Monday, January 14, 2013

ஜனாதிபதியின் அதிகாரமும் அரசியல் யாப்பில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

ஜனாதிபதி என்ற உயர்பதவி வகிக்கும் எனது அதிகாரத்திற்கும் வரம்புகள் இருக்கின்றன. எனக்கு எதிராக பாராளுமன்றத்தில் குற்றப் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்து அதனை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் அதற்குப் பின்னர் பாராளு மன்றத்தை கலைத்துவிடும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்து பறிக்கப்படும்.

மக்களின் இறையாண்மையை பாது காப்பதற்காகவே அரசியல் சாசனத்தில் இவ்விதம் எழுதப்பட்டுள்ளது. இல்லையானால் ஒரு ஜனாதிபதிக்கு எதிராக பாரா ளுமன்றத்தில் குற்றப்பிரேரணையொன்று தாக்கல் செய்யப்பட்டால் பாராளுமன்றத்தை கலைத்துவிடுவதன் மூலம் ஜனாதிபதி ஒருவர் அந்தக் குற்றப்பிரேரணையைச் செயல் இழக்க செய்வதை தவிர்க்கும் முகமாகவே இந்த பாதுகாப்பு அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

நீதிபதி மகாநாம திலகரட்ணவிற்கு எதி ராக வழக்கொன்று தாக்கல் செய்யப் பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அந்த வழக்கு விசாரணை முடியும் வரை அவர் நீதி மன்றத்தில் உள்ள தன்னுடைய காரி யாலயத்திற்கு கூட வராமல் எந்த வழக்கையும் விசாரணை செய்யாமல் தமக்கு எதிரான வழக்கு முடியும் வரை அமைதியாக காத்திருந்தார். அவ்விதம் தான் நீதிமன்ற சுதந்திரத்தை எங்கள் நாட்டு நீதிபதிகள் கடந்த காலத்தில் பேணிப்பாதுகாத்தார்கள். ஆனால் இன்றைய பிரதம நீதியரசர் நீதிமன்ற சுதந்திரத்தை அவமதிப்பதனால் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து உச்சநீதிமன்றத்தின் புனிதத்துவத்திற்கு தீங்கிழைக்கிறார்.

பிரதம நீதியரசர் மீதான பாராளுமன்ற குற்றப்பிரேரணையை அரசியல்மயமாக்கி, அரசாங்கத்தின் மீது தாங்கள் கொண்டுள்ள ஆத்திரத்தை எல்.ரி.ரி.ஈயை ஆதரிக்கும் அரசசார்பற்ற அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதற்கு பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை தங்களின் பகடைக்காய்களாக பயன்படுத்தி வருகின்றன.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ, 2007ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்து, எல்.ரி.ரி.ஈக்கும் அதனை சார்ந்த அரசசார்பற்ற அமைப்புகளுக்கும் உறுதுணை புரிந்தார். இன்று அவர் இன்னுமொரு வேடத்தை அணிந்து அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொண்டு வருகிறார்.

உச்சமன்றின் வியாக்கியானத்தை பாராளுமன்றம் ஏற்கவேண்டுமென்றில்லை அமைச்சர் கெஹலிய

சீரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை முன்னெடுக்கப்பட்டது. ஆலோசனைகளை ஏற்க வேண்டுமென்றோ அல்லது முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றோ அரசியல் யாப்பிலோ அல்லது நிலையியற் கட்டளைகளிலோ குறிப்பிடப்படவில்லை.

