உதயனுக்கு அடித்தால் புளொட்க்கு வலிக்குதாம்! வன்மைகாக கண்டிக்கின்றாராம் சித்தர்!
நேற்றையதினம் (10.01.2013) வடமராட்சி பகுதியில் இனந்தெரியாதோரால் உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மோசமாக தாக்கப்பட்டமையையும், இதே நபர்களால், விநியோகத்திற்கிருந்த உதயன் பத்திரிகைகள் எரியூட்டப்பட்டமையையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) அமைப்பினராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் ஜனநாயக சூழல் பேணப்படுவதாக அரசு அடிக்கடி அறிக்கையிட்டு வரும் இக்காலப்பகுதியில் தான் உதயன் பத்திரிகையும் அதன் ஊழியர்களும் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாவதை அவதானிக்க முடிகிறது. பத்திரிகையில் வெளிவரும் செய்திகளையும் கருத்துக்களையும் சகித்துக் கொள்ள முடியாத சக்தியொன்றே இதன் பின்னணியில் இருப்பதென்பது வெள்ளிடை மலை. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ள திராணியற்ற சக்திகளே இக் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளது. உரிமைகள், நீதி-நியாயங்கள் மீறப்படும் போது வாய்பொத்தி, கைகட்டி அதற்கு ஒத்திசைவாக இருக்க வேண்டுமென அதிகாரபலமுள்ள தரப்பு எதிர்பார்க்குமாயின் அங்கு சர்வாதிகார ஆட்சி நடைபெறுகின்றதென்பதே உண்மையாகும்.
ஊடக சுதந்திரம் மறுக்கப்படும் போது ஒட்டுமொத்த ஜனநாயக உரிமைகளுமே மறுக்கப்படுகிறது. இதனை நாம் மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன் இத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல்துறை இனங்கண்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வண்ணம்,
த.சித்தார்த்தன்
தலைவர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)
11.01.013
0 comments :
Post a Comment