‘இலங்கையில் சிங்கள - முஸ்லிம் வேறுபாடு கிடையாது, சிலர் வேற்றுமையை ஏற்படுத்த முயற்சிசெய்கின்றனர்’ என்று கவலை கொள்கிறார் கலகம தம்மரங்ஸி தேரர்
‘எங்கள் நாட்டில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எந்தவொரு வேற்றுமையும் கிடையாது. உண்மையில் இரு பிரிவினரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் போலும் இருக்கிறோம். என்றாலும் ஒரு சிலர் எங்கள் இரு இனத்தாரிடையேயும் பிரிவினையை ஏற்படுத்த முழு முயற்சியுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.’ என்று கவலைப்படுகிறார் ஜனாதிபதியின் பௌத்த அலுவல்கள் உபதேசகர் கலகம தம்மரங்ஸி தேரர்.
சகோதரி ரிஸானா நபீக் ஸவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, முஸ்லிம்களை விடவும் அதிகம் கவலைப்பட்டவர்கள் சிங்கள பௌத்தர்களே என்று மேலும் குறிப்பிட்டார் தேரர்.
கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள இலங்கை இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் புரிந்துணர்வுக்காகவும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த தம்மரங்ஸி தேரர் மேலும், மூன்று தசாப்தங்கள் நீடித்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, அபிவிருத்தியையும் ஒற்றுமையையும் இலக்காக்கி வீறுநடைபோடும் இந்நேரத்தில், ஊடகங்கள்கூட நாட்டில் பிளவுகள் ஏற்படாதிருக்கவே எழுத வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டில் சிங்கள - முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்துள்ளனர். அன்று மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வியாபாரத்திற்காக ஆண்கள் மட்டுமே வந்தார்கள். அவ்வாறு வந்த அவர்கள் நமது சிங்களப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். இவற்றைப் பார்க்கும்போது நாம் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கிறோம். உறவினர்களாக இருக்கின்றோம்.
அன்றிலிருந்து இன்றுவரை நாம் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். அதற்குரிய நல்ல உதாரணம்தான், தலதா மாளிகைக்கு அருகாமையில் முஸ்லிம்களின் பள்ளிவாசலொன்று நிர்மாணிக்கப்பட்டிருப்பது. இன்றுவரை எங்களுக்குள் பிரச்சினைகள் உருவாகவில்லை. நாங்கள் பௌத்த மதத்தை பின்பற்றினோம். அவர்கள் இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். முஸ்லிம்களுக்கு சிங்கள பௌத்தர்களால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
இன்று எங்களுக்குள் பிளவுகள் பூதாகரமாக மாறுதற்குரிய வழிவகைகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தேசிய ஒருமைப்பாட்டுக்கு பெரும் இடையூறாகும். அதனால், இவற்றைப் பற்றி தெரிந்து - தெளிந்து நடக்க வேண்டியது மிகவும் வேண்டத்தக்கது என முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கு நான் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment