நுகர்வுக் கலாச்சாரத்தால் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களும் சமூகச் சீர்கேடுகளும்!
இலங்கைத் தமிழ் மக்களின் 'இதய பூமி' என யாழ்.மையவாதிகளாலும் (உயர்சாதி மேட்டுக் குழாமினர்), தமிழ் தேசியவாதிகளாலும், புலம்பெயர் புலி ஆதரவாளர்களாலும் பெருமையுடன் அழைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களும், சமூகச் சீர்கேடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்தக் குற்றச் செயல்களும், சீர்கேடுகளும் பலவகைப்பட்டன. நேரடியாக வீடுகளில் புகுந்து கொள்ளை அடிப்பது, தனியாகச் செல்லும் பெண்களிடம் நகைகளைப் பலவந்தமாக அபகரித்துச் செல்வது, கோவில்கள், பொது நிறுவனங்களில் புகுந்து கொள்ளையிடுவது என்பவை ஒரு ரகம்.
இவைகள் அநேகமாக ஆயுத முனைகளில் நடப்பவை. இன்னொரு வகை ஏமாற்றிப் பணம் பறிப்பது. வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இலட்சக் கணக்கில் பணம் கறப்பது, உத்தியோகம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெறுவது, வங்கிகளில் நிதி நிறுவனங்களில் பெருந்தொகையான பணம் கடனாகப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வாங்குவது, மதுபான லைசென்ஸ் போன்ற அரச அனுமதிகள் பெற்றுத் தருவதாகச் சொல்லி பணம் கறப்பது, அடையாள அட்டை, கடவுச் சீட்டு போன்ற அத்தியாசிய ஆவணங்களைக் குறுக்கு வழியில் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிப்பது, வெளிநாட்டிலிருந்து அல்லது கொழும்பில் இருந்து வரும் உறவினர்களின் நண்பர்களாக நடித்து வீடுகளில் தங்கி களவெடுத்துச் செல்வது போன்ற பலவகை மோசடிகளும் நடைபெறுகின்றன.
இதுதவிர, பாலியல் வன்செயல்கள், சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம், ஆயுதங்களால் தாக்குவது, அடிதடி, வீதிகளில் செல்லும் பெண்கள் மீது வாய்வழி பாலியல் தொந்தரவுகள் செய்வது, ஆபாசப் படங்களை குழுக்களாகச் சேர்ந்து பார்ப்பது, இளம் பெண்களைப் பலவந்தமாகக் கடத்திச் செல்வது, பாலியல் வல்லுறவின் பின் சிறுமிகளையும், இளம் பெண்களையும் கொலை செய்வது, திட்டமிட்ட கொலைகள், காணி — வீடு சம்பந்தமான சொத்துத் தகராறுகள், கள்ள உறுதிகள் தயாரித்து வெளிநாடுகளில் உள்ளவர்களின் காணிகளை விற்பனை செய்வது போன்ற சமூக விரோதச் செயல்களும் நடந்த வண்ணம் உள்ளன.
இவ்வகையான செயற்பாடுகள் இலங்கையின் ஏனைய பாகங்களிலும் நடைபெறாமல் இல்லை. குறிப்பாக 1977இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் பதவியேற்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கையின் காரணமாகவே,இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையில் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கத் தொடங்கின.
