Monday, January 7, 2013

எதிர்த்து சாதிக்க முடியுமா தமிழ் தலையால்!

அரசாங்கம் வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்டமூலத்தை நிறைவேற்ற விடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளிடமும் கேட்டுள்ளது. குறிப்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற அரசில் பங்கு வகிக்கும் சிறுபான்மையினர் கட்சிகள் தங்களோடு சேர்ந்துகொண்டு இந்தச் சட்ட மூலத்தை எதிர்க்க வேண்டும் என்று அது கேட்டுள்ளது.

அந்தச் சட்டமூலத்தால் காப்பாற்றப்படப் போகும் வடக்கைச் சேர்ந்த 55,000 குடும்பங்களினது நன்மைக்காகவும், இந்தச் சட்ட மூலத்தை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு இணைந்து முன்வரவேண்டும் என்று அந்தக் கட்சிகள் கேட்டுக்கொண்டால் இவர்கள் வருவார்களா என்பது ஒருபுறமிருக்கட்டும். இதையும் எதிர்த்து தமிழரசுக் கட்சியினர் தமிழ்மக்களுக்குச் சாதிக்கப் போவது எதை என்றாவது அவர்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

இந்த நாட்டில் அரசாங்கங்கள் கொண்டுவரும் எல்லாத் திட்டங்களையும் எதிர்ப்பதும் எரிப்பதும் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்ந்து இயங்கிவந்த இந்தத் தமிழரசுக் கட்சியினர் தமிழ் மக்களுக்கு எதைத்தான் கிடைக்கச் செய்தார்கள் என்பதை நாம் வரலாற்றில் பார்த்துவிட்டோம். இப்போதும் வடமாகாண மக்களுக்குக் கிடைக்கவிருக்கும் சமுர்த்தி உதவிகளையும் நிப்பாட்டி விடும் உணர்ச்சிகர அடுக்குகளையே எடுத்து வருகிறார்கள்.

இவர்கள் உணர்ச்சிகர ஆவேசங்களால் மக்களைத் திசை திருப்பிவிட்டு, தென்னிலங்கை எதிர்க்கட்சிகளோடு இணைந்து கொண்டு எல்லாவற்றையும் எதிர்த்துக் குழப்புவதும், பின்னர் காலங்கடந்த பிறகு அதையே திரும்பக் கொண்டுவருவதற்கு அரசாங்கத்துடன் சண்டைபிடிப்பதுமான நாடகத்தை அறுபது வருட காலமாக எல்லோரும் பார்த்துவிட்டோம். இப்போது வாழ்வின் எழுச்சித் திட்டத்தாலும் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைத்துவிட வேண்டாம் என்றே நினைக்கிறார்கள்.

13வது திருத்தத்தை முழுமையாகக் காப்பாற்றிக்கொள்ள இவர்கள் தெரிவுக்குழுவுக்குப் போய் நமக்குத் தேவையான அதிகாரங்களை உரிமைகளைச் சொல்லி ஏனைய கட்சிகளையும் அதற்கு ஆதரவாகச் சேர்த்துகொண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம், சிறுபான்மைக் கட்சிகளுடனாவது கூடிப்பேசி, சமுர்த்தி அதிகாரங்களை மத்தி எடுத்துக்கொள்ளுமானால், மாகாணத்திற்கு இவையிவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று சேர்ந்தொன்றாய் அரசை வலியுறுத்துவதற்கு நடவடிக்கை மேற் கொண்டிருக்க வேண்டும்.

யதார்த்தம் எதுவோ அதைப் பேசி நடக்கக் கூடிய திட்டத்திற்கு ஆதரவு தேடுவதை விட்டுவிட்டு, எல்லாவற்றையும் சும்மா எதிர்த்துக் கொண்டிருக்கலாம் வாருங்கள் என்றால் யார்தான் வருவார்கள்? இதுகால வரலாற்றைத் தெரிந்த-அரசியல் தெரிந்த எவரும் தமிழரசுக் கட்சியினரின் குருட்டுத்தனமான எதிர்ப்பரசியலுக்குத் துணைபோவது, மேலும் மேலும் எமது மக்களைத் தற்கொலைப் பாதைக்குத் தள்ளுவதாயே இருக்கும் என்றே தள்ளி விலகுவார்கள்.

தன் தோல்வியிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள மறுக்கும் சமூகம் முன்னோக்கி நகராது என்பது உண்மை. இவ்வளவு கால எதிர்ப்பு அரசியலும் எரிப்பு அரசியலும் கொண்டுவந்த விளைவுகளை அலசிப்பார்க்கும் எவருக்கும் இவர்கள் தமிழ் சமூகத்தை எவ்வளவுதூரம் பின்னடைய வைத்திருக்கிறார்கள் என்பது விளங்காமலிருக்காது. இந்த உண்மையையும் விளங்காதது போல நடித்துக் கொண்டிருக்கும் தலைவர்களின் போக்கும், சாதாரண மக்களைக் கணக்கிலெடுக்காத சமூக மேல்தட்டினரின் தற்திருப்தி அரசியலும் நிச்சயம் தீவிர கவலைக்குரியதுதான்.

1 comments :

Anonymous ,  January 7, 2013 at 10:53 AM  

This is what they were doing for long long time.The pretend that they are alert and active on behalf of the tamils,but history repeats that they haven't achieved even a speck in their political history.Our experiences always remind us not to go behind the bogus.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com