இலங்கையின் தலைமை நீதியரசர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என, இலங்கை அரசியல் சாசனத்துக்கு நாட்டின் உச்சநீதிமன்றம் வழங்கிய விளக்கத்தின் மூலமாக, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க தொடுத்த இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது.
நீதி பரிபாலனை அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பினால் மட்டுமே நீதிபதி எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும் என்று விளக்கமளித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வழிமுறை பின்பற்றப்படவில்லை என்றால் நாட்டுடைய மொத்த நீதித்துறையின் அதிகாரத்துக்குமே பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
நிர்வாக உத்தரவு ஒன்றின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவே தலைமை நீதிபதியை விசாரித்துள்ளது என்றும், நிர்வாக உத்தரவு என்பது சட்டம் ஆகாது என்ற சூழலில், தலைமை நீதிபதியை விசாரித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு நீதி பரிபாலனை அதிகாரங்கள் இல்லை என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீது பல்வேறு முறைகேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர் மீது கண்டன பதவி நீக்க நடைமுறை ஒன்றை அரசாங்கம் கொண்டுவந்திருந்தது.
இந்த குற்றச்சாட்டுகளை விசாரித்த பெரும்பாலும் ஆளுங்கூட்டணி உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, நீதிபதிக்கெதிராக ஒரு சில குற்றச்சாட்டுகளை உறுதிசெய்திருந்தது.
ஆனால் தெரிவுக்குழுவின் விசாரணையும் முடிவும் நீதித்துறைக்கெதிரான அச்சுறுத்தல் என்ற விமர்சனங்கள் இருந்துவருகின்றன.
நன்றி பிபிசி
No comments:
Post a Comment