Saturday, January 12, 2013

மீண்டும் அவுரேலியாவின் அதிரடிக்கு பணிந்தது இலங்கை அணி தொடர்கிறது தோல்வி

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் ஒருநாள் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் குவித்தது. ஒருநாள் போட்டியில் அறிமுகமான பிலிப் ஹக்ஸ், தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.


தொடக்க ஆட்டக்காரரான அவர் 112 ரன்கள் சேர்த்து அணிக்கு வலு சேர்த்தார். இதேபோல் கேப்டன் பெய்லி 89 ரன்களும், ஹஸி 60 ரன்களும் (நாட் அவுட்) விளாசினர்.

இதையடுத்து 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. தரங்கா ஒரு ரன்னிலும், ஜெயவர்தனே 5 ரன்னிலும் அவுட் ஆகினர். அதன்பின்னர் பொறுப்புடன் ஆடிய தில்ஷான், 51 ரன்கள் அடித்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

4-வது வீரராக களமிறங்கிய சண்டிமால் நிதானமாக, அதேசமயம் அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திக்கொணடிருந்தார். ஆனால், மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ஸ்கோர் 169-ஐ தொட்டபோது, சண்டிமால் வெளியேறினார். அவர் 95 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 73 ரன்கள் சேர்த்தார்.

சண்டிமாலைத் தொடர்ந்து பெரைரா, குலசேகரா, மென்டிஸ் ஆகியோரும் விரைவில் பெவிலியன் திரும்ப, இலங்கை அணி 40 ஓவர்களிலேயே 198 ரன்களுக்குள் சுருண்டது. இதனால், 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் மெக்கே அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஹக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது போட்டி அடிலெய்டில் 13-ம் தேதி நடக்கிறது.


No comments:

Post a Comment