சஜித்தை பிரதித் தலைவராக்குவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறார் ரணில்
ஐதேகவின் பிரதித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், கட்சியின் திட்டங்களுக்கேற்ப செயற்பட வேண்டும் என்று பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு தெரிவித்திருக்கிறார் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
சிறிக்கொத்த, ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தில் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க, உப தலைவர் ஜோசப் மைக்கல் பெரேரா, தலைவர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க, பொருளாளர் செனரத் கப்புகொட்டுவ, தேசிய அமைப்பாளர் தயா கமகே ஆகியோர் ஒன்றிணைந்த கலந்துரையாடலின் போதே இந்தக் கருத்தை கூறியுள்ளார்.
கட்சி முன்னெடுக்கவுள்ள திட்டங்களுக்கு ஏற்ப செயற்படுவதற்கு தயாராக சஜித் பிரேமதாச இருக்கிறார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதன் முதற் கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை வரக்காபொலவின் நடைபெறவுள்ள உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நிகழ்வில் ரணில் விக்கிரமசிங்கவுடன் சஜித் பிரேதாசவும் கலந்துகொள்ளவுள்ளார்.
எது எவ்வாறாயினும், எதிர்வரும் நாட்களில் ஒன்றுகூடவுள்ள உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நிகழ்வில் பிரதித் தலைவர் பதவி சஜித் பிரேதாசாவுக்கு வழங்கப்படுவதற்கான ஏகமனதான முடிவு இல்லை என்றும், அதுபற்றிய விசேட கூட்டமொன்று எதிர்வரும் திங்கட் கிழமை நடைபெறவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கட்சியின் சட்டக்கோவைக்குப் புறம்பாக செயற்படக்கூடிய அதிகாரம் எவருக்கும் இல்லை என்றும், பிரதித் தலைவர் பதவியை சஜித் பிரேதாசவுக்கு வழங்குவதில் தமக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லையென்றும் ரணில் விக்கிரமசிங்க அங்கு குறிப்பிட்டிருக்கிறார். என்றாலும் கட்சியின் தலைவருக்கும் கட்சியின் கொள்கைகளுக்கும் உந்துசக்தியையும், ஆதரவையும் வழங்க வேண்டியது பிரதித் தலைவரின் கடப்பாடு என்றும் அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment