குனூத் அந்-நாஸிலா ஓதுமாறு முஸ்லீம்களிடம் , அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா கோரிக்கை
முஸ்லிம்களுக்கு எதிராக பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நீங்க வேண்டி குனூத் அந்-நாஸிலா எனப்படும் பிரச்சினைகள் நேரும் போது ஓதப்படும் குனூத்தை சகல தொழுகைகளிலும் ஓதுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம்களை கேட்டுள்ளது.அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'அண்மைக்காலமாக நாட்டின் பல பாகங்களிலும் நிகழ்ந்து வருகின்ற இனத்துவேச வெளிப்பாடுகளை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அவதானித்து வருகின்றது.
பல இடங்களில் முஸ்லிம் வியாபார நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள், துண்டுப் பிரசுர விநியோகங்கள் ஆகியன மிகுந்த வேதனையைத் தருகின்றது.
தொடராக நடைபெற்று வரும் இத்தகைய செயல்கள் மூலம் முஸ்லிம் சமூகத்தை, விஷேடமாக முஸ்லிம் இளைஞர்களை தூண்டி இனக் கலவரமொன்றில் ஈடுபட சில சக்திகள் முயன்று கொண்டிருக்கின்றனர் என்பதை சகலரும் அவதானித்திருப்பீர்கள்.
மிக அண்மையில் வெளியாகத் தொடங்கியுள்ள இணையத்தள செய்திகளும் பத்திரிகையாளர் மாநாடுகளும் எதிர்ப்பு ஆர்பாட்டங்களும் அத்தீய சக்திகளின் எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்விடம் முறையிடுவதும் அதிகம் அதிகம் இஸ்திஃபார் செய்வதும் நிதானம் இழந்து விடாமல் நடந்து கொள்வதுமே எமது கடமையாகும்.
'யார் அதிகமாக இஸ்திஃபாரில் ஈடுபடுவாரோ அவரது எல்லாக் கவலைகளையும் அல்லாஹ் போக்கி சகல கஷ்டங்களையும் நீக்குவான். மேலும் அவன் எதிர்பாரா வழியில் ஆகாரத்தையும் அழிப்பான் (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரழியல்லா{ஹ அன்{ஹ ஆதாரம் அபூ தாவூத்)'
ஆதலால் மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைகள் அகலவும் பாதுகாப்பு வேண்டியும் குனூத் அந்-நாஸிலா எனப்படும் (பிரச்சினைகள் நேரும் போது ஓதப்படும்) குனூத்தை சகல தொழுகைகளிலும் ஓதி வருமாரு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.
இந்நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்கள் அமைதியாகவும் புரிந்துணர்வோடும் அந்நியோன்யமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் துவேச உணர்வு கொண்ட ஒரு சிறு குழுவினரின் சூழ்ச்சியில் மாட்டிக்கொள்ளாதிருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் துணை புரிவானாக' என்றார்.
0 comments :
Post a Comment