Friday, January 4, 2013

கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பில் விசாரணை செய்ய ஆணைக்குழு.

முழிபிதுங்குகிறார் இரா துரைரெட்ணம்.

கிழக்கில் காணி அபகரிப்பு பல தசாப்தங்களாக இடம்பெற்று வருகின்றது. இவ்வாறன அபகரிப்புக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு ஒன்றினை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாணைக்குழுவானது 1960 களிலிருந்து அரச காணிகள் எவ்வாறு சூறையாடப்பட்டன என்பது தொடர்பில் துல்லியமான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.

கிழக்கின் எல்லைப்புறங்களில் தமிழருக்கு சொந்தமான நிலங்கள் பெரும்பாண்மையினரால் திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளன என்பது தமிழர் தரப்பு அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டு. ஆனால் இதே தமிழ் அரசியல்வாதிகளும் , அரச அதிகாரிகளும் இணைந்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் காணப்பட்ட அரச காணிகளை சூறையாடினர் என்பது பலரும் பேச மறுக்கும் விடயம்.

சட்டத்திலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அரச காணிகளை தமது உறவினர்கள் பெயர்களிலும் சொந்தப்பெயர்களிலும் பெற்றுக்கொண்டுள்ளனர். 1960 களிலிருந்து விசாரணைகள் ஆரம்பமாகும்போது அதிகாரிகள் சேவையிலிருக்கும்போது, தமது உறவினர்களின் பெயர்களில் பெற்றுக்கொண்ட காணிகளை ஓய்வு பெற்ற பின்னர் தமது பெயர்களில் மாற்றிக்கொண்ட மற்றும் விலை கொடுத்து வாங்குவதுபோல் பாசாங்கு செய்து உறுதிகளை மாற்றிக்கொண்ட சம்பவங்கள் வெளிச்சத்திற்குவரும் என நம்பப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்போது குறிப்பிட்ட நபர்களில் வருமானம் தொடர்பிலும் விசாரகளை மேற்கொள்ளப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரதித் தலைவர் இரா துரைரெட்ணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச படைகளுடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் பிரதேசத்தில் காணப்பட்ட அரச காணிகள் பலவற்றை சூறையாடியுள்ளதாக தெரியவருகின்றது. இவர் படைகளுடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தபோது தனது சகாக்களுக்கு சிறு துண்டுக்காணிகளையும் தனக்கு பெரும்தொகையான காணிகளை மட்டக்களப்பு கச்சேரியில் காணி அலுவலராக இருந்த ஒருவரின் ஒத்தாசையுடன் மோசடி செய்துள்ளார். இவ்வாறு துரைரெட்ணத்துடன் இணைந்து காணிகளை அபகரித்த முன்னாள் ஆயுததாரிகள் புலம்பெயர் நாடுகளுக்கு சென்று அங்கிருந்துகொண்டு குறித்த காணிகளில் பாரிய கட்டிடங்களை அமைத்துள்ளதுடன் அவற்றில் சில சமூக சீர்கேடுகளை தூண்டுகின்ற சட்டவிரோ விடுதிகளாகவும், மதுபாணச்சாலைகளாகவும் இயங்குவது மக்களை விசனமடையச் செய்துள்ளது.

துரைரெட்டணம் வரிசையில் கருணா , பிள்ளையானின் சகாக்களும் இவ்வாறு அரச காணிகளை ஆக்கிரமித்துள்ளனர். கல்லடி மற்றும் அண்டிய பிரதேசங்களில் பிள்ளையானின் சகாவான பூ. பிரசாந்தன் சில காணிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும் இவ்வாக்கிரமிப்பால் மட்டு மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களுடன் முறுகல்கள் ஏற்படுவதாகவும் அறியக்கிடைக்கின்றது.

இதேநேரம் பிள்ளையானின் சகாவான பிரதீப் மாஸ்ரர் என அறியப்படுபவர் படுவான்கரைப் பிரதேசதேசத்திலுள்ள வறிய மக்கள் பலரது வயல்காணிகளை மிரட்டிப்பறித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. புலிகளால் பலாத்காரமாக பறிக்கப்பட்டு வயல்செய்கை பண்ணப்பட்டு வந்த காணிகளை புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னர் , காணிகளுக்கான உரிமையாளர்களை இனம்கண்டு பறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணிகளை பறிகொடுத்தவர்கள் இவ்வாணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்கும்போது முறையிட்டு நிதிபெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com