ஆனால் தற்பொழுது வடக்கில் நடைபெறும் சம்பவங்களே மிகப்பெரிய அளவில் உள்நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அரங்கிலும் புலி சார்பு ஊடகங்களால் பெரிதுபடுத்திப் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. உண்மையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது உண்மை என்ற போதிலும், அதற்கான காரணங்களை இந்த ஊடகங்கள் திட்டமிட்டுத் திரிபுபடுத்திப் பிரச்சாரம் செய்கின்றன. வடக்கில் பெருமளவு இராணுவப் பிரசன்னம் இருப்பதால், இந்தவாறான குற்றச் செயல்களுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு உள்ளது போன்றதொரு மாயையை இவை உருவாக்குகின்றன. அல்லது அரசுடன் இணைந்திருக்கும், இவர்களால் 'ஒட்டுக்குழு' என வர்ணிக்கப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது பழியைப் போட முயல்கின்றன.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' பத்திரிகைகூட இவ்வாறான செய்திகளை வெளியிடும் போது, நாசூக்காக செய்தியின் முடிவில் 'சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு 50 மீட்டர் தூரத்தில் இராணுவக் காவலரண் ஒன்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது' எனச் செய்தி வெளியிடுவது ஒரு வழமை. அதற்காக இராணுவம் தூய்மையான அப்பாவிகள் என வாதிடுவது அல்ல எமது நோக்கம்.
தற்பொழுது வடக்கில் நடைபெறும் குற்றச் செயல்களை வைத்துக்கொண்டு தமிழ் தேசியவாதிகளின் பிரதான கூடாரமான தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும், புலிகளின் வாரிசுகள் எனத் தம்மைச் சொல்லிக் கொள்ளும் சில தீவிர தமிழ் இனவாத உதிரிக் கட்சிகளும் (மனோ கணேசன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள்), தமிழ் மக்களின் பாதுகாவலர்களான புலிகள் அழிக்கப்பட்ட பின்னர்தான் தமிழ் பகுதிகளில் இவ்வாறான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன எனப் பிரச்சாரம் செய்கின்றன.
இதே கருத்தையே புலம்பெயர் புலி சார்பு ஊடகங்களும் திருப்பிக் கூறுகின்றன. அத்துடன் அரசாங்கம் திட்டமிட்டே இவ்வாறான செயல்களை வடக்கில் உருவாக்கித் தமிழ் இனத்தை சீரழிக்க முயல்கின்றது என்றும் பிரச்சாரம் செய்கின்றன.
இந்தப் பிரச்சாரம் இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று, தமிழினம் உலகிலேயே பரிசுத்தமான, மிகவும் தூய்மையான ஒர் இனம அதனிடம் உள்ளதெல்லாம் நூற்றுக்கு நூறு வீதம் நல்ல விடயங்கள் மட்டுமே. அவர்களிடம் ஏதாவது தீய விடயங்கள் காணப்படுமாயின் அவை வெளிச் சக்திகளால் திணிக்கப்பட்டவையே. திராவிட வாரிசுகளின் மொழியில் கூறுவதானால், அவையெல்லாம் ஆரிய வந்தேறு குடிகளால் திணிப்பட்டவை. இது ஒரு காரணம்.
இரண்டாவது விடயம், யாழ்ப்பாண வேளாள மேட்டுக்குடியினரின் 'ஆண்ட பரம்பரை மீண்டுமொரு முறை ஆள நினைப்பதில் தவறென்ன?' என்ற கேள்விக்கும் ஏக்கத்துக்கும் செயல் வடிவம் கொடுக்க வந்த புலிகளை மீளவும் புனருருவாக்கம் செய்வதற்கு, அவர்கள் இல்லாத தமிழ் சமூகம் 'படும்பாட்டை'ப் பற்றிப் பிரச்சாரம் செய்வதும் அவர்களது நோக்கமாகும்.
ஆனால் இங்கு ஒரு கேள்வி எழுகின்றது. அதாவது, யாழ்ப்பாணம் உள்ளடங்கியிருக்கும் வட மாகாணத்தைத் தவிர்த்து கிழக்கு மாகாணத்திலும் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். யாழ்ப்பாணத்தவர்கள் வசதியான வாழ்க்கை தேடி வெளிநாடுகளுக்கு ஓடிப்போன அளவுக்கு கிழக்கு மாகாணத்தவர்கள் ஓடிப் போகவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள்தான் 'தமிழ் மண்'ணைப் பாதுகாத்து, சொந்த மண்ணில் வாழ்பவர்கள். அவர்களது பிரதான நகரங்களான மட்டக்களப்பு, திரிகோணமலை, அம்பாறையின் தமிழ் பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் நிகழ்வது போன்ற குற்றச் செயல்கள், சமூகச் சீர்கேடுகள் ஏன் பெரிய அளவில்
நடைபெறவில்லை?