கடந்த காலத்தில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களைப் போன்று ஏற்றுக்கொள்ளப்படாத சந்தர்ப்பங்களும் உள்ளன. பாராளுமன்றமே உயர்வானது என்பது தொடர்பில் தற்போதைய சபாநாயகர் மட்டுமன்றி முன்பிருந்த சபாநாயகர்களும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். சட்டங்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆலோசனை பெறப்படுகிறது. ஆனால் உச்ச நீதிமன்ற வியாக்கியானத்தை முழுமையாக ஏற்க வேண்டும் என யாப்பிலோ நிலையியற் கட்டளையிலோ கூறப்படவில்லை. விளக்கம் கோருவதில் மட்டுமன்றி வியாக்கியானம் வழங்குகையிலும் தமது வரையறைக்கப்பால் செல்லக்கூடாது.
பாராளுமன்றத்திற்கே மக்கள் ஆணை உள்ளது. தெரிவுக்குழுவின் அறிக்கை இதுவரை ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவில்லை. அந்த அறிக்கை ஜனாதிபதிக்கு கிடைத்த பின் அது குறித்து அவர் விளக்கம் பெறவும் சிக்கல்கள் எழும்போது தீர்க்கவும் என ஆலோசனை பெறவுமே துறையில் அனுபவமுள்ள குழுவொன்றை நியமிக்க உள்ளார். இது தெரிவுக்குழுவின் செயற்பாட்டை மீறிச் செல்லும் நடவடிக்கையல்ல.

பாராளுமன்ற விவகாரங்களை நீதிமன்று எவ்வாறு கட்டுப்படுத்துவது? பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி

பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கும் நீதிமன்றத்தின் சட்டங்களுக்குமிடையில் வித்தியாசம் இருக்கின்றன. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைப்பாணை விடுத்த போதே, பாராளுமன்ற விவகாரங்களில் மூன்றாந்தரப்பு தலையிடுவதற்கு எவ்வித சட்ட அதிகாரமும் இல்லையென ஆணித்தரமாக சபாநாயகர் தெரிவித்திருந்தார். முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்க கடைப்பிடித்து வந்த மேற்படி கொள்கையிலேயே தான் உறுதியாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இதேவேளை அரசியல் யாப்பின் நான்காவது ‘சி’ சரத்தில் பாராளுமன்ற விவகாரங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு வழங்கப்படவில்லையென்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பிரதம நீதியரசருக்கெதிரான குற்றப்பிரேரணை செயற்படுத்தப்படும் அதே முறைமைதான் இலங்கை அரசியலமைப்பிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்நாடுகளின் பாராளுமன்றத்தில் கூட இவ்வாறான சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்கள் தலையிட்டது கிடையாது. அத்துடன் பாராளுமன்றத்தை நீதிமன்றத்துக்கு வரவழைத்த சந்தர்ப்பங்கள் இல்லை.

பாராளுமன்ற விவகாரங்களில் தலையிடுவதற்கு நீதிமன்றத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென்பது எமது அரசியலமைப்பின் 4 சி சரத்து தெளிவாக குறிப்பிட்டிருப்பதனால் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் யாவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் எடுக்கப்பட்டுள்ளன.

மக்கள் ஆணை பாராளுமன்றத்துக்கே அமைச்சர் சுசில்

ஐக்கிய தேசியக் கட்சி அன்று தயாரித்த நிலையியற் கட்டளைக்கு அமையவே முன்னாள் பிரதம நீதியரசர் நெவில் சமகோனுக்கு எதிராக குற்றப் பிரேரணை விசாரணை முன்னெடுக்கப்பட்டது. அந்த முன்மாதிரிக்கு ஏற்பவே நிலையியற் கட்டளைக்கமைய தற்போதைய பிரதம நீதியரசருக்கு எதிராகவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இது நீதிமன்ற நடவடிக்கையன்றி ஒழுக்காற்று நடவடிக்கையே என்றும் அவர் குறிப்பிட்டார்.
குற்றப் பிரேரணை தொடர்பில் உச்ச நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது. அந்த வியாக்கியானத்தின் படி பிரதம நீதியரசருக்கு எதிராக விசாரணை நடத்த தெரிவுக் குழுவொன்றை நியமிக்க முடியாது.

முன்னாள் பிரதம நீதியரசர் நெவில் சமரகோனுக்கு எதிராக விசாரணை நடத்த 2 குழுக்கள் நியமிக் கப்பட்டன. அவர் கருத்து வெளியிட்டார் என்பது குறித்து ஆராய ஒரு குழு நியமிக்கப் பட்டது. குற்றப் பிரேரணை விசாரணைக்கு மற்றொரு குழு நியமிக்கப் பட்டது. 1978 ஆம் ஆண்டின் நிலையியற் கட்டளைப்படி ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதோடு விசாரணை நடவடிக்கைகளுக்காக உப சரத்துகள் சேர்க்கப்பட்டன. சட்டம் அல்லது நிலையியற் கட்டளையினூடாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அன்றிருந்த அரசு நிலையியற் கட்டளையின் அடிப்படையில் குற்றப் பிரேரணையை முன்னெடுத்தது.

