உடல் கிருமிகளை அழிக்கும் பூவரசு!!!
பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால் இதன் பெயர் பூவரசு என்று அழைக்கப்படுகிறது. கிராமங்களில் வீடுகளில் முற்றத்திலும், தோட்டங்களிலும் பூவரசு மரம் இன்றும் இருப்பதை நாம் காணலாம். பூவரச மரம் மருத்துவப் பயன் கொண்ட மரமாகும். நூறாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.
இது இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாக உள்ளது. இதன் இலை, பூ, காய், விதை பட்டை என அனைத்து பாகங்களும் பயன்கொண்டவை.
பொதுவாக பூவரசம் மரம் நான்கு வகைப்படும். இதில் வருடம் முழுவதும் பூத்துக் காய்க்கும் மரம்தான் நாட்டுப் பூவரசு.உடலின் பெரிய உறுப்பான சருமத்தைப் பாதுகாத்தால்தான் நோய் என்னும் அரக்கன் உள்ளே நுழைய முடியாது. இந்த சருமத்தைப் பாதுகாக்க பூவரசம் பட்டையை பொடித்து சலித்து அதனுடன் சந்தனத் தூள் அல்லது வில்வ கட்டைத் தூள் கலந்து சருமத்தில் மீது பூசிவந்தால் சருமத்தில் உண்டாகும் சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்கள் அகலும்.
பூவரசங்காயை இடித்து சாறு பிழிந்தால் இலேசான பசபசப்புடன் மஞ்சள் நிற சாறு வரும். இதை முகத்திலுள்ள கறுப்புப் பகுதிகள், செயின் உராய்வதால் உண்டான கறுத்த பகுதிகளில் தடவினால் கருமை மாறும்.
நூறு வருடங்களுக்கு மேல் உள்ள பூவரசம் பட்டை இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும். சிவப்புக் கலராக காணப்படும். சித்தர்கள் இந்தப் பட்டையை காயசித்தி தரக்கூடிய மூலிகை என்கின்றனர். இந்த நூறு வருட மரத்தின் பட்டையை இடித்து சாறு எடுத்து மூன்று மண்டலங்கள் அருந்தி வந்தால் காயசித்தி கிடைக்கும்.
ஆண் பெண் இருபாலரும் அருந்தலாம். பழங்காலத்தில் பெண்கள் கருத்தரிப்பை தடுக்க பூவரசம் பட்டையை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்துள்ளனர். இது கருத்தடை சாதனத்திற்கு இணையானது. கருப்பைக் கோளாறுகளை நீக்கும். ஆண்களுக்கு ஆண்மையை வலுப்படுத்தும். மூலக்கிருமிகளை அழிக்கும்.
குணம் - நூறாண்டுகள் சென்ற பூவரசம் வேர் நாட்பட்ட பெருநோயை நீக்கும். பழுப்பிலை, பூ, விதை, காய், பட்டை முதலியவை பழுத்த புண், காணாக்கடி, குத்தல், விடபாகம், பெருவயிறு, வீக்கம், கரப்பான், சிரங்கு, வெள்ளை இவைகளைப் போக்கும் தன்மை கொண்டது.
உடலின் செயல்பாட்டிற்கு ஊக்க சக்தியை அளிப்பது கல்லீரல்தான். இந்த கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் பலவகையான இன்னல்களை சந்திக்க நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த வேண்டியது அவசியம். கல்லீரலின் பலவீனம்தான் மஞ்சள் காமாலை நோயின் தாக்கம்.
பூவரச மரத்தின் பழுத்த இலை இரும்புச் சத்து நிறைந்தது. பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.
அகத்தியர் தன்னுடைய அகத்தியர் மேகநோய் சிகிச்சை படலத்தில் உடல் கிருமிகளை அழிக்க வல்ல சக்தி கொண்டது பூவரசு என்கிறார். இதன் காயை இடித்து சாறு எடுத்தால் பசபசப்புடன் பால் இருக்கும். இது மேக நோய்களை போக்க சிறந்த மருந்தாகும். இது சித்தர்கள் கண்ட அனுபவ மருந்தாகும். பூவரசம் காயிலிருந்து உண்டாகும் ஒருவித மஞ்சள் நிறமுள்ள பாலை தோலின் மீது தடவினால் எச்சில்தழும்புகள் மாறும். மூட்டு வீக்கங்களுக்கு பூச வீக்கம் கரையும். பூவரசம் பட்டை, எண்ணெயினால் வெள்ளை நோயும், சரும நோயும் நீங்கும்.
0 comments :
Post a Comment