உண்மையான காரணங்களை இலங்கையில் இருக்கும் சில சமூக ஆய்வாளர்களும், வெளிநாடுகளிலிருந்து இலங்கை (குறிப்பாக வடக்கு கிழக்கிற்கு) சென்று வந்த ஆய்வாளர்களும் சில ஊடகங்கள் வாயிலாக முன்வைத்திருக்கிறார்கள். அவர்கள் வந்தடைந்த முடிவுகளைப் பார்க்கும் போது இந்தக் குற்றச் செயல்களின் பின்னணியை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.
முதலாவது விடயம், புலிகளின் காலத்தில் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் குற்றச் செயல்கள் நடைபெறவில்லை என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க விடயம்தான். அதற்கொரு காரணம் தமிழ் மக்களுக்கு இன்று கிடைத்திருக்கும் சுதந்திரமும், வசதிகளும் புலிகளின் அடக்குமுறை ஆட்சியின் கீழ் இல்லாமல் இருந்ததுதான்.
இன்று புலிகள் அழிந்த பின்னர் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கும் கேட்பார் யாருமற்ற சுதந்திரமான வாழ்க்கை அன்று இருக்கவில்லை. மக்களிடம் அடிப்படைத் தேவைகளுக்கே போதிய பணம் இருக்கவில்லை. மக்கள் தமது வீடுகளில் நிம்மதியாக இருக்க முடியாமல் அவர்களை யுத்தம் அங்கும் இங்குமாகத் துரத்திக் கொணடிருந்தது. 'பிள்ளை பிடி காரர்களான' புலிகளிடமிருந்து தமது பிள்ளைகளை பாதுகாக்க மக்கள் அல்லும் பகலும் போராட வேண்டியிருந்தது.
இன்று கிடைத்திருப்பது போல எந்த நேரத்திலும் நாடு முழுவதும் சுற்றித்திரியக்கூடிய போக்குவரத்து வசதிகளோ, மின்சார வசதியோ, வீட்டுக்கு ஒரு ஆட்டோவோ அல்லது பல மோட்டார் சைக்கிள்களோ, தொலைக்காட்சி பார்க்கும் வசதியோ, குளிர்சாதனப் பெட்டியோ, ஆளுக்கொரு கைத்தொலைபேசியோ அல்லது வீட்டுத் தொலைபேசியோ, வெளிநாட்டு உறவினர் வருகையோ, கோவில் திருவிழாக்களோ, விளையாட்டுப் போட்டிகளோ, களியாட்ட விழாக்களோ, உத்தியோக வாய்ப்புகளோ, இது போன்ற இன்னும் எண்ணற்ற வசதிகளோ புலிகளின் காலத்தில் இருக்கவில்லை.
இவையெல்லாம் இலங்கையின் ஏனைய பாகங்களில் ஏற்கெனவே இருந்தும், அங்கு இல்லாத அளவில் யாழ்ப்பாணத்தில் மட்டும் சீரழிவுகள் ஏற்பட்டுள்ளதென்றால், அதற்குக் காரணம் 'கண்டறியாததைக் கண்டதும்' வரும் ஒரு வேகமான ஆகர்சிப்புத்தான். குறிப்பாக இந்த 30 வருடப் போர் நடைபெற்ற காலத்தில் பிறந்த ஒரு குழந்தை, இப்பொழுது 30 வயதிலிருந்து 13 வரையிலான இளம் பருவத்தினராக இருப்பார்கள். அவர்களுக்கு முன்பு இந்தவாறான வாழ்க்கை வசதிகள் கிடைத்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. இப்பொழுது அது கிடைத்து நெறிப்படுத்தலும் இல்லையென்றால், அவர்கள் கட்டறுந்த காளைகளாகத்தான் செயற்படுவார்கள்.
