Friday, January 18, 2013

சிங்கள - முஸ்லிம் பிளவு தொடர்ந்தால் நாடு என்னாகும்? - வினா தொடுக்கிறார் விமல்!

முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதோடு இலங்கைக்கு எதிரான வெளிநாட்டுச் சதிகளும் இன்னும் எழுந்தவண்ணம் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவிக்கிறார்.

சர்வாதிகாரச் சதிகளினால் சிராணி பண்டாரநாயக்காவின் ஒரு பகுதி மாத்திரமே முடிவடைந்துள்ளது. இன்னுமின்னும் நடிகர் நடிகையர் மேடைக்கு வரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரியில் ‘யுத்தத்தின் பின்னரான இலங்கையும் குற்றப் பிரேரணையும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.

உலகின் பலம் வாய்ந்த அரசியலில் சீன தேசத்து ஏகாதிபத்தியத்தை அண்மித்துள்ள, மேற்கத்தேய அதிகாரங்களுக்கு சளைக்காத ஆட்சி நடாத்துகின்ற நாடாக இலங்கை கண்டு கொள்ளப்பட்டுள்ளதாகவும், சீனாவுக்கு எதிரான பாரிய உபாயங்களுடன் கூடிய பனிப்போரில், இலங்கையில் மேற்கத்தேயத்தோடு உள்ளடக்கப்பட்ட ஆட்சியொன்று தேவை என்று கருதப்படுகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

சரத் பொன்சோக்கா ஜனாதிபதித் தேர்தலில் தோற்றதும் அவரைக் கைப்பிள்ளையாகக் கொண்டு, இலங்கை போர்க் குற்றங்கள் புரிந்த நாடு என்பதை சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்வைக்கக் கூடிய முக்கிய சாட்சியாக்கிக் கொண்ட அவர்கள், சிராணி பண்டாரநாயக்காவை வீட்டிற்கு அனுப்பியது கூட இலங்கையின் நீதித் துறையில் சுயாதீனத் தன்மை இல்லை என்ற பொய்க்கருத்தை சர்வதேசத்தில் விதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தமக்கு ஒத்துழைக்காத தற்போதைய அரசாட்சியை சூட்சுமமான முறையில் வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதே அவர்களின் அடுத்த முக்கிய எதிர்பார்க்கையாக இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர்,

இந்நாட்களில் நாங்கள் சிங்கள - முஸ்லிம் மக்களிடையே பிளவினைக் கண்டுகொண்டிருக்கிறோம். இந்நிலை தொடர்ந்தால் இனப்பிரச்சினையாக இது தலைவிரித்து கடைசியில் நாட்டின் அரசியலுக்கும் நாட்டுக்கும் ஆதரவு வழங்குகின்ற அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் அரசாங்கத்திலிருந்து போய்விடுவார்கள். பரிசுத்தமான ‘சிங்கள பௌத்த இராச்சிய’ எண்ணக்கருவை வளர்த்துச் சென்று யாரோ ஒரு பௌத்த மதகுரு நாட்டு ஜனாதிபதித் தேர்தலில் ஈடுபட முடியும்.

அந்தமுறையில் இந்த நாட்டிலுள்ள வாக்களிக்கும் முறை துண்டு துண்டாக வெட்டப்பட்டு வேறொரு ஆட்சியொன்றை கட்டியெழுப்பி, தற்போதைய ஜனாதிபதி உட்பட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், புதிய ஆட்சிக்கான பலத்த கரகோசத்துக்கு மத்தியில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment