எமது குழந்தைகளைப் புரிந்து கொள்ள முடியுமா!
ஒவ்வொரு புதுவருடம் தொடங்கும் போதும் நாம் புது மனிதர்களாகிவிட வேண்டும் என்று போடுகிற சங்கற்பங்கள் நிறை வேறுகிறதோ இல்லையோ, பள்ளிக்கூடச் சிறுவர்களுக்கு புதுவகுப்பு என்னும் படி உயர வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது. புதுப் புத்தகங்கள் புதிய வகுப்பறை அனேகமாக புதிய ஆசிரியர் என்று அவர்களுக்கு மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன.
நத்தார், புதுவருடம், பொங்கல் என்று பண்டிகைகளின் பருவகாலம் இது. இந்தப் பண்டிகைகள் முடிந்ததும் சிறுவர்கள் காலை மாலை இரவு படிப்பு, படிப்பைத்தவிர வேறில்லை என்னும் நச்சரிப்புக்குள் தள்ளப்படப் போகிறார்கள். வேண்டாம், ஒரு வகுப்பு மேலேறி புதுவகுப்புகளுக்கு நுழைந்திருக்கும் சிறார்களுக்கு, தாங்கள் வகுப்பேறியதில் உள்ள அந்தப் புத்துணர்வையும், புதியன கண்ட மகிழ்வையும் நீடிப்பதற்குப் பெற்றோரும் ஆசிரியர்களும் உதவ வேண்டும்.
குழந்தைகளை படி படி என்று நசுக்குவதையே தம் கடமையாகப் பல பெற்றோர் நினைத்துவிடுவதுண்டு. பாடசாலையில் ஆசிரியர்களும் படி படி என்று எதையோ சொல்லிவைக்க, புரிகிறதோ, புரியவில்லையோ, குழந்தைகள் அரைத் தூக்கத்துடனும் ஆர்வமின்றியும் அதனைப் பின்பற்ற வேண்டிய கட்டாயமும் நடக்கிறது. புத்தக மூட்டைகளோடு பாடசாலைக்குச் செல்லும் அவர்கள் எக்கச்சக்க வீட்டுப் பாடங்களுடன் சோர்ந்து திரும்பி வருகிறார்கள்.
மேலதிகமாக பெற்றோருக்கும் வீட்டுப்பாட வேலைகளை வழங்கும் கல்விமுறையினால் பிள்ளைகளோடு பெற்றோரும் சேர்ந்து மல்லாடும்படியாக கல்வி என்பதே வதையாக இருப்பதை இன்னும் மாற்றமுடியவில்லை. அதிலும் போட்டி அதிகமாகி, படிப்பை பாடசாலையுடன் நிறுத்திவிடாமல், ரியூசனுக்கு ஓடி வீட்டுக்குகளைத்து வந்தபிறகும் படிப்பைத் தொடர வேண்டிய பரிதாபநிலை.
பிறகு பரீட்சை, புலமைப்பரிசில் பரீட்சை, அடுத்து என்ன படிப்பு என்று படிப்பையே சுமையாக்கி அவர்களது மகிழ்தருணங்களைப் பொசுக்குவதே நம் கற்பித்தல் என்பதாக இருக்கிறது. பெற்றோரின் நிறைவேறாக் கனவுகளையும் சேர்த்து அவர்கள் சுமக்க வேண்டியிருக்கிறது.
குழந்தைகளின் ஆர்வம் என்னவென்று நாம் கேட்பதே இல்லை. அவர்களின் திறன் எதில் உள்ளது என்பதையும் நாம் கவனிப்பதில்லை. ஹாவர்ட் கார்ட்னெர் முன்வைத்த Multiple Intelligence என்ற கருத்தாக்கத்தின்படி, எட்டுவிதமான அறிவுகள் உள்ளன. அதில் சிலதான் அல்லது ஒன்றுதான் ஒரு மனிதருக்கு அதிகமாக இருக்கும். அது எது என்று கண்டுபிடித்தால், அதில், அந்தத் துறையில் அந்த மனிதரால் உச்சங்களை அடைய முடியும்.
இன்று எல்லாத் துறைகளிலுமே வாய்ப்புகள் இருக்கும்போது ஒரு குழந்தையை எதை நோக்கிச் செலுத்துவது? முரட்டுத்தனமாக, படி, படி என்று சொல்லிக்கொண்டே இருப்பதா, அல்லது எதில் ஆர்வமும் திறனும் உள்ளதோ அதை நோக்கி ஒரு குழந் தையைச் செலுத்துவதா? எந்த அடிப்படையில் நம் குழந்தையிடம் இந்தத் திறன் உள்ளது என்று கண்டறியமுடியும்? அதைக் கண்டுகொள்வதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்கிறோமா? படி படி என்று நச்சரிப்பதை விட சிறுவரது விருப்பங்களை அவர்களது திறன்களை அறிந்து அவற்றில் ஊக்கப்படுத்துவது குறித்து எண்ணுவதில்லை, அதற்கு நமக்கு நேரமும் இல்லை.
கல்விமுறையை அரசு மாற்றியமைப்பது இருக்கட்டும். முதலில் நம் பிள்ளைகளுக்கு வழங்கும் கல்வி குறித்தும் பிள்ளைகள் குறித்தும் நாம் தெளிவடைந்தாக வேண்டும்.
0 comments :
Post a Comment