உலகில் நடைபெறும் பேரழிவுக்கு இதுவே காரணம்!
2012, அமெரிக்காவின் வரலாற்றில் கடந்த சில நூறாண்டுகளில் மிக உஷ்ணமான ஒரு வருடம் என்று நியூயோர்க் ரைம்ஸ் குறிப்பிட்டிருக்கிறது. தொடர்ந்த வறட்சியின் காரணமாக அமெரிக்காவில் பெரும்பகுதிகளை இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அரசு அறிவித்துள்ளது. கடந்த 118 ஆண்டு காலங்களில் மிக அதிகமான வெப்ப நிலை சென்ற வருடம் நீடித்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமேஸான் மழைக்காடுகள் நிரம்பிய பிரேஸிலிலும் அதி சயமாக வறட்சி. சீனாவில் தொடர்ந்த பனிப் பொழிவின் சுமை தாங்காது ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன. பிரிட்டனில் சென்ற வருடம் கொட்டித் தீர்த்த மழையில் பல ஊர்கள் மூழ்கி, மக்களைப் படகுகளில் போய்க் காப்பாற்றினார்கள். வழக்கமாக சுமாரான குளிர் இருக்கும் மேற்கு ஆசியாவில் இந்த வருடம் அடர் பனிப்பொழிவு.
அவுஸ்திரேலியாவில் 40 பாகை செல்ஸியஸுக்கு வெப்பம் உயர்ந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் காட்டுத் தீ எரிந்து கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் நோர்வே அருகில், கிரீன்லாந்தருகில், ஐஸ்லாந்தருகில் எல்லாம் ஆயிரமாண்டுகளாகக் கிடந்த பனிப்பாளங்கள் உருகி நீராகின்றன. சில இடங்களில் அமெரிக்க நாட்டின் அளவுக்குப் பரந்த பனிக்கட்டித் தளங்கள் உருகி விட்டனவாம்.
போகப் போக இந்த தட்ப வெப்ப நிலை மாறுதல்கள் மேன் மேலும் சீற்றமடையவே வாய்ப்பு அதிகம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிப்பதாக சொல்கிறது நியூயோர்க் ரைம்ஸ். அமெரிக்க விண்வெளி ஆய்வுமையத்தின் தலைவரான ஜேம்ஸ் ஹான்ஸன் பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருபவர். அவரது ஆய்வின் படி, மிகக் கடுமையான- வெப்பநிலை கொண்ட கோடைப் பருவங்கள் தற்போது மிகவும் அதிகரித்துள்ளன. பருவநிலை மாற்றங்களால் 1951 முதல் 1980 ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக உலகின் மொத்த நிலப்பரப்பில் 0.1 முதல் 2 வீதமே பாதிப்பிற்குள்ளாயின. ஆனால் தற்போது 10 வீத நிலம் பாதிப்பிற்குள்ளாகிறது.
தொழிற்சாலையிலிருந்து வரும் புகை, கழிவுநீர், வாகனங்களின் புகையால் வரும் மெதேன், காபனீரொட்சைட், நைதரஸ் ஒட்சைட், குளோரோ புளோரோ காபன் போன்றவை பூமிக்கு மேற்பரப்பில் தங்கிவிட்டன. அதன் காரணமாக பூமி சூடானால் வெளிவிடும் அகச்சிவப்புக் கதிரை வெளியே விடாமல் தடுத்து, மேல் தங்கி உள்ள இந்த வாயுக்கள் மீண்டும் பூமிக்கே அனுப்பி விடுகின்றன. விளைவு பூமி சூடாகிக் கொண்டே வருகிறது. புவி வெப்பமடைவதால் பனிமலைகள் உருகுகின்றன. இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்து ஒட்டு மொத்த உலகமும் நீரால் சூழப் போகிறது என்று எச்சரிக்கிறது அறிவியல்.
தடுக்க என்ன செய்யலாம்? தொழிற்சாலைகளை சீர்படுத்துவது, கழிவுநீரை சரியான முறையில் வெளியேற்றுவது, வாகனங்களுக்கு மாற்று எரிபொருளை உருவாக்குவது, அணுமின், அணுஆயுதம் போன்றவற்றை குறைத்தல் அல்லது தடுத்தல், மோட்டார் வாகன உற்பத்தியைக் குறைத்தல், சைக்கிள்களின் பயன்பாட்டினை ஊக்குவித்தல், பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்தல், இவை அரசாங்கங்கள் செய்ய வேண்டியவை.
பொது மக்களாகிய நாம், பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதை கைவிட வேண்டும். காடுகளை அழிக்காமல் இருக்க வேண்டும். மரங்கள் வளர்க்க வேண்டும். வீடுதோறும் செடிகள் வளர்க்க வேண்டும். நவீன உபகரணங்களை வாங்கிக் குவிப்பதை குறைக்க வேண்டும்.
0 comments :
Post a Comment