எதிர்ப்பரசியலின் கதாநாயகன் போராளி
தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் போராளிக்குழு உருவாகும் என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள், எங்கோ சொல்லியிருப்பதை வழக்கம் போல தமிழ் ஊடகங்கள் தூக்கிப்பிடித்துக் கொண்டாடியுள்ளன. அவர் சொல்லியிருப்பதிலுள்ள ஆபத்து எந்த மக்களின் மேல் விடியும் என்பதைப் பற்றி எந்த சிந்திப்பும் இல்லாமல், இவர்களின் இன்றைய எதிரியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை முன்னாள் ஜனாதிபதி மிரட்டுவது ஒன்றே இவர்களது குதூகலத்துக்குப் போதுமானதாயிருக்கிறது.
யார் சொல்வதாக இருந்தாலும், இவ்வளவுக்குப் பிறகும் தமிழ்மக்கள் மீண்டும் ஒரு போராளிக்குழுவை உருவாக்குவார்கள் என்று வீறாப்புச் சொல்வதென்பது தமிழ்மக்களுக்கு மீண்டும் மீண்டும் அழியும் உத்தியைத் தவிர அவர்களிடம் வேறெந்த உபாயங்களும் தோன்றாது என நம்மை எள்ளிநகையாடுவதல்லவா?
மீண்டும் நாம் போராளிக் குழுவை உருவாக்குவோம் என்று சவால்விட்டு, யார் பயந்து நடுங்கிவிடப் போகிறார்கள் என்று நாம் மனப்பால் குடிக்கிறோம்? சந்திரிகாவுக்கு மகிந்தவின் பதில், உருவாக்குங்கள்; அதேபோலவே அழித்துவிடுவோம் என்பதாக இருந்தால், அவலப்படப் போகிறவர்கள் யார்? மீண்டும் புலிகளை உருவாக்கி, மக்களை யுத்தத்தினுள் வாழவிட்டு வேடிக்கை பார்ப்பதில் என்ன புளுகம் எங்கள் ஊடகங்களுக்கு?
நமது மக்களினது வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள் ளும் இன்றைய யதார்த்த சூழலுக்கேற்ற வழிமுறைகளைப் பற் றிய சிந்திப்பு நமக்கு வரவே வராதா? வெறுமனே உணர்ச்சிகர வாய்ச்சவடால்களிலேயே காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பதால் கஷ்டங்களில் வாழ்பவர்கள்- தொடர்ந்தும் கஷ்டப்படப் போகிறவர்கள் யார் என்றெல்லாம் நாம் நினைத்தே பார்க்க மாட்டோமா? இலங்கை அரசையும் அதன் பின்னாலிருக்கும் பெரும் பான்மை சமூகத்தையும் திட்டிக்கொண்டும் மிரட்டிக்கொண்டும் இருக்கும் அந்தத் திருப்தியே போதும் என்று சிலர் வீரவசனங்களை அள்ளிவிட்டபடியே இருக்கிறார்கள்.
ஆனால் தமிழ் சமூகத் திற்கு அதுவே போதுமானதா என்று இனி கேட்கப்பட வேண்டும். அடுத்தது என்ன? மீண்டும் போராளிக்குழு உருவாகும் என்பது எவ்வளவு நயவஞ்சகமான பேச்சு!
அதுவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பதவியில் இருக்கையில், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக சமஷ்டிக்கு இணையான ஒரு திட்டத்தை வைத்தபோது, அதைத் தமிழ்த் தலைவர்கள் கொளுத்தியதைக் கொண்டாடியும், சந்திரிகாவை தமிழ் மக்களின் விரோதியாகச் சித்தரித்தும் எழுதியவைதான் இந்த ஊடகங்கள்.
அதேபோலவே, மகிந்தவுடன் பேசமுடியாது; தெரிவுக்குழுவில் பிரயோசனமில்லை; இன்றைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதே இலக்கு என்று ஆர்ப்பாட்டமிடுவதும், நடைமுறைச் சாத்தியத்தையோ பின்விளைவுகளையோ சிந்திக்காமல் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று உதார் விட்டுக்கொண்டிருப்பதும் தான் ஊடகப்பொறுப்பாகக் கருதிக்கொள்ளும் போக்கு இங்கே தொடர்கிறது.
மகிந்தவையும் பதவியில் இருக்கும்போது இவ்வாறு எதிர்த்துக் கொண்டிருக்கும் இவர்கள், பின்னால் அவர் பதவியிலிருந்து விலகிவிடும் காலத்தில், அவர் உதிர்க்கப்போகும் கருத்துக்களைத் தூக்கிக் கொண்டாடவும் கூடும் - சந்திரிகாவை இப்போது தமிழ் மக்களுக்குப் போராட்ட வழிமுறையைச் சொல்லித்தருபவராக இவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டதைப் போல!
இந்த நாட்டில் பதவியில் இருக்கும் அரசாங்கத்துடனும், பதவியில் அமர்த்திய மக்களுடனும் உரையாடுவதன் வழியாகவே நாம் இணைந்தொன்றாய் வாழ்வதற்கான தீர்வைக் காணமுடியும். எப்போதும் அதற்கு வெளியே உள்ளவர்களுடனேயே நின்று கொண்டு எதிர்ப்பரசியல் செய்துகொண்டிருப்பதானது, இங்கு பிரச்சினையை நீடிக்கவைத்து அதில் லாபமடைந்து கொள்வோ ரின் போக்காக இருக்கும்.
1 comments :
Ex madam President is trying to give a wrong defnition to the present crisis by making the situation frying pan to fire.
Post a Comment