Thursday, January 3, 2013

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: குற்றப்- பத்திரிகை தாக்கல்- விசாரணைகள் ஆரம்பம்.

டெல்லியில் கடந்த மாதம் 16-ந்தேதி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி கொண்டு வரப்பட்டு உடனடியாக இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. மாணவியின் அஸ்தி நேற்று முன்தினம் கங்கையில் கரைக்கப்பட்டது.

மாணவியை மிக கொடூரமாக தாக்கி கற்பழித்த ராம்சிங், முகேஷ்சிங், பவன், வினய், அக்ஷய் மற்றும் 17 வயது மைனர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302 (கொலை) 307 (கொலை முயற்சி) 376 (2) (ஜி) (கும்பலாக கற்பழித்தல்) மற்றும் 377, 365, 394, 396, 201, 34 ஆகிய 9 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் 6 பேருக்கும் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று நாடெங்கும் உள்ள மகளிர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கை விசாரிக்க சிறப்பு விரைவு கோர்ட்டு தொடங்க முடிவு செய்யப்பட்டது. டெல்லி சக்கெட் பகுதியில் இந்த விரைவு கோர்ட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி நேற்று (புதன்கிழமை) அந்த விரைவு நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். துவாரகா, ரோகிணி, திஸ்கசரி ஆகிய நகரங்களிலும் விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோர்ட்டுகளும் இன்றுமுதல் செயல்பட தொடங்கும். மக்களின் மன உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் கற்பழிப்பு குற்றவாளிகள் மீது தினமும் விசாரணை நடத்தப்படும். இதற்கிடையே 6 கற்பழிப்பு குற்றவாளிகளுக்கும் விரைவில் தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்பதில் டெல்லி போலீசாரும் மிக தீவிரமாக உள்ளனர். அவர்கள் 1000 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்துள்ளனர்.

இந்த குற்றப்பத்திரிகை இன்று (வியாழக்கிழமை) டெல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பிறகு அந்த வழக்கு விரைவு கோர்ட்டுக்கு மாற்றப்படும். அந்த குற்றப்பத்திரிக்கையில் 16-ந்தேதி மாணவி பஸ்சில் கற்பழிக்கப்பட்டது முதல் சிங்கப்பூர் மருத்துவ மனையில் 29-ந்தேதி மரணம் அடைந்தது வரையிலான 13 நாள் நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலங்கள், மாணவியின் நண்பர் கொடுத்த வாக்குமூலம் தனி தனியாக தொகுக்கப்பட்டுள்ளது. கற்பழிக்கப்பட்ட மாணவி கடந்த மாதம் 24-ந்தேதி சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் கொடுத் திருந்தார். தனக்கு நேர்ந்த கொடூரத்தை அவர் முழுமையாக கூறி இருந்தார். அந்த வாக்கு மூலம் மாணவியின் மரண வாக்குமூலமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மாணவி யின் மரண வாக்குமூலம் மிக, மிக வலுவானதாக கருதப்படுகிறது. இதையடுத்து தடயவியல் அறிக்கை, கண்காணிப்பு காமிரா வில் பதிவாகியுள்ள பஸ் காட்சிகளும் குற்றத்துக்கு ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ளது. மாணவி உடலுக்கு இறுதி பிரேத பரிசோதனை செய்த சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை டாக்டரும் முக்கிய சாட்சி களில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ளார்.

மாணவி மரணத்துக்கான அடிப்படை காரணத்தை இவர்தான் வெளியிட உள்ளார். எனவே அவரது சாட்சியமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டெல்லி போலீசார் தயாரித்துள்ள குற்றப்பத்திரிகைக்கு டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் நர்மேந்திரகுமார் நேற்று ஒப்புதல் கொடுத்தார். இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் உடனடியாக விசாரணை தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

விரைவு கோர்ட்டில் இந்த வழக்கை தினமும் நடத்த திட்டமிட்டுள்ளனர். தினமும் விசாரணை நடக்கும் பட்சத்தில் மாணவி கற்பழிப்பு வழக்கு விசாரணை ஒரு மாதத்தில் முடிந்து தீர்ப்பு அறிவிக்கப்பட்டு விடும் என்று தெரியவந்துள்ளது.

இந்த வழக்கை பொறுத்த வரை குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று கொடுத்தால்தான் மக்களின் விமர்சனங்களில் இருந்து தப்ப முடியும் என்ற நெருக்கடி மத்தியில் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே விசாரணையை விரைவில் முடிக்க அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளில் ஒருவன் மைனர் என்பதால் அவன் மீது மட்டும் தனியாக விசாரணை நடைபெறும். நேற்று அவனுக்கு எலும்பு சோதனை நடத்தப்பட்டது.

குற்றவாளிகளுக்கு எத்தகைய தண்டனை அளிக்கப்படும் என்பதில் இப்போதே நாடெங்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனையான மரண தண்டனை கொடுக்க வழிவகை செய்து சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவு கோர்ட்டில் வழக்கு விசாரணை முடியும் முன்பு சட்டதிருத்தம் செய்யப்படுமா என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது. எனவே குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது என்று டெல்லி போலீசார் கருதுகின்றார்கள். அதற்கு ஏற்ப குற்றப்பத்திரிகையை தயாரித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com