லண்டனில் புலிகள் மங்கள சமரவீர சந்திப்பு! மர்மம் தொடர்கிறது!
லண்டனில் உள்ள புலிகளின் பிரிவுகளில் ஒன்றின் தலைவர்களில் ஒருவரான சுரேன் சுரேந்திரன் நேற்று (சனிக்கிழமை) இரவு, இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு தமது இல்லத்தில் விருந்தளித்தார். இந்த விருந்தையொட்டி, விடுதலைப் புலிகளின் ஒரு பிரிவின் வெளிநாட்டு தளபதிகள் சுகந்தன், குமரேந்திரன், ராம், குகன் ஆகியோர் கலந்து கொண்ட ரகசிய சந்திப்பும் நடந்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் தற்போது எதிர்க்கட்சியில் உள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத இயக்கம் என்ற பட்டியலில் 2006-ம் ஆண்டு, இணைத்து, தடை செய்தது. அப்போது இலங்கையின் வெளியுறவு அமைச்சராக இருந்தவர் இந்த மங்கள சமரவீர. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களுடன் பேசி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை கொண்டுவருவதில் பெரும் பங்கு வகித்தவரும், இந்த மங்கள சமரவீரதான்.
விடுதலைப் புலிகளுக்கான தடை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால், மே 18-ம் தேதி கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பின், நடைமுறைப்படுத்தப்பட்டது. இலங்கை அரசுக்கு கிடைத்த பெரிய வெற்றிகளில் ஒன்று அது.
அந்த வெற்றிக்கு இலங்கை தரப்பில் காரணமாக இருந்த மங்கள சமரவீர, 2006-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸூக்கு வழங்கிய பேட்டியில், “ஐரோப்பாவில் செயல்படும் புலிகளின் நிதி சேகரிப்பு தொடர்பான ஆதாரங்கள் எனக்கு வெளிநாட்டு விடுதலை புலிகள் சிலர் மூலமாகவே கிடைத்தன. அவற்றை வைத்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களை என்னால் கன்வின்ஸ் செய்ய முடிந்தது” என்று கூறியிருந்தார்.
2006-ம் ஆண்டு மே 18-ம் தேதி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால், விடுதலைப் புலிகளுக்கு எதிராக தடை கொண்டுவரப்பட்டது. அது நடந்து சரியாக 3 வருடங்களில், 2009-ம் ஆண்டு, அதே மே 18-ம் தேதி, விடுதலைப்புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்தனர் என இலங்கை அரசு அறிவித்தது.
மங்கள சமரவீரவுடன் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தலைவர் என்ன பேசினார் என்ற விபரம் வெளியாகவில்லை. வெளியாகப் போவதுமில்லை. காசா, பணமா… சும்மா ஒரு ‘ராஜதந்திர நகர்வாக’ இருக்கும் என்று எடுத்துக் கொள்ளுங்களேன்.
0 comments :
Post a Comment