Saturday, January 19, 2013

இனிமேலும் மௌனம் காப்பதா?

காத்தான்குடி நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தின் குப்பைகளை முகாமைத்துவம் செய்வதில் நகர சபை தொடர்சியாக தவறிழைத்து வருவதாகவும் இச்செயற்பாடானது தொடர்ந்தும் சகிக்க முடியாதது எனவும் தெரிவித்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் துண்டுபிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துண்டுப் பிரசுரம் கீழே.
அன்புப் பொதுமக்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.

காத்தான்குடிப் பிரதேசத்தில் அன்றாடம் சேருகின்ற குப்பைகளை சேகரித்து முகாமை செய்து முறையாக அகற்றுவதும் நமது பிரதேசத்தின் சுகாதார சூழலை உத்தரவாதப்படுத்துவதும் காத்தான்குடி நகர சபையின் அடிப்படைக் கடமை என்பது நம் எல்லோருக்கம் தெரியும். அது போலவே நமது மக்களுக்கு கிடைக்கும் ஆடு மற்றும் மாட்டிறைச்சி என்பன சுகாதார உத்தரவாதம் கொண்டது என்பதை உறுதி செய்வதும் அதற்கேற்ற வகையில் சுகாதாரமான முறையில் மடுவ வசதிகளை வழங்க வேண்டியுதும் நகர சபையின் மற்றுமொரு அடிப்படைக் கடமையாகும். இந்த இரண்டு அடிப்படைக் கடமைகளையும் கூட முறையாக நிறைவேற்றத் தெரியாமல் நகர சபை நிருவாகம் மிக நீண்ட காலமாக திண்டாடி வருவதை நாம் எல்லோரும் பொறுமையுடன் அவதானித்து வருகிறோம்.

வீடுகளில் இருந்து நாளாந்தம் குப்பை அகற்றப்படுவதானது சில காலம் செய்யப்படுகின்றது; சில காலங்களில் திடீரென நிறுத்தப்பட்டு விடுகின்றது. சேருகின்ற குப்பைகள் சுகாதாரமான முறையில் கையாளப்படாமல் காலத்திற்கு காலம் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் மாறி மாறி எவ்வித திட்டங்களுமின்றி கொட்டப்படுகின்றது. இந்த நடவடிக்கை ஏற்கனவே நமது மக்களின் சுகாதார நலன்களுக்கு ஆபத்தாக மாறியிருக்கின்றது. அது போலவே மாடறுக்கும் மடுவம் நீதி மன்ற உத்தரவின் பேரில் இழுத்து மூடப்பட்டு பல மாதங்களாகின்றன. முறையான, விஞ்ஞான பூர்வமான தீர்வுத் திட்டங்களை இதுவரை மக்கள் முன் வைக்க முடியாத நகர சபை நிர்வாகம் ஆங்காங்கு கட்டப்படும் கட்டடங்களை இதற்கான தீர்வெனக் காட்டி காலம் கடத்தி வருகின்றது.

குப்பை பிரச்சினைக்கான இறுதி நிரந்தரத் தீர்வு தம்மிடம் இருப்பதாகவும் அதற்கான காணித் துண்டொன்று அவசியப்படுவதாகவும் இதனைக் கொள்வனவு செய்து தந்தால் உடனடியாக இப்பிரச்சினை தீர்க்கப்படும் எனவும் நகர சபை நிருவாகம் பல மாதங்களுக்கு முன்னர் கூறியது. வேறு வழியின்றி இதனை நம்பிய நமது சமூக நிறுவனங்களும் நமது மக்களுமாக இணைந்து காணி ஒன்றை கொள்வனவு செய்து கொடுத்தனர். இதற்காக நமது பிரதேசத்தில் இருக்கின்ற ஒவ்வொரு குடும்பமும் பல சிரமங்களுக்கு மத்தியில் நிதிப்பங்களிப்புகளைச் செய்தனர். நமது பிரதேசத்தில் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்கின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களில் இருந்தும் கூட இந்த நிதி வழங்கப்பட்டதனை நாம் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தோடு தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பியிருந்த மக்களுக்கு நகர சபை நிருவாகம் புதிய கதை சொல்லத் தொடங்கியிருக்கிறது.

காணியைப் பெற்றுக் கொடுத்த பின்னரும் கூட குப்பைகளை அகற்றுவதை நகர சபையினால் தொடராக கிரமமாக செய்ய முடியவில்லை. இப்போது நமது பிரதேச குப்பைகளை வேறு எங்கோ தூர பிரதேசங்களுக்கு கொண்டு சென்று கொட்டுவதே தீர்வு என்றும் அதற்காக இன்னும் இன்னும் மக்கள் தொடர்ச்சியாக பணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவுகளை நமது மக்களின் தலையில் நகர சபை நிருவாகம் திணித்திருக்கின்றது. தமது அடிப்படை தேவைகளைக் கூட நிறைவு செய்ய போராட வேண்டிய நிலையில் இருக்கின்ற மக்களின் தலையில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட நிதிக்கு மேலாக வருடாந்தம் ரூபாய் 600 என்கின்ற குப்பை வரியை இப்போது நகர சபை நிருவாகம் பலாத்காரமாக திணிக்கத்தொடங்கியிருக்கின்றது. இவ்வாறான எந்தவொரு மேலதிக வரியையும் அறவிடுவதென்ற தீர்மானங்கள் எதுவும் நகர சபை பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட வில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னுமொரு விடயமாகும்.

இந்த சூழ்நிலையில் மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.
எந்தவொரு உள்ளுராட்சி மன்றமும்; மக்களுக்கான தமது அடிப்படைக் கடமைகளைச் செய்வதற்காகவே வருடாந்த வீட்டு வரிகளை வசூலிக்கின்றன. இந்நிலையில் குப்பை அகற்றுதல் என்ற அடிப்படைக் கடமையை செய்வதற்காக மக்கள் மீது மேலதிக வரிகளை சுமத்த முடியுமா?

நகர சபைத் தீர்மானங்கள் எதுவுமின்றி இவ்வாறு வரி வசூலிக்கின்ற நடவடிக்கையானது சட்ட பூர்வமானதா? இதனை மக்கள் செலுத்தத்தான் வேண்டுமா?

இந்த நகரத்தை சுத்தமாக நிருவாகம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்திற்காகவே மக்கள் வாக்களித்தார்கள். அந்த அடிப்படை கடமையினை நிறைவேற்ற முடியாத நகர சபை நிருவாகம் தொடர்ந்தும் பதவியில் இருப்பது மக்கள் ஆணைக்கு முரணானதல்லவா?
காணித் துண்டொன்று வாங்கித்தரப்பட்டால் குப்பைப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படும் என்ற வாக்குறுதி எமது உலமா சபைக்கும் எமது சம்மேளனத்திற்கும் எமது மக்களுக்கும் வழங்கப்பட்டது. அந்த வாக்குறுதி என்னானது? அப்படியென்றால் எமது உலமாக்களையும் எமது சம்மேளனத்தையும் எமது மக்களையும் நகர சபை நிருவாகம் வேண்டுமென்றே திட்டமிட்டு ஏமாற்றியுள்ளதா?

சன நெரிசல் மிக்க நமது நகரின் குப்பைப் பிரச்சினைக்கான நேரடித் தீர்வு நமது குப்பைகளை முகாமை செய்வதற்கு பொருத்தமான அரச காணியொன்றை நமது ஊருக்கு அண்மையில் எங்காவது பெற்றுக் கொள்வதுதான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இம்மாவட்டத்தில் ஏனைய மக்களின் பொதுத் தேவைகளுக்காக அரச காணிகள் வழங்கப்படுகின்ற போது நமக்கு மட்டும் ஏன் இதுவரை வழங்கப்படவில்லை? இதற்காக குரல் கொடுத்து பெற்றுத்தர வேண்டியது யாருடைய கடமை? நமது மக்களின் வாக்குகளைப் பெற்று இன்று அரசாங்கத்தின் பங்காளிகளாகவும் பிரதியமைச்சராகவும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராகவும் இருப்பவர்களால் ஒரு அரை ஏக்கர் அரச காணியையாவது பெற்றுக் கொடுக்க முடியாமல் போனது ஏன்?

அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமல் ஒழித்துக் கொள்கின்ற போது அவர்களின் கையாலாகாத தனத்தை மூடி மறைப்பதற்காக எமது மக்கள் தொடர்ந்தும் நிதிப் பங்களிப்புச் செய்து கொண்டே இருக்க வேண்டுமா?

இப்படியே காலமெல்லாம் நமது கற்றறிந்த உலமாக்களையும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களையும் நம்பி வாக்களித்த மக்களையும் இவர்கள் ஏமாற்றிக் கொண்டு தமது அடிப்படைக் கடமைகளைச் செய்யாமல் காலம் கடத்துவதனை இனிமேலும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

நமது தொடர் மௌனமும் பொடுபோக்கும்தான் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு காரணமென்றால் அந்த குற்றத்தில் நாமும் பங்காளிகள் அல்லவா?

எனவே, இனிமேலாவது நமது மௌனத்தைக் கலைக்க வேண்டும். நமக்கான கடமைகளை உரியவர்கள் செய்ய தவறும்போது அதற்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும். நமது உரிமைகள் மறுக்கப்படும் போது அதனைப் பெற்றுக் கொள்வதற்காக உழைப்பதும் போராடுவதும் நமது மார்க்க கடமை என்பதை நாம் ஒரு போதும் மறந்துவிட கூடாது.

எனவே, மதிப்பிற்குரிய உலமாக்களே, சமுக நிறுவனங்களே, சமுக தலைவர்களே, இளைஞர்களே, சகோதர சகோதரிகளே!

நமது நகரின் குப்பைப் பிரச்சினை உள்ளிட்ட சகல சுகாதார பிரச்சினைகளும் பொருத்தமான முறையில் நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை எல்லா வழிகளிலும் உரியவர்களுக்கு ஏற்படுத்துவோம். அதிகாரம் கொண்டோரால் தொடர்ந்தும் நமது மக்கள் சுரண்டப்படுவதற்கும் ஏமாற்றப்படுவதற்கும் முற்றுப் புள்ளி வைப்போம். இதற்காக நாம் எல்லோரும் ஒன்று திரளுவோம். எனவே, இந்த விடயத்தில் சட்டபூர்வமான ஜனநாயக வழியில் அமைந்த எமது எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் உரத்துச் சொல்வதற்கு எல்லோரும் முன்வர வேண்டும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அழைப்பு விடுக்கின்றது. இவ்விடயம் தொடர்பாக இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக நமது சம்மேளனம், நகரசபைத் தவிசாளர் மற்றும் ஏனைய நகரசபை உறுப்பினர்களையும் எதிர்வரும் 20.01.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சந்திப்பெதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது மக்களுக்குச் சுமையில்லாத பொருத்தமான தீர்வொன்று காணப்படாத பட்சத்தில் மக்கள் சார்பாக தொடர்ச்சியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதென சூறாசபை தீர்மானித்துள்ளது. எனவே, பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பில் அடுத்து என்ன நடக்கவிருக்கின்றது என்பது பற்றி விழிப்புடன் அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வண்ணம
சூறா சபை
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்
17.01.2013.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com