அதன்படி சபாநாயகரினால் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டு குற்றப் பிரேரணை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனை முன்மாதிரியாகக் கொண்டே தற்போதைய பிரதம நீதியரசருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் அன்று பிரதம நீதியரசரோ, எதிர்க் கட்சியோ பாதியில் வெளியேறவில்லை. பாராளுமன்றம் தான் சட்டத்தை தயாரிக்கிறது. அதற்கே மக்கள் ஆணை உள்ளது.

நீதித்துறைக்கு பாராளுமன்ற அதிகாரத்தை மீற முடியாது! முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா

உச்ச நீதிமன்றம் தீர்மானங்களை எடுக்கும் போது இலங்கையின் அரசியல் சாசனத்தின் 107 (3) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை. அரசியல் சாசனத்தின் 107 (3) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையில் இவ்விதம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“பாராளுமன்றம் சட்டபூர்வமாக அல்லது நிலையியற் கட்டளைக்கு அமைய எவருக்கும் எதிரான குற்றப் பிரேரணை தொடர்பாக சகல ஏற்பாடு களும் செய்யப்படும்” என்று அரசியல் சாசனத்தில் 107 (3) ஆம் பிரிவில் வலியுறுத்தப்பட்டிருக்கிறதென்று திரு. சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

1984ம் ஆண்டில் பாராளுமன்றம் தனது நிலையியற் கட்டளைக்கு அமைய செயற்படுவதென்று தீர்மானித்து எந்தவொரு நீதிமன்றமும் பாராளுமன்றத்திற்கு இவ்விதம் தான் சட்டம் இயற்றப்பட வேண்டுமென்று பணிப்புரை விடுக்க முடியாது என்பதை வலியுறுத்துகிறது.

மக்களின் இறைமையை பெற்றிருக்கும் பாராளுமன்றத்திற்கு மாத்திரமே மக்களின் சட்டவாக்க அதிகாரத்தை பிரயோகிக்க முடியும் ஆயினும் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின் போது அவ்வதிகாரத்தை பிரயோகிக்க முடியும்.

நீதித்துறைக்கு பாராளுமன்ற அதிகாரத்தை மீற முடியாது. 1978ம் ஆண்டில் இலங்கையின் அரசியல் சாசனத்தின் அத்தியாயம் 125 (1)ல் உச்ச நீதிமன்றத்திற்கு அரசியல் சாசனத்திற்கு வியாக்கியானம் அளிக்கும் அதிகாரம் மாத்திரமே இருக்கிறதென்பது வலி யுறுத்தப்பட்டுள்ளது. எனவே, நிலையியற் கட்டளைக்கு ஏற்புடைய வகையில் பாராளுமன்றம் செயற்படுவது அதற்கான சிறப்புரிமை என்றும் சரத் என் சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு மாத்திரமே குற்றப்பிரேரணை ஒன்றை அறிமுகம் செய்து நிறைவேற்றும் அதிகாரம் இருக்கின்ற போதிலும் நீதிமன்றங்களும், தங்களுக்கே அந்த அதிகாரம் இருக்கிறது என்ற சர்ச்சையில் இன்று மூழ்கியுள்ளன. கடந்த காலத்தில் பிரதம நீதியரசர் ஒருவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றப்பிரேரணைகள் இத்தகைய சர்ச்சைகளை ஏற்படுத்தவில்லை. பாராளுமன்றமே அதனை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுத்தது.

முன்னர் ஒரு தடவை சபாநாயகர் பதவியில் வீற்றிருந்தவர் நிலையியற் கட்டளை 78(ஏ)யின் கீழ் அன்றைய முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே, உச்சநீதிமன்றம் அளித்த சட்டவியாக்கியானத்திற்கு அமைய மேல் முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடிப்படையாக வைத்து அதனடிப்படையில் அரசியல் சாசனத்தில் சில பிரிவுகளை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கின்றதென்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்தார்.

தெரிவுக்குழு விசாரணைகள் புத்தகமாக வெளிவந்துள்ளன, ஒளிவு மறைவில்லையென்கிறார் அமைச்சர் யாப்பா

குற்றப்பிரேரணை மீதான விசாரணைகள் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில், எவ்வித ஒளிவு மறைவுமின்றி திறந்த மனதுடன் நடத்தப்பட்டது தெரிவுக்குழுவின் விசாரணைகளின்போது எதிர்க்கட்சிகள் தமது கருத்துக்களையோ, யோசனைகளையோ எழுத்துமூலம் முன்வைக்கவில்லை. விசாரணைகளின்போது பொறுப்பற்ற வகையில் எழுந்து சென்ற எதிர்க்கட்சியினர் எவ்விதமான யோசனைகளையும் எழுத்துமூலம் முன்வைத்திருக்கவில்லை.

தெரிவுக்குழு விசாரணைகளில் எதிர்க்கட்சியினருக்கு அதிருப்தி இருந்திருந்தால் அவற்றை, அவர்கள் எழுத்துமூலம் எம்மிடம் சமர்ப்பித்திருக்க முடியும். எனினும் அவர்கள் அவ்வாறு எதனையும் சமர்ப்பிக்கவில்லை. எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் அவர்களுக்கு இருந்த பாரிய பொறுப்பிலிருந்து அவர்கள் விலகியுள்ளனர்.

பிரதம நீதியரசர் சட்டத்தரணிகளோடு தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நால்வரும் வெளியில் சென்றுவிட்டனர். அவர்கள் அவ்வாறு செய்யாது பொறுப்போடு நடந்திருந்தால் விசாரணைகளை எதுவித குழப்பமுமின்றி நடத்தியிருக்க முடியும். அதேநேரம், ஒருமாத காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கால எல்லைக்குள் ஜனவரி 6ஆம் திகதி அந்த அறிக்கையை சமர்ப்பித்திருக்கவும் முடியும்.
தெரிவுக்குழு விசாரணைகளின்போது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க அவமரியாதையாக நடத்தப்பட்டது என்பதில் எவ்விதமான உண்மைகளும் இல்லை. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் மற்றும் அமர்வுகளில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அனைத்தும் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்புரிமைகளை மீறிய நீதிபதிகளை பாராளுமன்றில் நிறுத்த வேண்டும் அமைச்சர் விமல் வீரவன்ஸ

பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்கு மாறாக தீர்ப்பு வழங்கிய, கட்டளைகள் பிறப்பித்த, கருத்து தெரிவித்த சகல நீதிபதிகளுக்கும் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் பெயரில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊடகவியலாளர் பொதுவாக பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் குறைபாடுகளை தேடிப்பிடித்து தங்கள் ஊடகங்களில் கண்டனம் தெரிவித்து எழுதி வருகின்றனர். அவர்களில் ஒருவரும் நீதித்துறையில் உள்ள குற்றம் குறைபாடுகளை சுட்டிக்காட்டி கண்டிப்பதற்கு முன்வருவதில்லை.

இதனால் நீதித்துறையில் உள்ள குற்றம் குறைகளை பகிரங்கப்படுத்தும் பொறுப்பை தாம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தன்னை 100 நீதிமன்றங்கள் தண்டித்தாலும் 1000 சிறைகளில் பூட்டி வைத்தாலும் நீதித்துறையில் உள்ள பலவீனங்களை எடுத்துக்காட்ட தாம் அஞ்சப்போவதில்லை என்றும் கூறினார்.

