கோப்பாய் பகுதியில் அடிகாயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு. கணவர் கைது.
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி வீட்டுக் கிணற்றிலிருந்து அடிகாயங்களுடன் இளம் தாயின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை நண்பகல் மீட்டுள்ளனர். ஒரு பிள்ளையின் தாயாரான கமலதீபன் கஜந்தினி (வயது 23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலத்தில் பலத்த அடிகாயங்கள் காணப்படுவதாகவும் இவரது மரணம் தொடர்பில் சந்தேகத்தில் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். தொண்டைமானாறு வல்லை வீதியோரமாகவுள்ள ஒற்றைப்பனையடி வயல் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (28) இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதில் கொத்தியகாடு கெருடாவில் தெற்கு தொண்டைமானாற்றைச் சேர்ந்த கிட்டினன் தவராசா (வயது - 50) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் கடந்த சனிக்கிழமை பி.ப. 6 மணியிலிருந்து காணாமல் போனதையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரைத் தேடிய நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
அதன் பின்னரும் தொடர்ந்து தேடிய நிலையில் வயல் கிணற்றிலிருந்து தொலைதூரத்தில் சைக்கிள் ஒன்று நிற்பதை அடுத்து உறவினர்கள் வயல் கிணறுகளில் தேடிப்பார்த்தபோதே குறித்த வயல் கிணற்றில் மேற்படி குடும்பஸ்தர் இறந்த நிலையில் சடலமாக கிடப்பது தெரியவந்தது.
இதனையடுத்து உறவினர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும் வல்வெட்டித்துறை மரண விசாரணை அதிகாரி சுசீந்திரசிங்கம் ஆகியோர் விசாரணையை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனையை டாக்டர் மயிலேறும்பெருமாள் மேற்கொண்டார்.
இதன் பின்னர் மரண விசாரணையின் போது குறித்த நபர் கடந்த 2 வருடங்களாக வேலை இல்லாமல் மனஉளைச்சலுடன் காணப்பட்டதாகவும் அத்துடன் இவருக்கு ஏற்கனவே நோயுள்ளதாகவும் இவர் கிணற்றில் விழுந்து மூச்சுத் திணறியே இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment