Sunday, January 6, 2013

நான்தான் சட்டம் என ஆட்சியாளர் எண்ணும்போது ஜனநாயகம் அழிகிறது - சுனில் ஹந்துன்னெத்தி

(கலைமகன் பைரூஸ்) நாங்கள் நீதியான ஆட்சியாளர்கள் என்று எண்ணக்கூடிய எந்தவொரு நாட்டிலும் ஜனநாயகம் அழிந்தே செல்கிறது என்றும், அந்தமுறைதான் எமது நாட்டிலும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிடுகிறார்.

அவர் இதுபற்றி நேற்று (05) பிற்பகல் மத்தேகொடவில் நடைபெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த மக்கள் மனு நிகழ்வில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும்,

‘நாங்கள்தான் சரியான ஆட்சியாளர்கள் என்று நம்புகின்ற எந்தவொரு நாட்டிலும் ஜனநாயகத்திற்கு அழிவே நிகழ்கிறது. இன்று இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பதும் இதுதான். இன்று ராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டின் நீதியாளர்கள் தாங்கள்தாம் என நினைத்துக் கொண்டு ஆட்சி நடாத்திக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் நீதியை நடைமுறைப்படுத்துபவர்களும் சட்டங்களைப் பிறப்பிப்பவர்களும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் கட்டளைகளுக்குச் செவிசாய்ப்பவர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களும் இந்த முறையிலேயே உள்ளன. அதனால்தான் நாங்கள் மக்கள் முன்னணியாக ஜனநாயக மக்கள் முன்னணியாக, அதற்கு பொது மக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்பதை ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்குக் காட்டவே, நீதியாளர்கள் தாங்கள்தான் என்று நினைப்பவர்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கவே மக்கள் கையொப்ப மனு நிகழ்வை நடாத்திச் செல்கிறோம்.

இன்று விசேடமாக மத்தேகொட பிரதேசத்தில் வாழும் அரசாங்கத்தில் தொழில்செய்கின்ற, தனியார் பிரிவில் தொழில் செய்கின்ற கல்வியியலாளர்கள் கூடுதலானோர் இதற்குச் சமுகந்தந்துள்ளனர். அவர்களும் இதில் கையொப்பமிட்டுள்ளார்கள். காரணம் மக்களுக்கான ஆட்சியே மக்களாட்சி என்றால் பிரதம நீதிபதிக்கெதிரான குற்றச்சாட்டை விரைவாக நீக்குமாறு கூறி, மக்களே இப்போது நீதி வழங்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அந்தக் குரல் ஓங்கித்தான் இன்று இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. அதனை நாம் நாடளாவிய ரீதியில் பிரதான நகரங்கள் தோறும், கிராமங்கள் தோறும் முன்னெடுத்துச் செல்லவும் தயாராகிக் கொண்டிருக்கிறோம்’ என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment