ஜெனீவா வெற்றிக்காக துடிக்கும் மக்களின் எதிரிகள் யார்? இவர்களை மக்கள் விரட்டி அடிப்பார்களா?
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் அரபு நாடுகள் மத்தியில் இலங்கைக்கு இருக்கும் பேராதரவுக்கு தீங்கிழைக்கும் எண்ணத்துடன் சில தேசத்துரோக சக்திகள் எமது நாட்டில் இனவாத, மத வாத பிரச்சினைகளை தூபமிடக்கூடிய வகையில் சதித்திட்டங்களை தீட்டி வருவதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
கடந்தாண்டு மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் எங்கள் நாட்டின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தத்தவறியது. இதனால் மூக்குடைப்பட்டு ஆத்திரமடைந்த சில தேசத்துரோக சக்திகளும் அரச சார்பற்ற அமைப்புகளும் நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்த இப்போது அடித்தளத்தை அமைத்து வருகின்றன. அரசாங்கத்தின் மீதான சர்வதேச ரீதியிலான அழுத்தங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாமென்று தேசப்பற்றை வளர்க்கக்கூடியவர்களை போல் நடிக்கும் ஒரு குள்ளநரிக் கூட்டம், இனவாதத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்தி அதனை சர்வதேச ரீதியில் சந்தைப்படுத்தி இலாபமீட்டுவதற்கும் முயற்சிகளை செய்து வருவதாக அறிவிக்கப்படுகிறது.சிங்கள தேசியவாதம் என்ற பெயரில் இவ்விதம் சில தேசத்துரோக சக்திகளே அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக இத்தகைய துஷ்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது.
1983ம் ஆண்டில் இதுபோன்ற சில துஷ்ட சிங்கள இனவாதிகளும், ஜே.வி.பியை ஆதரிக்கும் சில வேடதாரிகளும், ஐக்கிய தேசியக்கட்சியின் குடையின் கீழ் பாதுகாப்பை பெற்றிருந்த சில அரசியல்வாதிகளும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தை இது போன்றே ஆரம்பித்தார்கள். அதுவே இறுதியில் இலங்கையின் நற்பெயருக்கே தீங்கிழைக்கக்கூடிய 1983ம் ஆண்டு ஜூலை இனக்கலவரமாக விஸ்வரூபம் எடுத்தது.
அன்று ஆரம்பித்த தமிழர்களுக்கும் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் இடையிலான பகைமை உணர்வே எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதமாக உருவெடுப்பதற்கு அடித்தளமாக அமைந்தது. பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்து வந்த அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன மீது வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன் இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்தி, எல்.ரி.ரி.ஈ. உட்பட ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு பாலூட்டி, சீராட்டி தமிழ் நாட்டில் உள்ள முகாம்களில் ஆயுதப் பயிற்சியையும் அளித்தார். அதனால் தான் எல்.ரி.ரி.ஈ. உலகின் மிகவும் பெரிய கொடுமைமிக்க பயங்கரவாத இயக்கமாக உருவாகியது.
இந்திராகாந்தியினால் பாலூட்டி வளர்க்கப்பட்ட எல்.ரி.ரி.ஈ. 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி இந்திரா காந்தியின் மூத்த மகனான ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது. இந்திரா காந்தியின் அனுசரணையினால் வளர்ந்த எல்.ரி.ரி.ஈ. உலகின் மிகவும் பெரிய கொடுமைமிக்க பயங்கரவாத இயக்கமாக மாறி இலங்கையை மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு பயங்கரவாத இயக்கமாக மாறியது.இந்த கடந்த கால வரலாறு உள்ளூரில் ஏற்படக்கூடிய சிறு பிரச்சி னைகளை நாம் பெரிதுபடுத்தாமல் கூடிய வரையில் சகிப்புத் தன்மையுடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற உண்மையை எமக்கு உணர்த்துகிறது.
இலங்கையின் பல இடங்களில் இடம்பெறும் சிறு பிரச்சினைகளை பெரிதுபடுத்தி மதவாதத்தையும், இனவாதத்தையும் தூண்டிவிடுபவர்களின் உள்நோக்கம் தாங்கள் பாடுபடும் ஒரு இனத்தவரையோ, மதத்தையோ முன்னிலைக்கு கொண்டு வருவதல்ல. இத்தகைய இன வாதிகளும், தேசத்துரோக சக்திகளும் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற மனோபாவத்துடன் தங்களுக்கு வெளிநாட்டு டொலர் நோட்டுகளை வாரி வழங்கும் அரசசார்பற்ற அமைப்புகளுக்கும் இலங்கைக்கு எதிராக செயற்படும் சில சர்தேச அமைப்புகளுக்கும் அடிபணிந்து அவற்றின் அடிவருடிகளாக இருந்து கைகட்டி அவ்வமைப்புக்கு சேவை செய்வதே அவற்றின் நோக்கமாகும்.
இத்தகைய ஆபத்து உருவாகுவதை தடுக்க வேண்டுமாயின் நம்நாட்டு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தங்களுக்கிடையில் இருந்துவரும் சிறு மனத்தாங்கல்களையும் மறந்து ஐக்கியப்பட வேண்டும். அவ்விதம் செய்தால் எங்கள் நாட்டில் இனவாதத்திற்கு தூபமிடும் இந்தத் தேசத்துரோக சக்திகளின் முயற்சிகள் படுதோல்வியில் முடிவடையும்.
1983ம் ஆண்டிலும் இவ்விதம் நம் மக்கள் ஒன்றுபட்டு செயற்பட்டிருந்தால் ஜூலை கலவரத்தின் தாக்கத்தை அவர்களால் நிச்சயம் குறைத்திருக்க முடியும். அன்று சிங்கள மக்கள் தமிழர்களை தாக்கவில்லை. தமிழர்களுக்கு தீங்கிழைத்தது அரசியல்வாதிகளின் குண்டர்களும் அவர்களின் அடியாட்களுமேயாகும். அன்று சிங்களவர் தமிழர்களை காப்பாற்றாமல் இருந்தால் 1983ல் ஒரு தமிழர் கூட கொழும்பு உட்பட சிங்கள கிராமங்களில் உயிர்தப்பியிருக்க முடியாது.
இப்படியான அவல நிலை நாட்டுக்கு ஏற்படுவதை தடுக்க வேண்டுமாயின் அரசாங்கம் இவ்விதம் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டிவரும் சமூக விரோத சக்திகளுக்கு எதிராக எங்கள் நாட்டின் சகல இன மக்களும் ஒன்றிணைந்து எதிர்ப்பை தெரிவிப்பது அவசியமாகும். அதன் மூலமே 30 ஆண்டு கால யுத்தத்தில் இலங்கை வென்றெடுத்த புனிதமான சுதந்திரத்தை நாம் பேணிப்பாதுகாக்க முடியும்.
0 comments :
Post a Comment