தமிழ்தேசிய சுலோகங்களாகும் கலாச்சார சீரழிவு!
யாழ்ப்பாணத்தில் கலாசாரம் சீரழிந்து செல்கிறது என்பதைப் போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போவது இன்று கிட்டத்தட்ட தமிழ்த் தேசிய அதிதீவிர சுலோகங்களில் ஒன்றாக ஆக்கப்பட்டுவிட்டதைக் காணமுடிகிறது.எந்தவித புள்ளிவிபர நிரூபிப்போ ஏனைய இடங்களுடன் - உலகமய மாற்றங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்ததாகவோ இல்லாமல் பொடுபோக்காக அந்தக் கவலையை வெளியிடுவது ஒரு தமிழ்த் தேசிய அக்கறை என்பதாகக் காட்டப்படும் ஒரு போக்கு நிலவுகிறது.
அரசாங்கத்தையும் யாழ்ப்பாணம் வந்துசெல்லும் ஏனைய சமூகத்து மக்களையும் குற்றம் சாட்டுவதாக நினைத்துக்கொண்டே பெரும்பாலோர் இந்தக் கருத்துதிர்ப்பைச் செய்கிறார்கள். சமீபத்தில் யாழ்ப்பாணம் வந்துபோன முன்னாள் நீதியரசர் ஒருவரும், யாழ்ப்பாண உயர்குடியினரையும் ஊடகங்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் என்ற முரண்நகையைத் தெரிந்துகொண்டு, இதேவகையான விஷத்தை ஏதோ சமூக அக்கறைபோல உமிழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
யாழ். குடாநாட்டில் திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெறுவதாகவும், எமது அருமந்த இளைஞர்களும் யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கைமுறைக்கு திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுகிறார்கள் என்றும் இந்த மக்கள் மீதான அவரது உச்சபட்ச அக்கறையை வார்த்தைகளிலேயே விளம்பிவிட்டுப் போயிருக்கிறார்.
அத்துடன் அவரது ஆய்வு நிற்கவில்லை. 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (அதாவது 2009க்கு முன்னர்) இங்கு இரவு 12 மணிக்குக்கூட பெண்பிள்ளைகள் பாதுகாப்பாக நடமாடக்கூடியதாக இருந்ததாகவும், இன்று வீட்டுக்குள் இருக்கும்போதே என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பயத்துடனிருப்பதாகவும் உணர்ச்சிகரமாகக் கவலையை வெளியிட்ட போது, சாக்குக்குள்ளிருந்து பூனை வெளியே குதித்துவிட்டது.
அதாவது புலிகள் காலத்தில் எந்த அடக்குமுறையும் இல்லாமல் மக்கள் இங்கு ஜனநாயக சுதந்திரச் சூழலை அனுபவித்ததாக அவர் சொல்கிறார். அந்தக் காலகட்டத்தில் அவர் ஓய்வுபெற்றுவிட்ட நீதியரசர் என்பதால், அவர் ஏன் வடக்கில் வந்திருந்து சுதந்திரக்காற்றைச் சுவாசித்தபடி வாழ்ந்திருக்கவில்லை என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
அதுமட்டுமில்லை படித்தவர்கள், வசதி படைத்தவர்கள், தமிழ் மக்களுடன் வாழ்ந்திருந்து அவர்களுக்கு நல்லது கெட்டதைச் சொல்லியிருக்க வேண்டியவர்களெல்லாம் புலிகளின் ஆளுகைப் பிரதேசத்திற்குள் நில்லாமல் வெளியிலேயே போய் நின்றுகொண்டது ஏன் என்ற கேள்விக்கும் பதில் வேண்டும்.
இப்போதிருப்பதைவிட அதுதான் ஜனநாயகமும் சுதந்திரமுமான சூழ்நிலை என்றால் இங்கேயே வாழ்ந் திருந்துகொண்டு இப்போது சீரழிவுகளை எதிர்த்துப் பேசமுடிவது போல அப்போதும் பேசியிருக்கலாமே!
புலிகளின் காலத்துச் சீரழிவுகளைப் பேசவே முடியவில்லை; புலிகள் கொன்றுவிடுகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு பயத்தில் வெளியேறியவர்களை விட்டுவிடலாம். ஆனால் நல்லாட்சி நடந்து கொண்டிருப்பதாக நம்பியவர்கள் வெளியே போயிருந்துவிட்டு, இப்போது இங்கே வந்து அதுவல்லவா பொற்காலம் என்று சொல்வதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.
இன்றைய யாழ்ப்பாணத்தின் சீரழிவு என்பதும் மற்றெல்லா இடங்களிலும் உள்ளதுபோல உலகமயமாக்கம் மற்றும் நுகர்வுக் கலாசாரத்தின் கட்டுக்கடங்காத வளர்ச்சி ஆகியவற்றினால் வருவது. ஒரு புள்ளிவிபரத்தின்படி சென்ற ஆண்டு சுமார் 55,000 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்து சென்றுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 5,000 டொலர்களை இலங்கையில் செலவிட்டிருந்தால், அந்தப் பணம் உண்டுபண்ணியிருக்கும் தாக்கத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம். அதீதமான பணப் புழக்கமும், உழைப்பின் அவசியத் தைப்பின்னுக்குத் தள்ளி, நுகர்வுக் கலாசாரத்தை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது என்பது உண்மை.
எனவே யாழ்ப்பாணத்தில் இன்று ஏற்பட்டிருக்கும் கலாசாரச் சீரழிவுகளின் அதிகரிப்புக்கு மற்றவர்களைக் குறை கூறுவதை விடுத்து, எம்மிடம் உள்ள குறைகளைக்களைய முயற்சிக்க வேண்டும். இவற்றை ஏற்படுத்திவிட்டதில், வர்த்தக நிறுவனங்கள், வெளிநாட்டு சக்திகள் என்போருடன், புலம்பெயர் தமிழர்களுக்கும் பெரும்பங்கு உண்டு என்பதே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
2 comments :
Now everything being commercialized
Some medias use their propaganda machines specially for their commercial purposes.They are now well experienced in changing their tones accordingly when they give the well designed news items to their beievers by blaming the country blaming a group of people,blaming the security forces for the ill of the northern province.They like this situation to remain for ever and ever.it would be an advantage for their commercial purposes.This matter is purely depend in the hands of jaffna people.They should very cleverly decide how to wipe out the social disasters from the society.Heads of the schools,Heads of reponsible institutions academics,well fare mninded people must get together and put an dead end to this dangerous disasters.If not we will face unimaginable amount of tragedies in our lives.
நீங்கள் எவ்வளவு குரை த்தாலும் எங்கட பொடியளின் ஆட்சி பொன் ஆட்சிதான்
Post a Comment