Friday, January 11, 2013

‘யுத்தத்திற்கே முடியவில்லை நாட்டைப் பிரிக்க... வேறு முறைகளில் பிரிக்க முனைவது வெறும் பகற்கனவே’ என்கிறார் மகிந்தர்

யுத்தம் செய்து பிரிக்க முடியாத இந்த நாட்டை வேறு வழிமுறைகளைக் கொண்டு பிரிக்க முனைவது வெறும் பகற்கனவென அவர்களுக்குக் குறிப்பிடுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். இராணுவ சேவை அதிகார சபையின் மூலம் அலரி மாளிகையில் நடாத்தப்பட்ட ‘ரணவிரு அபிமன் உபகார’ விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இந்தக் கருத்தை ஜனாதிபதி முன்வைத்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இன்று நாட்டைக் குட்டிச் சுவராக்குவதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்குக் கிடைக்கும் டொலர்கள் எங்களை போர்க் குற்றவாளிகளாக உலகிற்குக் காண்பிப்பதற்காக அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

‘இராணுவத்தினரை நீதிமன்றங்களுக்கு கொண்டுசெல்வதற்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நமது நாட்டில் தலையிட்டு எங்களுக்கு எதிராகச் செயற்படுமாறு அவர்கள் கூறிவருகிறார்கள். எல்.ரீ.ரீ. ஈ யினரிடம் போர் புரிவதற்குத் தேவையான பணம் இருந்தது. இப்போது அவர்கள் அந்தப் பணத்தை எங்கள் நாட்டுக்கு எதிராகச் செயற்படுவதற்குப் பயன்படுத்தி வருகின்றனர். திரைப்படங்கள் தயாரிக்கிறார்கள். புத்தகங்கள் எழுதுகிறார்கள். அரசியல்வாதிகளை இணைத்துக் கொள்கிறார்கள். இன்று அவர்கள் ஐரோப்பிய நாடுகளில் சிலவற்றில் மிகவும் பலம் வாய்ந்த சக்தியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையுள்ளது. ஆட்சியமைக்க முடியும். எங்களையும், இராணுவத்தினரையும் போர்க்குற்றவாளிகள் எனக் காட்டுவதற்காக அவர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

நீங்கள் போரிட்டு வெற்றிகொண்ட நாட்டை, நாட்டின் சுதந்திரத்தை அழிப்பதற்கு யாருக்கும் இடமளிக்க வேண்டாம். சில அரசாங்கங்கள் முப்படைகளில் ஆட்களை நியமிப்பதற்கு பயப்படும். யுத்தம் முடிவடைந்ததும் இராணுவத்தினருக்கு என்ன செய்வது? என்று அந்நாடுகள் எண்ணுகின்றன. யுத்தத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது தெளிவானதும் சில தூதுவராலயங்கள் இப்போது இந்த இராணுவத்தினருக்கு என்ன செய்வது? என்று எங்களிடம் கேட்டன. பெரியதொரு இராணுவத்தை சம்பளம் கொடுத்து வைத்திருப்பது நாட்டுப் பொருளாதாரத்திற்கு பெரும் பாரம் அல்லவா? என்றும் அவை கேட்டன’ என்றும் சொன்னார்.

(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment