“தமிழ் மக்களுடன் பேசினால் தங்களுடனும் பேசவேண்டும். தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்று வழங்கப்பட்டால் தமக்கும் தீர்வு வேண்டும். தமிழ் மக்களுக்கு உலக நாடுகள் உதவி செய்தால் அதில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று வெட்கமில்லாமல் கையேந்துகின்ற முஸ்லிம் தலைமைகள், தமிழ் மக்களுடன் இணைந்து விடுதலைக்காகப் போராடியிருந்தால் அவர்களின் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்திருக்கும். அதொன்றையும் செய்யாமல் இன்று தமிழ் மக்களுடைய உதவிகளில் பங்கு கேட்பது எந்த வகையில் நியாயமென்பதை முஸ்லிம் தலைமை உணராமலிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல”
இது 30.12.12- 07.01.13 க்கான ஈழமுரசு பத்திரிகையின் (பிரான்ஸ் பதிப்பின்) “தமிழர்கள் மீது அபகரிப்பு யுத்தம் சிங்களத்துடன் முஸ்லீம்களும் கூட்டு!” என்ற மிக முக்கிய தலைப்பிலான கட்டுரையின் சுருக்கம். அதாவது இலங்கையின் தமிழ் புலிகளுக்கும்- இலங்கை அரசாங்கத்துக்குமான நீண்டகால ஆயுத யுத்தத்தில் உள்ளக ரீதியில் இடப்பெயர்வுக்குற்பட்டவர் (Internally Displaced People)களுக்கான இந்திய அரசாங்கத்தின் 50,000 வீடுகள் என்ற நிவாரண ஏற்பாடுகளில் நடப்பதாகக் ஈழத்தில்(?) இருக்கும் வீரமணி கருதும் அநீதிக்கு எதிரான அவரின் குமுறல்.
இந்த குமுறலின் நியாயத் தன்மைகளை பார்க்கமுன் இந்த உள்ளக இடப்பெயர்வுக்கு உற்பட்டோர் அல்லது உள்ளக அகதிகள் யாரென அடையாளம் காண்பது முக்கியமாகும். இவர்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. புலிகளால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட சோனகர்கள் (சமய நம்பிக்கையால் முஸ்லீம்கள்).
2. அரசாங்கத்தின் யுத்த நடவடிக்கை காரணமாக கட்டாய வெளியேற்றத்துக்குற்பட்டவர்கள்,
3. புலிகளை நம்பி (சுய தெரிவில்/பயத்தில்) தம் பாதுகாப்புக்காக அவர்கள் பின்னால் சென்றவர்கள்
4. அரசாங்க உத்தரவாதத்தை நம்பி (சுய தெரிவில்/ இனி புலிகளை நம்பி பிரயோசனமில்லை என்ற நிலையில்) அரச கட்டுப்பாட்டு (முகாம்) பகுதிக்குள் வந்தவர்கள்.
ஏதோ ஒருவகையில் இவர்கள் அனைவருக்கும் நிவாரணம் அளிக்கப்படுவது இன்றைய முக்கிய கடமைகளில் ஒன்று. இலங்கையின் தொடர்ச்சியான அமைதிக்கு இது இன்றியமையாதது. ஆனால் நடப்பது என்ன? சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கவிடமாட்டார் என்பது போல் விடயங்கள் நடந்தேறுவதாகவே நோக்கப்படவேண்டியுள்ளது.
இந்த வீட்டு நிவராணம் கொடுப்பவர்கள் மிகத்தெளிவாக ”உள்ளக இடம் பெயர்ந்தோர்/அகதிகள்” (Internally displaced/refugees) என்று சொல்லியுள்ள போதும் அவர்களை ” இடம் பெயர்ந்த தமிழர்/தமிழ் அகதிகள்” (displaced Tamils/Tamil refugees) என்று காரணமில்லாமல் அர்த்தப்படுத்தியுள்ளது பிரச்சினைக்கு முக்கிய காரணமாகும். அதிலிருந்து எழுந்ததே வீரமணியின் வீரமில்லா பேச்சும், சாமி கொடுக்கும் வரத்தை பூசாரி தடுப்பதுமான முயற்சியும்.
இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. அதாவது சிங்களவர், தமிழர், சோனகர், பறங்கியர், வேடர் என்று அவரவர்களுக்கு உரித்தான, அவர்களுடையவை என அறியப்பட்ட தனித்துவங்களுடன் வாழும் இனக் குழுமங்களைக் கொண்ட நாடாக அந் நாட்டின் அரசியலமைப்பு கூறுகின்றது. அதை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச சமூகமும் இலங்கையை அப்படித்தான் பார்க்கின்றது. இது மாற்ற முடியாத ஒரு நியதி. இதை மாற்ற முயல்வோர் தோற்றுப்போவார் என்பது முன்னையதை அடிப்படையாகக் கொண்ட அடுத்த நியதி.
ஆகவேதான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் போது அது அங்குள்ள அனைத்து பிரிவினரையும் கருத்தில் கொள்ளவேண்டுமென்ற சர்வதேசத்தின் நிலைப்பாடு. நிலைமை இப்படி இருக்க திடீர், திடீர் என எழும் அடக்கு முறையின் இத்தகைய சலசப்புகளை பராமுகமாக விடமுடியாதுள்ளது. அல்லது இது “யாரோ” ஒருவர் “ஏதோ” ஒரு பத்திரிகையில் சொன்ன “என்னவோ” ஒன்றாகவும் எடுக்கமுடியாதுள்ளது. ஆகவே இந்த இடம்பெயர்ந்தோருக்கான இந்திய வீட்டு விவகாரதில் ஏற்படுத்தப்படும் செயற்கையான இந்த முட்டுக்கட்டை முயற்சிக்கு, அடக்கு முறையின் சலசலப்புக்கு பதில் கொடுக்கவேண்டிய தேவை தவிர்க்கப்படமுடியாதுள்ளது.
இந்த அடிப்படையில் வீரமணி அநீதியாக சொல்லும் விடயங்கள் உண்மையிலேயே அநீதியானதுதானா என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
அதில் முதலாவது, “தமிழ் மக்களுடன் பேசினால் தங்களுடனும் பேசவேண்டும்” என்று அவர் எதை சொல்ல வருகின்றார் என்பதை சொல்லாததால், வீரமணியின் இந்தக் கவலை அனேகமாக தாய்லாந்தில் ஆரம்பித்து, ஒஸ்லோ ஊடாக, ஐரோப்பிய நாடுகளில் நடந்த “இலங்கையின் இனப்பிரச்சினை” தொடர்பான பேச்சுவார்த்தைகளில், சோனகர்களும் தனித்தரப்பாக கலந்து கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை மேற்கோள் காட்டுவதாகவே படுகின்றது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இலங்கையில் ஏற்பட்டது இனங்களுக்கிடையிலான பிரச்சினை நேரடியாகவும், மறைமுகமாகவும் முக்கியமான மூன்று இனக்களுக்கிடையிலும் ஏற்பட்ட பிரச்சினையாகும். ஆகவே அதில் இரண்டு தரப்பு மாத்திரம் கூடி பேசி எடுக்கும் முடிவுகள் பாதிக்கப்பட்ட அனைவரையும் உள்ளடக்கி எடுக்கப்பட்ட நியாயமான முடிவுகளாக அமையாது என்பதுடன் எதிர்பார்க்காத புது பிரச்சினைகளைக் ஏற்படுத்துவதாகக் கூட அவை அமையலாம்.
இலங்கையில் இரண்டு இனங்களே உள்ளன. அதாவது சிங்களம், தமிழ் என்ற இனங்களுக்குள்ளேயே மற்றைய (உப) இனங்கள் உள்ளடக்கப்படுகின்றன என்ற தப்பான எண்ணப்பாட்டினால் சிங்களம் பேசும் பறங்கியரும், வேடரும் சிங்கள இனத்தினரென்றும்; தமிழ் பேசும் சோனகரும், பறங்கியரும் தமிழ் இனத்தினர் என்ற நிலைப்பாடுமாகும். ஆகவேதான் தேவைப்படும் போது மாத்திரம் சோனகர்கள் அவர்களின் தனித்துவ இன அடையாளம் மறைக்கப்பட்ட நிலையில் “இஸ்லாமிய தமிழர்”களாக அல்லது ” தமிழ் பேசும் முஸ்லீம்”களாக கூறப்பட்டு வேண்டாத போது வெறுமனே அவர்களின் மத அடையாளத்தில் “முஸ்லீம்”கள் என்றும் “இஸ்லாமியர்” என்று சுட்டிக்காட்டப்படுகின்றனர், ஓரங்கட்டப்படுகின்றனர்.
இது புதிதாக நடக்கும் ஒன்றல்ல, திரு. ராமநாதன் காலத்திலிருந்தே கடைபிடிக்கப்படும் ஒருவகை “இன அடாவடி”. இன்னுமொரு தேசிய இனத்தின் மீதான தமிழ் குறுந்தேசியவாதத்தின் அப்பட்டமான அடக்குமுறை. அது ஆரம்பத்திலிருந்து காட்டமாக எதிர்க்கப்படவில்லை என்பதால் அல்லது சோனகரின் மெத்தனப் போக்கால் சோனக இனத்தின் மீதான தமிழ் அரசியலின் கட்டுக்கடங்காமல் வளர்ந்துவிட்ட அத்துமீறல் இது. எனவே இதை தமிழ் அரசியல் தரப்புக்கு தெளிவாக எடுத்து சொல்லுமுகமாகவே “எங்களுடனும் பேசுங்கள்” என்ற நிலைபாடு என்பதோடு ஏன் சோனகர்களுடன் பேசக் கூடாது என்பதற்கு வீரமணியிடம் உள்ள நியாயங்கள் என்னவென்றும் தெரியவில்லை.
அடுத்த அம்சம் “தமிழ் மக்களுக்கான தீர்வொன்று வழங்கப்பட்டால் தமக்கும் ஒரு தீர்வு வேண்டும்”. சோனகர்களின் இந்த நிலைப்பாட்டில் எந்த அநீதியும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழருக்கு இருக்கும் அரசியலை ஒட்டியதான எல்லா பிரச்சினைகளும் சோனகர்களுக்கும் உள்ளன. ஆகவே அரசியல் பிரச்சினை தொடர்பான விடயங்களுக்கு தீர்வுகள் காணப்படும் போது சோனகர்கள் ஒதுக்கிவைக்கப்பட முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
உதாரணமாக 13ம் திருத்தச்சட்டப்படி வடக்கு, கிழக்கு என்ற இரண்டு மாகாணங்கள் வட-கிழக்கு மாகாணம் சபை என்ற ஒற்றை நிர்வாக அமைப்பை பெறும் போது கிழக்கிலுள்ள சோனகரின் நலங்கள் பாதிக்கப்படுமாக இருந்தால் அவர்கள் தங்களுக்கான தீர்வொன்றின் அவசியத்தை கோருவதில் என்ன தப்பு? இதை ஒருபுறம் வைத்துவிட்டு தமிழர்கள் பெற்ற தீர்வென்ன? சோனகர்களின் நியாமற்ற தீர்வு கோருகையினால் எந்தத் தீர்வு தமிழர்களுக்கு எட்டாமல் போனது என்பதையும் கூற தவறிவிட்டார் வீரமணி.
அடுத்த உதாரணமாக 2004 சுனாமி அழிவுக்குப்பின்னான மீள்கட்டமைப்பு ஏற்பாட்டை(P-TOM) கூறலாம். சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கையரில் ஒப்பிட்டு ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டோர் கிழக்கு சோனகர்கள். ஆனால் தமிழ் தரப்பு(புலிகள்) சிங்களத்தரப்பு( இலங்கை அரசாங்கத்து)டன் பேசும் போது எங்களின் நிலை என்ன என்று சோனகர்கள் கேட்ட போது நீங்கள் அரசாங்கத்துடன் பேசி ஏதாவது பண்ணிக் கொள்ளுங்கள் என்றனர் புலிகள். ஆகவே பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் பகுதியினரில் ஒரு பகுதியுடன் பேசுவதும், அந்த அடிப்படையில் முடிவுகள் எடுப்பதும் அது பங்குபற்றாத பகுதியை பாதிக்குமாக இருக்கும் போது அவர்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்று கேட்பது எவ்வகையில் பிழை என வீரமணிக்கு தெரியாமல் போய்விட்டது. அல்லது சோனகர்களுக்கு பிரச்சினைகளே இல்லை ஆகவே அவர்களின் விவகாரங்களில் “தீர்வு” என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறாரா?
அடுத்தவிடயம் “தமிழ் மக்களுக்கு உலக நாடுகள் உதவி செய்தால் அதில் தங்களுக்கும் பங்கு வேண்டும்”, இதுவரை தமிழர்களுக்கென்ற உலக நாடுகளின் தனியான உதவிகள் என்னென்ன அதில் சோனகர்களின் தலையீட்டால் இழந்தவை என்னென்ன என்று வீரமணியால் பட்டியலிடப்படவில்லை என்பதோடு, சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்கின் ஒரு தொகுதி முஸ்லிம்களுக்காக (சோனகர்களுக்காக) சவூதி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 500 வீடுகள் நீதிமன்ற தீர்ப்பொன்றின் மூலம் சிங்கள, தமிழ் இனத்தினருக்கும் வழங்கப்பட்டன. ஆனால் முஸ்லிம்கள் கிளர்ந்தெழவில்லை. அனைத்து முஸ்லீம் நாடுகளிடமும் முறையிடவுமில்லை. ஆனால் இந்த இந்திய நிவாரணம் தொடர்பாக புலம் பெயர்ந்த தமிழரிடம் வீரமணி வேண்டுவது தத்தமது புலம் பெயர் நாடுகளின் அரசாங்கங்களுக்கு இந்த வீட்டு நிவாரணம் தொடர்பாக சோனகர்களின் முறைகேடுகளை தெரியப்படுத்த வேண்டுமென்பதாகும். உலக நாடுகளின் உதவி என்பதன் மூலம் இந்த இந்திய வீட்டு நிவாரனம் பற்றித்தான் வீரமணி கூறுகிறார் என்றால் அதனுடன் நேரடி சம்பந்தப்பட்டுள்ள அகதிகளின் கதையை படித்துவிட்டே வீரமணி தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியிருக்க வேண்டும். அப்போது அது நியாமாகவும் இருந்திருக்கும். நியாயமில்லா காரியத்தை செய்து கொண்டே இந்த வீட்டு நிவாரணம் தொடர்பான சோனக அகதிகளின் நியாயமான கோரிக்கையை “என்ன நியாயம்” என்று பகிரங்கமாக கேட்பதற்கு வீரமணி இனியாவது வெட்கப்படுவாரோ தெரியவில்லை.
இனி நாம் மேலே பிரித்தறிந்த “உள்ளக அகதி”களின் முதல் பிரிவினரைப் பார்த்தால்; உலகவங்கி, நோர்வே அரசாங்கம், மற்றும் உள் நாட்டில் இயங்கும் பல அரச சார்பற்ற(வெளிநாட்டு உதவி) நிறுவனங்கள்(NGOs) களின் அறிக்கைகளின் படி சுமார் ஒரு லட்சம்(100,000) மக்கள் இதற்குள் அடங்குகின்றனர். இவர்கள் 1990ல் யாழ், முலைத்தீவு, மன்னார் பகுதிகளில் இருந்து புலிகளால் வெளியேற்றப்பட்டோர், முன்னறிவித்தல் ஏதுமின்றி இரவோடிரவாக புத்தளம்,கல்பிட்டி(கற்பிட்டி) பகுதிக்குள் அனேகமாக மாற்றுடைகள் இல்லாமல்,கடல் வழியாக வந்திறங்கியவர்கள். ஒப்பீட்டு ரீதியில் வளப்பற்றாக்குறையான புத்தளப் பிரதேசம் தமதொத்தளவிலான அகதிகளை உள்வாங்கியபோது அது ஒரு சுகமான சுமை போல ஆரம்பத்தில் இருந்தாலும் வருடம் ஒன்றாகி, பத்தாகி, இருபதாகிய வேளை இனி தாங்கமுடியாது என்றாகிவிட்டது. விடயங்கள் முற்றி மீண்டும் அவர்கள் பிரிதோர் இடத்துக்கு யூதர்கள் போல் இடம் விட்டு, இடம்விட்டு, இடம் பெயராமல் இருக்கும் பொருட்டு மேற்சொன்ன நிறுவனங்கள் இந்த அகதிகள் அவர்கள் ஏலவே குடியேறிய பகுதிகளில் ஒருங்கிணைப்புக்கு அல்லது சொந்த இடத்தில் மீள் குடியேற்றத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால் இந்த அகதிகள் மாத்திரமல்ல அவர்களுக்கு இதுவரை ஆதரவளித்த வரவேற்பு சமூகமும்(Host Community) சேர்ந்து பாரிய இழப்புகளை சந்திக்க நேரும் என்றனர்.
இன்னும் இரண்டு வருடங்களில் இவர்கள் “அகதிகள்” என்ற நாமம் தாங்கி கால் நூற்றாண்டை கடக்கவிருக்கின்றனர். இந்த பரிதாப நிலை பக்கத்தில் உள்ள இந்தியாவுக்கு தெரியாதென்று நினைத்தாரோ வீரமணி? அவர் தமிழ் நாட்டு மக்களையும் கூவி அழைக்கின்றார். இந்த அநீதிக்கு எதிராக கொதித்தெழுந்து குரல் கொடுக்கவேண்டும் என்கின்றார். தமிழ் நாட்டின் தமிழர்களை வைத்து காரியங்கள் சாதிக்கலாம் என்றால் முழு இந்தியாவிலும் தமிழ் நாட்டு தமிழரை விட கூடதலான முஸ்லிம்கள் இருக்கின்றனர் அவர்களை வைத்து முஸ்லீம்கள் காரியமாற்றலாம் என்று சற்றும் சிந்திக்கவில்லை. காரணம் 1983 தமிழருக்கெதிரான நிகழ்வின் காயங்கள் ஆறும் முன்னரே 1990ல் வடக்கில் இருந்து சோனகர் பலாத்காரமாக வெளியேற்றப்படும் போது சோனகரிடம் எழுந்தது நீங்களுமா? என்ற கேள்வியும், இவர்களுக்கு சுய அறிவு இல்லையா என்பதுமே? இப்படியான கேள்விகள் தான் மீண்டும் எழுகின்றன தமிழ் நாட்டு தமிழரை வீரமணி கொதித்தெழ தூண்டும் போது.
இப்படியே வீரமணி மூன்று வருட (2009 தில் இருந்து) அகதிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மற்றவரெல்லாம் எப்பாடு பட்டாலென்ன என்றது மாத்திரமில்லாமல் மறைமுகமாக ஒரு விடயத்தை சொல்ல வெளிப்படையாக ஒன்றையும் சொல்கிறார். அதாவது அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தனது கட்சி பிரமுகர்களுக்கும் இந்த வீட்டில் பங்கு கேட்கின்றார் என்ற குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்ட மக்கள் எக்கட்சியாக இருந்தால் என்ன? ஒருவர் வீட்டு நிவாரணத்துக்கும் தகுதியாயின் அவர் அதை பெறுவதற்கு யாரிடம் மேலதிக விஷேட அனுமதி பெறவேண்டும்? ஆக இந்த வெளிப்படையான குற்றச்சாடின் பின்னால் ஒளிந்திருப்பது என்ன?
23 வருட சோனக அகதிகள் அதுவும் புலிகளால் பலாத்காரமாக அகதிகளாக்கப்பட்டோர் நிவாரணத்துகு தகுதியில்லாதோர், புலிகளுக்கு ஒவ்வாத அமைச்சரின் கட்சியில் உள்ள தமிழ் அகதிகளும் (அகதிகளாக இருந்தால்) நிவாரணத்துக்கு தகுதியில்லாதோர், அப்படியே போய் புலிகளை தனியே விட்டு விட்டு அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சுய நலமிகளாக தப்பிச்சென்றோர் நிவாரணத்துக்கு தகுதியற்றோர். ஆகவே மீதம் இருப்போர் மாவீரர்(?)குடும்பம், இவர்கள்தான் எந்த நிவாரணத்துக்கும் தகுதியானோர், அதிலும் இந்திய வீட்டு நிவாரணத்துக்கு முற்றிலும் தகுதிபெற்றோர்.
இதை அடிப்படையாக வைத்துத்தான் வீரமணி பின்வருமாறு சொல்கிறார், அதாவது நீங்கள் எங்களுடன் சேர்ந்து போராடி (ஆயுதம் ஏந்தி) இருந்தால் இந்த வீட்டு நிவாரண விடயத்தில் உங்கள் பங்கை சட்டபூர்வமாக்கி இருப்போம். அதை செய்யாத நயவஞ்சகர்களுக்கு என்ன வீடு வேண்டிக்கிடக்கின்றது? ஆக ஈழமுரசில் வெளியான கட்டுரையின் சுருக்கமென நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறித்துள்ள விடயங்களையும் சுருக்கி பார்த்தால் வீரமணி பேடித்தனமாகக் கேட்பது ” என் மாமன் கட்டித்தரும் வீடு அதில் உனக்கென்ன பங்கு? நீ தொப்புள்கொடி உறவா? அல்லது துப்பாக்கியேனும் ஏந்தினாயா? என்பதே.
- முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்.
No comments:
Post a Comment