பெண்களை கற்பழித்த காமக்கொடூரனுக்கு ஆண்மை நீக்க முதல் தீர்ப்பு
டெல்லியில் கடந்த 16-ம் தேதி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி மரணம் அடைந்தார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் கற்பழிப்பு சம்பவங்களைத் தடுக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு ரசாயன ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அத்தகைய அதிரடி தீர்ப்பை தென்கொரிய கோர்ட் நேற்று(03.01.2013)வழங்கியிருக்கிறது.
தென் கொரியாவில் பியோ என்ற குடும்ப பெயர் கொண்ட 31 வயது ஆசாமி, ஸ்மார்ட்போன் சாட்டிங் மூலம் அறிமுகமான 5 சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்துள்ளார். பின்னர் அந்த சிறுமிகளுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோ காட்சிகளை வெளியிட்டுவிடுவதாகவும், வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டி, நவம்பர் 2011 முதல் மே 2012 வரையிலான காலகட்டத்தில் தொடர்ந்து பலமுறை கற்பழித்திருக்கிறார்.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட பியோ மீது சியோல் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி கிம் கி-யங் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், ‘பியோ பல பெண்களை கற்பழித்துள்ளார். எனவே அவராகவே இந்த பாலியல் ஆசையைத் துறந்து திருந்துவார் என்பது சாத்தியமில்லை.
எனவே, அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனையும், ரசாயன ஆண்மை நீக்கம் செய்யவும் உத்தரவிடப்படுகிறது. சிறையில் இருந்து விடுதலையான பிறகு அவர் 20 ஆண்டுகள் மின்னணு கண்காணிப்பு கொலுசு அணிந்திருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். தென் கொரியாவில் குழந்தைகளை கற்பழிக்கும் குற்றத்திற்கு ஆண்மை நீக்கம் செய்யலாம் என்ற சட்டம் கடந்த 2011-ம் ஆண்டுதான் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment