மீண்டும் இங்கிலாந்திடம் வாங்கி கட்டியது இந்திய அணி- தொடரும் சோகம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் விளையாடி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்து 5 ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வந்துள்ளது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக இயான்பெல், கேப்டன் குக் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்குமார் வீசினார்.
அந்த ஓவரில் பெல், குக் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்தனர். அடுத்த ஓவரை இசாந்த் சர்மா வீசினார். இந்த ஓவரில் பெல் முதல் பவுண்டரி அடித்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர்.
பெல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க இந்திய பவுலர்கள் திணறி வந்தனர். பெல் 85 ரன்னில் இருக்கும் எதிர் பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.
அடுத்து வந்த பீட்டர்சன், கேப்டன் குக்குடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். கூக் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். ரெய்னா வீசிய 32- வது ஓவரில் கேப்டன் குக் (75) ரன் இருக்கும் போது ரகானேயிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்ததாத வந்த மோர்கன் அதிரடியாக விளையாடி 41 ரன்னில் தின்டா பந்து வீச்சில் கேட்சானார். அப்பொழுது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 248 ரன்னாக இருந்தது. அதன் பின் வந்த கிஸ்வெட்டர், பீட்டர்சனுடன் இணைந்து விளையாடினார்.
பீட்டர்சன் 44 ரன் இருக்கும் போது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் வந்த பட்டேல், கிஸ்வெட்டருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டை இழந்து 325 ரன்கள் குவித்தது.
பட்டேல் 44 ரன்னுடனும், கிஸ்வெட்டர் 24 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய பந்து வீச்சாளர்கள் தரப்பில் திண்டா 2 விக்கெட்டும், ரெய்னா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய காம்பீரும், ரகானேவும் சிற்பாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இந்தியா அணி 16.4 ஓவரில் 96 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. ரகானே 47 ரன்களில் டிரெட்வெல் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து கோலி களம் இறங்கினார். காம்பீர் 48 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் டிரெட்வெல் பந்தில் ஆட்டம் இழந்தார் காம்பீர்.
அடுத்து கோலியுடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். யுவராஜ் களம் இறங்கிய முதலே அடித்து விளையாடினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 15 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து யுவராஜ் சிங் உடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும் அருமையாக விளையாடினார்கள். இதனால் இந்தியா வெற்றியை நோக்கி பயணித்தது. ஆனால் அரை சதம் அடித்த யுவராஜ் சிங் 61 ரன்களிலும், ரெய்னா 50 ரன்களிலும் ஆட்டம் இழந்தார். அதன்பின் ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியது.
அதன்பின் வந்த டோனி 32 ரன்களில் ஆட்டம் இழந்தார். அத்துடன் இங்கிலாந்து வெற்றி உறுதியானது. ஜடேஜா (7), அஸ்வின் (13), டின்டா (3) ரன்களில் ஆட்டம் இழக்க இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து 9 ரன்களில் வெற்றி பெற்றது.
0 comments :
Post a Comment