குடியரசு தின கொண்டாட்டம்: காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் அணிவகுப்பு ஒத்திகை
குடியரசு தின கொண்டாட்டங்கள் நாளை மறுநாள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சி செய்யலாம் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.காஷ்மீர் மாநிலத்திலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தலைநகர் ஸ்ரீநகரில் கூடுதல் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டள்ளனர். குறிப்பாக நகரின் நுழைவு வாயில்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல இடங்களில் தடுப்புக் கட்டைகள் அமைத்து வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. அரசு சார்பில் குடியரசு தின விழா நடைபெறும் பாக்சி மைதானத்தைச் சுற்றியுள்ள சாலைகள், நேற்று இரவு முதலே சீல் வைக்கப்பட்டு, போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
சாலையோரத்தில் உள்ள பனிக்கட்டிகளில் தீவிரவாதிகள் வெடிகுணடுகளை மறைத்து வைக்க பயன்படுத்தக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவற்றை போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் அகற்றி வருகின்றனர். விழா நடைபெறும் இடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடும் நபர்களை ராணுவத்தினரும், போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.
இந்த பாதுகாப்புகளுக்கிடையில், பாக்சி மைதானத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. காவல்துறை, ரிசர்வ் போலீஸ் மற்றும் பள்ளி மாணவர்கள் நடத்திய அணிவகுப்பை கோட்ட ஆணையாளர் அஸ்கார் சமூன் பார்வையிட்டார்.
0 comments :
Post a Comment