தான் தொடர்ந்தும் நீதித்துறையில் உள்ள பலவீனங்கள், மோசடிகள் பற்றி பகிரங்கப்படுத்த தயக்கம் காட்டப் போவதில்லை. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்கவுக்கு பின்னணியில் இருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஜே.வி.பியினரும் ஆதரவளித்து வருகிறார்கள்.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை மீதான பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமான காலகட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம நீதியரசரை கண்டித்து கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பணிப்புரை விடுத்திருந்தார். இந்த குற்றப்பிரேரணைகளில் பிரதம நீதியரசர் குற்றவாளி அல்ல என்று தீர்மானிக்கும் பட்சத்தில் அவர் தொடர்ந்தும் பிரதம நீதியரசராக பணியாற்று வதற்கு நாம் இடமளிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய கண்டிப்பான உத்தரவுகளை பாராளுமன்ற உறுப்பினர்க ளுக்கு ஜனாதிபதி விதித்திருந்தார்.

ஆயினும் பிரதம நீதியரசரை சார்ந்தவர்களே அநாவசியமான அறிக்கைகளையும், கருத்துக்களையும் பகிரங்கமாக அறிவித்து அமைதியாக நடைபெறவிருந்த இந்த விசாரணையை குழப்பி அடித்து, பெரும் பிரச்சினையை உருவாக்கி ஜனாதிபதியின் இந்த நல் எண்ணத்துக்கு மாறாக செயற்பட்டிருக்கிறார்கள்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்து அது பற்றிய தங்கள் நிலைப்பாட்டை சபாநாயகர் மூலம் ஜனாதிபதி அவர்களுக்கே வழங்க இருந்தார்கள். இது பற்றி இறுதி தீர் மானம் எடுக்கும் பொறுப்பு ஜனாதிபதியின் கையிலேயே இருக்கின்றது. இந்த உண்மை நிலையை கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் நீதிமன்றங்கள் இருப்பது உண்மையிலேயே வேதனை அளிக்கிறது.

குற்றமிழைத்த ஒருவர் தொடர்ந்தும் பதவியில் இருப்பதா? முறையற்ற செயல் என்கிறார் ராஜித

அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையிலேயே தெரிவுக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்றன. முறையற்ற ரீதியில் விசாரணைகள் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமையவே விசாரணைகள் நடத்தப்பட்டன. 28 வருடங்கள் பழமைவாய்ந்த முறைக்கு அமையவே விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த முறையில் பிழை இருக்குமாயின் பிரதம நீதியரசர் என்ற வகையில் இதனை மாற்றுவதற்கு ஏன் ஷிராணி பண்டாரநாயக்க முன்னர் முயற்சிக்கவில்லை. தனக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வரப்பட்ட பின்னர் விசாரணை முறை பிழையெனக் கூறுவது அவருக்கே ஒரு வெட்கமான விடயம்.

குற்றமிழைத்த ஒருவர் தொடர்ந்தும் பதவியில் இருந்துகொண்டு வழக்குகளை விசாரிப்பதைத் தடைசெய்யும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணை குறித்த விடயங்களை அரசியலமைப்பில் உள்ளடக்கியுள்ளார். அரசியலமைப்புக்கு அமைய பிரதம நீதியரசர் ஒருவருக்கு எதிரான குற்றப் பிரேரணை ஒரு மாதத்துக்குள் விசாரிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கமையவே நாம் விசாரணைகளை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம்.

மக்களின் இறைமைய மீற இடமளிக்க முடியாது! அமைச்சர் டிலான்

பல்வேறு குற்றங்களைப் புரிந்திருக்கும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கா விட்டால் பாராளுமன்றத்துக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கிய இறைமையை மீறும் செயலாக அது அமைந்துவிடும்.
பாராளுமன்ற உறுப்பினர்களை மக்களே தெரிவுசெய்து அனுப்பியுள் ளனர். அதனை நாம் பாதுகாக்க வேண்டும். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு எதிரான பாராளுமன்றத் தெரிவுக் குழுவால் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன் பின்னரும் அவர் குற்றமிழை இக்கவில்லையென சில தரப்பினர் கூறி வருகின்றனர். அவ்வாறு கூறுபவர்கள், தெரிவுக்குழுவின் அறிக்கை மற்றும் சாட்சியளங்களை அடிப்படையாக வைத்து அவர் எவ்வாறு நிரபராதி என்பதை நிரூபித்துக் காட்டட்டும்.

No comments:

Post a Comment