Saturday, January 19, 2013

இங்கிலாந்திற்கு எதிராக டோனியின் சொந்த ஊரில் சாதித்தது இந்திய அணி

இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இந்திய அணி தனது அபாரமான பந்து வீச்சினால் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி கேப்டன் டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இன்று தொடங்கியது.டாஸ் ஜெயித்த டோனி இங்கிலாந்து அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். 5 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் ராஜ் கோட்டில் நடந்த முதலாவது போட்டியில் 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தும், கொச்சியில் நடந்த 2-வது போட்டியில் 127 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சம நிலையில் இருப்பதால் இன்று நடைபெறும் 3-வது போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. அத்துடன் கேப்டன் டோனியின் சொந்த ஊரில் புதிய மைதானத்தில் நடைபெறும் முதலாவது சர்வதேச போட்டி என்பதால் கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் அவரது பக்கம் திரும்பியுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: டோனி (கேப்டன்), காம்பீர், ரகானே, விராட் கோலி, யுவராஜ்சிங், ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், இஷாந்த் சர்மா, ஷமி அகமது.

இங்கிலாந்து: கூக் (கேப்டன்), இயன்பெல், கெவின் பீட்டர்சன், மோர்கன், ஜோரூட், கீஸ் வெட்டர், சமித்பட்டேல், டிம்பிரஸ்னென், ஜேம்ஸ் டிரட்வெல், டெர்ன்பேச், ஸ்டீவன்பின்.

பகல் 12 மணிக்கு போட்டி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கூக்- இயன்பெல் களம் இறங்கினார்கள். புவனேஸ்வர்குமார் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் இங்கிலாந்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. 2-வது ஓவரை ஷமி அகமது வீசினார். அவரது ஓவரில் கூக் 1 பவுண்டரி மட்டும் அடித்தார். ஷமி அகமது வீசிய 7-வது ஓவரின் கடைசி பந்தில் இங்கிலாந்து கேப்டன் கூக் எல்.பி.டபிள்யூ ஆகி அவுட் ஆனார். அவர் 17 ரன்கள் எடுத்து இருந்தார். அப்போது இங்கிலாந்து ஸ்கோர் 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்களாக இருந்தது.

அடுத்து கெவின் பீட்டர்சன் பெல்லுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார் சிறிது நேரம் தாக்கு பிடித்து விளையாடிய பீட்டர்சன் 17 ரன் அடித்திருந்தபோது சர்மா பந்து வீச்சில் கேட்சானார். அடுத்து வந்த ரூட், பெல்லுடன் இணைந்து விளையாடினார். புவனேஸ்வர் குமார் வீசிய 16 வது ஓவரில் பெல் 25 ரன் அடித்திருந்த போது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்தாக வந்த மோர்கன் 10 ரன் எடுத்து அஸ்வின் பந்தில் அவுட் ஆனார். அதன் பின் வந்த கீஸ் வெட்டர் (0), பட்டேல் (0) ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். அதைத்தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர் இதனால் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்னில் சுருண்டது. அதிக பட்சமாக ரூட் 39 ரன் எடுத்து அவுட் ஆனார்.

இந்திய பந்து வீச்சாளர்கள் தரப்பில் அதிக பட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டும், அஸ்வின் 2, இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 156 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரராக வந்த ரகானே ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். காம்பீருடன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர். இந்தியா 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காம்பீர் 33 ரன்களுக்கு அவுட்டானார். இதன் பின்னர் கோலி அரைசதமடித்தார். அதிரடியாக விளையாடிய யுவராஜ் சிங் 30 ரன்னில் போல்டானார்.

கோலியும் தோனியும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தனர். இந்திய அணி 28.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com