இன்னொரு காரணி, மற்றைய பிரதேசங்களில் உள்ள தமிழ் மக்களுக்குக் கிடைக்காத அளவுக்கு யாழ்ப்பாணத்தவர்களுக்குக் கிடைத்து வரும் வெளிநாட்டுப் பணம். யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் குறைந்தபட்சம் ஒருவராவது வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இவர்கள் இடையிடையே தன்னும் தமது உறவுகளுக்கு அனுப்பும் பணம் தாய்நாட்டில் இருப்பவர்களின் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு கணிசமான அளது தீனி போடுகின்றது.
ஒரு புள்ளிவிபரத்தின்படி சென்ற ஆண்டு சுமார் 55,000 பேர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குச் (கணிசமானோர் வட பகுதித் தமிழர்கள்) சென்று வந்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 5,000 டொலர்களை இலங்கையில் செலவிட்டிருந்தால், அந்தப் பணம் வடக்குத் தமிழர்களின் பணப் புழக்கத்தில் எத்தகைய தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கும்?
இதுதவிர, வீடு கட்டுவதற்கு, விவசாயம் செய்வதற்கு, மீன பிடிப்பதற்கு, தொழில் தொடங்குவதற்கு என பல வகையான பண உதவிகள் இலங்கை அரசாங்கத்தாலும், வெளிநாடுகளாலும், அரச சார்பற்ற நிறுவனங்களாலும் யாழ்ப்பாணத்துக்கு வாரியிறைக்கட்டுள்ளன. இதற்காகவே இலங்கையின் அனைத்து வங்கிகளும் வட பகுதியில் கிளைகளைத் திறந்து வைத்திருக்கின்றன. ஒரு சாதாரண தொழிலாளியின் நாளாந்தக் கூலியே 1000 ரூபாய்களுக்கு மேல் உள்ளது என்பதும், அந்தக் கூலியில் கூட விரும்பிய நேரத்தில் ஒரு
தொழிலாளியைப் பிடிப்பது அரிது என்னும் போது, அங்குள்ள நிலைமையப் புரிந்து கொள்ள முடியும்.
இந்த நிலைமையும் அங்கு பணப் புழக்கம் அதிகரிப்பதற்கு ஒரு காரணியாகும். இவையெல்லாவற்றின் மூலமும் தமிழ் மக்களின் பொருளாதார வாழ்வு அடிப்படையில் ஏற்றம் கண்டுள்ளது எனச் சொல்ல முடியாது என்ற போதிலும், மக்களுக்குக் கிடைத்த சுதந்திரமும் திடீரென ஏற்பட்ட அதீதமான பணப் புழக்கமும், அவர்கள் மத்தியில் உழைப்பின் அவசியத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுள்ளதுடன், நுகர்வுக் கலாச்சாரத்தை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது
என்பதுதான் உண்மை.
ஒரு வேடிக்கையான விடயம் என்னவெனில், அண்மைக் காலங்களில் தாயகம் சென்று வரும் புலம்பெயர் தமிழர்கள் பலர், வெளிநாடுகளில் வாழும் தம்மைவிட, இலங்கையில் வாழும் தமது உறவுகள் வசதியாகவும், சந்தோசமாகவும் வாழுகிறார்கள்' எனப் புலம்புவதுதான். கனடாவில் இயங்கும் தமிழ் வானொலி ஒன்று, ஒருமுறை தனது நேயர்களிடம் இது சம்பந்தமாகக் கருத்துக் கேட்டபோது, தாயகம் சென்று வந்த அநேகமானோர் இலங்கையில் உள்ளவர்களுக்கு இனிமேல் பணம் அனுப்பத் தேவையில்லை, அவர்கள் எம்மைவிட வசதியாக வாழ்கிறார்கள் எனக் கருத்துக் கூறியிருந்தார்கள்.
இவ்வாறான கருத்துக்கள் பொதுமையானவை அல்லவென்ற போதிலும், அங்குள்ள நிலைமையின் தாற்பரியத்தை இவையும் ஒரு கோணத்தில் விளக்குகின்றன. எனவே யாழ்ப்பாணத்தில் இன்று ஏற்பட்டிருக்கும் குற்றச் செயல்கள், கலாச்சாரச் சீரழிவுகளின் அதிகரிப்புக்கு மற்றவர்களைக் குறை கூறுவதை விடுத்து, எம்மிடம் உள்ள குறைகளைக களைய முயற்சிக்க வேண்டும். நுகர்வுக் கலாச்சாரத்தின் கட்டுக்கடங்காத வளர்ச்சியே எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உள்ளது. அந்த எதிர்மறையான வளர்ச்சியை ஏற்படுத்திவிட்டதில், வர்த்தக நிறுவனங்கள், வெளிநாட்டு சக்திகள் என்போருடன், புலம்பெயர் தமிழர்களுக்கும் பெரும்
பங்கு உண்டு.
தமிழ் மக்களின் புலமைசார் சமூகமும், சமூகப் பொறுப்புள்ள ஸ்தாபனங்களும் கடுமையாக முயற்சிப்பதின் மூலமே இந்த நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். இந்த விடயத்தில் அரச எந்திரத்தினதும், சட்டத்தைப் பேணுபவர்களினதும் பங்கு என்பது, எமது முயற்சிகளுக்கு அடுத்த கட்டமானது என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.
இதற்கொரு உதாரணம் அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் 'மாவீரர் தின'த்தை ஒட்டி நடைபெற்ற சம்பவங்களாகும். அந்த உயரிய நிறுவனத்தில் கற்பிக்கும் சமூகம் சரியாகச் செயற்பட்டிருக்கின், ஆயுதப் படைகள் அங்கு நுழைய வேண்டிய தேவையே வந்திருக்காது. அதைத் தவறவிட்டுவிட்டுப் பின்னர் அனுபவமற்ற மாணவர்களின் பின்னர் இழுபடும் நிலைக்கு அங்குள்ள ஆசிரிய சமூகம் தள்ளப்பட்டது கவலைக்குரியதும், கண்டனத்துக்குரியதுமாகும்.
எனவே, இப்பொழுது வடக்கில் ஏற்பட்டு வரும் சமூகச் சூழ்நிலைகள் 1970களின் ஆரம்பத்தில் இருந்த நிலையை ஒத்ததாக உள்ளது என்ற உண்மையைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அன்று இவ்வாறு ஏற்பட்ட ஒரு சூழல்தான் பின்னர் அழிவுகரமான யுத்தத்துக்கு இட்டுச் சென்றது. அதைத் தடுப்பதில் வடக்கில் உள்ள புலமைசார் சமூகத்துக்கும், மக்கள் நலன் விரும்பிகளுக்கும் முக்கிய பொறுப்புண்டு.
இந்தப் பொறுப்பை 'எரிகிற வீட்டில் பிடுங்கிறது லாபம்' எனச் செயற்பட்டு வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்போ, இதர தமிழ் தேசியவாதச் சக்திகளோ அல்லது புலம்பெயர் புலி சார்பு சக்திகளோ செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது.
அறிவுடனும், ஆற்றலுடனும், தூர நோக்குடனும் எமது தலைவிதியை நாமே நமது கைகளில் எடுக்க வேண்டும்..
1 comments :
Our tamil political philosophers who led the tamil community under one umbrella called Federal party for more than 60 years presently named as TNA were the cause of the present disasterous situation which started with the killing Jaffna Mayor Alfred Duraiappah.The killing was indirectly welcomed by the above politicians,describing the victim as a traitor.If you mix a small of drop poison into the milk what will happen.Finally a society being poisoned and the results we can see how we have worst disasterous situations. If you try to destroy peace justice and order and the results would be sorrowful.Bogus politicians always blame each other for country's ill.
Post a Comment