Monday, January 14, 2013

தைப் பொங்கல் இயற்கைக்கும் மனிதர்களுக்குமான பலமான பிணைப்பை ஏற்படுத்துகிறது –ஜனாதிபதி

தை மாதத்தின் முதல் தினத்தைக் குறித்து நிற்கும் இவ்விசேட பண்டிகையான தைப்பொங்கல் சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொண்டமைக்காக சூரியபகவானுக்கு நன்றி செலுத்துவதற்காகக் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் பண்டிகை மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையேயான பலமான பிணைப்பை ஏற்படுத்துவதுடன்- நாளாந்த வாழ்விலும் தெய்வ வழிபாட்டிலும் மக்களினதும் சமூகங்களினதும் ஐக்கியத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது.என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கை வாழ் இந்துக்கள் தென்னாசியாவில் வாழும் தமது இந்து சகோதரர்களோடு இணைந்து இன்று தமது சமயப் பஞ்சாங்கத்தில் மிக விசேடமான பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

இப்பண்டிகையின் விசேட அம்சமான பாலும் சோறும் பொங்கவைப்பதனைக் குறித்து நிற்கும் பொங்கலானது சூரிய பகவானின் ஆசீர்வாதத்துடன் வாழ்க்கையில் புதிய சந்தர்ப்பங்களுக்கான ஆரம்பமாக நம்பப்படுகிறது. அறுவடையின் முதற்பகுதி சூரிய பகவானுக்கு படையல் செய்யப்படும் போது இது 'சூரிய மங்கள்யமாகவும்' கருதப்படுகிறது.

இப்பண்டிகை சிறந்த அறுவடைக்காக சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதிலும் எதிர்வரும் வருடத்திலும் சிறந்த அறுவடையும் வெற்றிகளும் தொடர்ச்சியாகக் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் மிகுந்த அன்பு மற்றும் புரிந்துணர்வுடன் குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்றிணைக்கின்றது.

இப்பண்டிகையின் இரண்டாவது நாள் நிலத்தை உழுதல்- பயணம் செய்தல் மற்றும் பால்- உரம் போன்றவற்றுக்காகப் பயன்படும் தமது கால்நடைகளுக்கு கௌரவமளிக்கும் ஒரு விசேட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

இது தெய்வத்திற்கான அர்ப்பணம்- ஆசீர்வாதத்திற்கான நன்றி மற்றும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையளிக்கும் ஆரம்பங்களின் அடையாளமாகும்.

No comments:

Post a Comment