ராக்கெட் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி: விண்வெளிக்கு குரங்கை வெற்றிகரமாக அனுப்பியது ஈரான்
செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. இப்போது, மேற்கத்திய நாடுகள் மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடும் வகையில், உயிருள்ள குரங்கை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பியிருப்பதாக ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கவாஷ்கர் ராக்கெட் மூலம் குரங்கு அனுப்பப்பட்டதாகவும், அது 120 கிலோ மீட்டருக்கு மேல் சென்று பின்னர் பத்திரமாக திரும்பியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குரங்கு உயிருடன் திரும்பி வந்ததாக உள்ளூர் தொலைக்காட்சியும் தெரிவித்துள்ளது.
ஆனால் பாதுகாப்பு அமைச்சகம் இதனை உறுதிப்படுத்தவில்லை. நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி கடந்த வாரம் இந்த சோதனை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்த நாளில் சோதனை நடத்தப்படும் என்று குறிப்பிடவில்லை.
கடந்த 2011-ம் ஆண்டு குரங்கை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருப்பதாக ஈரான் அறிவித்தது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இப்போது மீண்டும் அந்த முயற்சியில் வெற்றி கண்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதனை மறுத்துள்ள ஈரான், அமைதியான ஆற்றலுக்காக மட்டுமே அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறுகிறது.
0 comments :
Post a Comment