நாள் போட்டியில் விளையாட இந்திய அணியில் இருந்து ஷேவாக் நீக்கப்பட்டு, பதிலாக ரகானே சேர்க்கப்பட்டார். இதேபோல வேகப்பந்து வீரர் அசோக்திண்டாவுக்கு பதிலாக புதுமுக வீரர் ஷமி அகமது சேர்க்கப்பட்டார். பாகிஸ்தான் அணியில் அசார் அலிக்கு பதிலாக உமர் அக்மல் மட்டும் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று மதியம் இவ்விரு அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் தொடங்கியது.

வழக்கம் போல் இந்திய அணி தொடக்கத்திலேயே திணறியது. 9.3 ஓவர்களில் 37 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்தது. ஷேவாக்குக்கு பதிலாக சேர்க்கப்பட்ட ரகானே 4 ரன்னிலேயே ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் காம்பீர் 15 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த இருவரது விக்கெட்டையும் முகமது இர்பான் கைப்பற்றினார்.

தொடர்ந்து முன்னணி வீரர்களில் ஒருவரான வீராட்கோலி 7 ரன்னில் ஜினைத்கான் பந்துக்கு வீழ்ந்தார். 4-வது விக்கெட்டுக்கு யுவராஜ்சிங்குடன், ரெய்னா ஜோடி சேர்ந்து விளையாடினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். யுவராஜ் சிங் 23 ரன்னில் இருக்கும் போது முகமது ஹபீஸ் வீசிய பந்தில் போல்டு ஆனார்.

அடுத்து ரெய்னாவுடன் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் விக்கெட்டை காப்பாற்றும் நோக்கத்துடன் விளையாடி ரன் சேர்த்தனர். 29 வது ஓவரில் ரெய்னா 31 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமல் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார்.

அதன் பின் வந்த ஜடேஜா, டோனியுடன் இணைந்து விளையாடினார். நிதானமாக விளையாடி வந்த டோனி 36 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்ததால் இந்திய அணி 43.4 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 சொற்ப ரன்னிலேயே சுருண்டது.

சுலபமாக வெற்றி பெறும் எண்ணத்தில் 168 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. இந்திய அணியில் புவனேஸ்குமார் சிறப்பாக பந்து வீசி கம்ரான் அக்மல் மற்றும் யுனிஸ்கான் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கேப்டன் மிஸ்பா உல் ஹக் 39 ரன்களும் நசீர் ஜாம்ஷெத் 34 ரன்களும் எடுத்து சிறப்பாக விளையாடினர்.

அதன் பிறகு இந்திய பவுலர்களின் பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் அணி கடுமையாக திணறியது. இஷாந் சர்மா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இறுதியில் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 157 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 போட்டிகளில் தோல்வியும் இறுதியில் வெற்றியும் பெற்றது இந்திய ரசிகர்களுக்கு மிக ஆறுதலாக இருந்தது.





No comments:

Post a Comment