கிராமங்களுக்கு அதிகாரம் வழங்க மீண்டும் ‘கிராம சபை முறை’
இலங்கையில் முன்னர் இருந்த கிராம சபை (கம் சபா) முறையை மீண்டும் கொணர்வதன் மூலம் கிராமங்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் மாகாண நிருவாக முறையொன்றை உருவாக்கவுள்ளதாக வடிகாலமைப்பு மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா குறிப்பிடுகிறார்.
மகியங்கன ரிதீமாலியத்த பிரதேச சபையில் புதிதாக நிர்ணமானிக்கப்பட்டுள்ள காரியாலயத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
‘பழைய கிராம சபை உறுப்பினர் என்பவர் கிராமத்தின் தேவைகள் மற்றும் வளங்கள் பற்றி அறிந்துகொண்டு தன்னாலான முழுப்பங்களிப்பையும் வழங்குகின்ற கிராம மக்களின் நன்மதிப்பைப் பெற்ற முக்கியஸ்தர். அன்று கிராம சபைகளின் தலைவராக பதவி வகித்தவர் எங்கள் கட்சியை தோற்றுவித்த எஸ்.டப்ளியு.ஆர்.டீ. பண்டாரநாயக்கா. அன்று அவர் கிராம சபையின், கிராம சபை உறுப்பினர்களின் பெறுமதியை நன்குணர்ந்திருந்தார். கிராமத்தை முன்னேற்றுவதற்கு கிராம உறுப்பினர் ஒருவர் தேவை என்பதை அவர் உணர்ந்தார்.
ஆயினும் ஜே.ஆர். ஜயவர்த்தன இந்தத் திட்டத்தை தலை கால் தெரியாமல் செய்து விருப்பு வாக்கு முறையைக் கொணர்ந்தார். அதனால் கிராமத்திலிருந்த ஒற்றுமை இல்லாதொழிந்தது. இன்று தலைவர், உப தலைவரிடையே சண்டை நடக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கிடையே சண்டை செய்துகொள்கிறார்கள், மரணத்தைத் தழுவுகிறார்கள். இந்த விடயம் பற்றி நாங்கள் பல ஆண்டுகளாக விவாதங்கள் செய்து, ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் மீண்டும் கிராம சபை முறைக்கு ஏற்றாற்போல வலய முறைமைக்கு மாகாண தேர்தல் முறையைக் கொண்டு வந்தோம். இப்போது விருப்பு வாக்குப் பிரச்சினை இல்லை.
எல்லா வலயங்களுக்கும் கட்சியிலிருந்து அபேட்சகர் ஒருவரை நாங்கள் நியமிக்கிறோம். கட்சி வெற்றி பெற்றால் அபேட்சகர் வெற்றி பெறுவார். இப்போது விளம்பரங்கள் ஒட்டிக் கொண்டு, வாகனங்கள் போட்டு, குக்குரலிட அவசியமில்லை. செலவுகள் இல்லை. ஏழையாக இருந்தாலும் ஊரில் மக்கள் மனதை வென்றிருந்தால் பிரதேச சபைக்கு வரமுடியும். சபையின் தலைவராக நியமிக்கப்படுபவர் கட்சிக்கு, தேர்தல் பிரிவின் அமைப்பாளருக்கு ஒத்துழைக்க்க் கூடியவராகவே இருப்பார். ஒருவர் நன்கு விசாரிக்கப்பட்டதன் பின்னர்தான் தலைவராக நியமிக்கப்படுவார்.
சிலருக்கு கட்சி பற்றிய ஞாபகமே வருவது தேர்தல் ஒன்று அண்மிக்கும்போதுதான். மக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணும், கட்சிக்காக அயராது உழைப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும். இந்த புதிய தேர்தல் முறை மூலம் சிறந்த நிருவாக முறையொன்றை கட்டியெழுப்புவேன். திவிநெகும திட்டம் இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தும்’ என்று குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment