ஒபாமாவும் சித்திரவதையும்! Bill Van Auken
ஒபாமா நிர்வாகம் அதன் தாராளவாத மற்றும் “இடது” ஆதரவாளர்களின் முற்போக்கான நடவடிக்கைகளுக்கான சாத்தியப்பாடுகள் பற்றிய ஊகங்களுடன் தன் இரண்டாம் பதவிக்காலத்தினை ஆரம்பிக்க தயாரிக்கையில், மீண்டும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி தனக்கு முன் பதவியில் இருந்தவருடைய குற்றங்களைத் தொடர்வதுடன் தீவிரப்படுத்துவதையும் நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
முதல் நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்தில் ஒபாமாவும் அவருடைய தலைமை அரசாங்க வழக்குத்தொடுனருமான எரிக் ஹோல்டரும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் CIA ஆல் நடாத்தப்பட்ட சித்திரவதை மற்றும் பிற குற்றங்கள் நடத்தப்பட்டவற்றை குறித்த அனைத்து விசாரணைகளையும் மூடிவிடும் வகையில் தீவிரமாக உழைத்துள்ளனர். சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கானோர்களைக் கடத்திச் சித்திரவதை செய்தவர்களை பொறுப்புக் கூறுவதில் இருந்து தடுப்பதற்கு பல வழக்குகளிலும் நிர்வாகம் தலையிட்டது. அரச இரகசியம் என்ற அடிப்படையில் இக்குற்றங்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதை மறைக்கும் வகையில் சட்ட நடவடிக்கைகளைத் தள்ளுபடி செய்ய முற்பட்டது.
இந்த இழிந்த கொள்கையின் விளைவாக CIA விசாரணையாளர்களில் தொடங்கி வெள்ளை மாளிகையில் இருப்பவர்கள் வரை சித்திரவதையாளர்களும், அவற்றைச் செய்ய உத்தரவு கொடுத்தவர்களும் முழு பாதுகாப்பை பெற்றனர். இந்த மோசமான அரசியல் சூழ்நிலை உட்குறிப்பாகச் சித்திரவதையை நியாயப்படுத்தி, அமெரிக்க மக்கள் அனைவரையும் இக்குற்றத்தில் ஈடுபடுத்தியிருக்கும் இந்நிகழ்வுகள் Zero Dark Thirty போன்ற ஒரு பாசிச திரைப்படம் போல் பல வெகுமதிகளையும், விமர்சனரீதியான பாராட்டையும் பெறக்கூடியதாகும்.
ஆனால் இந்த வாரம் வாஷிங்டன் போஸ்ட்டில் ஒரு அறிக்கை தெளிவாக்கியிருப்பதுபோல், ஒபாமாவின் வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகள் கடந்த காலக் குற்றங்களை மூடிமறைத்து மன்னிப்பதோடு நிற்காததுடன், பண்பில் ஒரு புதிய மட்டத்தில் அவற்றைத் தொடரவும் வகை செய்கிறது.
சோமாலியாவை பிறப்பிடமாக கொண்ட இரண்டு ஸ்வீடன் நாட்டுக் குடிமக்கள், ஒரு நீண்டகால பிரித்தானியக்குடிமகன் ஆகியோரின் தலைவிதியை போஸ்ட் எடுத்துக் கூறியுள்ளது; இவர்கள் டிஜிபுட்டி என்னும் ஆபிரிக்க நாட்டினூடாக பயணிக்கும்போது காவலில் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பலமுறை அமெரிக்க உளவுத்துறை பிரிவினர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்; பல மாத காலம் இது நீடித்தது.
இப்படி இரகசியக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றம் தெற்கு சோமாலியாவில் கூடுதலான நிலப்பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத இராணுவ அமைப்பான அல்-ஷபாப்பிற்கு (al-Shabab) ஆதரவு கொடுத்தது என்பதாகும். இந்த அமைப்பு அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டிராதபோதிலும், வாஷிங்டன் அதை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று அழைத்துள்ளது. இதனால் அல் ஷபாப் தலைவர்களின் தலைக்கு வெகுமதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய முறையின் அடித்தளத்தில் அமெரிக்க அரசாங்கம் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற போலிக்காரணத்தை சாதகமாகப் பயன்படுத்தி சோமாலியா மீது அமெரிக்கக் கட்டுப்பாட்டை இறுக்கும் முயற்சி உள்ளது. இந்த மூலோபாயப் பகுதியின் கடலோரப் பகுதி மத்தியதரைக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு இடையே இருக்கும் பாப் அல்-மான்டாப் நீரிணைக்கு அருகே உள்ளது. இதன்மூலம்தான் உலகின் பெரும்பாலான எண்ணெய் பொருட்களின் போக்குவரத்து நடக்கின்றது.
“ஒபாமாவின் கீழ் கடத்தல்கள் தொடர்கின்றன, முறையான சட்ட விசாரணைகள் குறித்த கவலைகள் இருந்தபோதிலும்” என்ற தலைப்பில் போஸ்ட் கட்டுரை பின்வருமாறு கூறுகிறது: “செப்டம்பர் 2011 தாக்குதல்களைத் தொடர்ந்த ஆண்டுகளில் இந்த தந்திரோபாயம் பரந்தளவில் கண்டிக்கப்பட்டிருந்தும்கூட எந்த சட்ட வழக்கும் இன்றி மற்ற நாடுகளில் இருக்கும் பயங்கரவாத சந்தேக நபர்களைப் பிடித்து, விசாரணை செய்தல், தடுத்துவைத்தல் எனப்படும் ஒபாமா நிர்வாகத்தின் செயற்பாட்டைப் பற்றிய சமீபத்திய உதாரணம்தான் இந்நபர்கள்.”
கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இம்மூவரும் ஒரு நியூயோர்க் மத்திய நீதிமன்றத்தில் டிசம்பர் 21ம் திகதிதான் ஆஜர்செய்யப்பட்டனர். இடைப்பட்ட நான்கு மாதங்களில் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது மத்திய அரசின் வழக்குதொடுனர்களால் தெரியப்படுத்தப்படவில்லை.
ஒரு எரித்திரிய நாட்டைச் சேர்ந்த மற்றொரு அல்-ஷபாப் ஆதரவாளர் பற்றி 2011 வழக்கு ஒன்றையும் அறிக்கை மேற்கோளிட்டுள்ளது. அந்நபர் அமெரிக்க விசாரணைக்காக நைஜீரியச் சிறை ஒன்றில் தள்ளப்பட்டார். இந்த வழக்கின் அமெரிக்க விசாரணையாளரின் சாட்சியம் எப்படி இந்த நபர் முதலில் சட்டவிரோத விசாரணை முறைகளுக்கு ஒரு “கறைபடிந்த அமெரிக்க முகவர் குழுவினால்” (“dirty team”) உட்படுத்தப்பட்டது, பின் அவர் ஒரு “தூய குழுவிற்கு” (“clean team”) மாற்றப்பட்டார். அவருக்கு இரண்டாம் குழு தன்னைப்பற்றிய குற்றத்தைத் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை என்னும் மிரண்டா உரிமைகளைப் பற்றிக் கூறி, பின்னர் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைப் பெற முற்பட்டது பற்றி குறிப்பிடுகின்றது. அத்தகைய வாக்குமூலம் அமெரிக்க நீதிமன்றத்தில் சட்டப்படி செல்லுபடி ஆகும்.
இங்கு விவரிக்கப்படுவது முன்னாள் துணை ஜனாதிபதி டிக் ஷென்னி ஒருமுறை “இருண்ட பக்கத்திற்கு செல்வது” எனக் கூறியதுதான். இது கடத்தல், சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலைகள் ஆகியவற்றை அடக்கியது.
அல் ஷபாப் ஆதரவாளர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பற்றிய அறிக்கை கடத்தல், தடுத்துவைத்தல், நீடித்த “நிர்ப்பந்தமாக காணமல்போதல்” என்று CIA இனால் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றி காவலில் வைக்கப்பட்ட கலீத் எல்-மஸ்ரியின் வழக்கு பற்றிக் கூறுகையில் “இவையே சித்திரவதைக்கு ஒப்பாகும்” என்று ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறிய சில வாரங்களுக்குள் வந்துள்ளது.
எவரோடும் தொடர்பற்று வைக்கப்பட்ட ஆண்டுகளில், எல் மஸ்ரி பலவகைச் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இதில் ஆண்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்தல், உறுப்புக்களைச் செயலற்றுப் போகச் செய்தல், உடல்ரீதியான தாக்குதல்கள், கட்டாயமாக உண்ணவைத்தல், மருத்துவ உதவி மறுக்கப்படல் ஆகியவை அடங்கியிருந்தன. இதுதான் இரகசியக் கடத்தலின் கருப்பொருள் ஆகும் – காவலில் வைக்கப்படுபவரின் மன உறுதியைச் சிதைப்பது. புஷ்ஷின் காலத்தில் இதுதான் நிலவியது, ஒபாமாவின் கீழும் இதுதான் நிலவுகிறது.
எது மாறியிருக்கிறது? போஸ்ட் கட்டுரைப்படி, குவான்டநாமோ குடா, கியூபாவில் இருக்கும் அமெரிக்க இராணுவச்சிறை முகாமின் விதி பற்றி காங்கிரஸ் “முட்டுக் கட்டை இட்டுள்ளது”. அமெரிக்க நீதிமன்றங்களில் குற்றவாளிகள் எனக்கூறப்படுவோரை விசாரித்தல் என்னும் நிர்வாகத்தின் திட்டத்திற்குத் தடைகள் “பயங்கரவாதச் சந்தேகத்திற்கு உரியவர்களைக் கொல்வதை எளிதாக்கிய கொள்கைக்கு” வழிவிட்டுள்ளது. இது ஆளற்ற விமான டிரோன் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் நடைபெறுகின்றன. அதே நேரத்தில் “முன்னைக் காட்டிலும் இன்னும் முக்கியமாகக் கடத்தல் கையாளப்படுகிறது.”
போஸ்ட் அறிக்கை கொடுத்துள்ள அன்றே, ஒரு நியூயோர்க் கூட்டாட்சி நீதிபதி ஒபாமா நிர்வாகம் எப்படி சட்டபூர்வமாக அமெரிக்க குடிமக்களை கொல்லும் உரிமையை நியாயப்படுத்துகிறது என்பதை அமெரிக்க அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் எனக் கோரிய வழக்கை நிராகரித்தார். அவ்வாறு கொல்லப்பட்டதில் புதிய மெக்சிகோவில் பிறந்த மத குருவான அன்வர் அல் அவ்லாகி உள்ளடங்குகின்றார். இவர் 2011ல் யேமனில் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
நீதிபதி கோல்லீன் மக்மகோனுடைய தீர்ப்பு ஒரு தசாப்தகாலமாக ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் மற்றும் நிறைவேற்றுப்பிரிவின் ஒட்டுமொத்த குற்றத்தன்மை ஆகியவற்றை எதிர்கொள்வதில் நீதித்துறையின் செயலற்ற தன்மை பற்றிய அறிவிப்பாகவே உள்ளது.
“சட்டங்களின் குழப்பத்தினுள்ளும் எவ்வித முன்னோடிகளிலும் நமது அரசாங்கத்தின் நிறைவேற்று பிரிவினால் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களுடன் பொருந்தியிராததை முற்றிலும் சட்டபூர்வ நடவடிக்கை என்று அனுமதிப்பதை எவ்விதத்திலும் சரியெனக்காட்ட என்னால் முடியவில்லை. அதே நேரத்தில் அவர்களின் முடிவுகளுக்கான காரணங்களும் இரகசியமாகத்தான் உள்ளன” என்று இந்தப் பெண் நீதிபதி எழுதியுள்ளார்.
மீண்டும், அமெரிக்காவின் ஆளும்வர்க்கத்தின் கணிசமாக எந்தப் பகுதியும் அரசியலமைப்பு, ஜனநாயக உரிமைகள் குறித்து கவலைப்படுவது இல்லை என்பதுதான் வெளிப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, காலவரையின்றி அமெரிக்கக் குடிமக்களை இராணுவக் காவலில் வைத்தல், குற்றச்சாட்டுக்கள், விசாரணையின்றி அவர்களைக் கொல்ல உத்தரவிடுதல் என்பதை தனக்கு எடுத்துக் கொண்டு, மற்றும் இது முற்றிலும் அந்நபர்கள் அரசாங்கத்தின் விரோதிகள் என்று கூறுவது அவருடைய விருப்பம் என்று கூறுவது இயல்பாகிவிட்டது. நீதித்துறையோ, முக்கியக் கட்சிகள் இரண்டில் முக்கிய நபர் எவரேனுமோ அல்லது பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகமோ இத்தகைய சர்வாதிகாரக் கொள்கைக்கு சவால்விட தயாராக இல்லை.
இறுதி ஆய்வில், இந்த அரசியல் போக்கு அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்றுத் தன்மை உடைய நெருக்கடி, அதன் தீய வெளிப்பாடான நிதியத் தன்னலக்குழுவிற்கும் மக்களின் பெரும்பாலானவர்களான தொழிலாள வர்க்கத்தையும் பிரிக்கும் பெரும் இடைவெளி என்பதில் வேர்களைக் கொண்டுள்ளது. முன்னொருபோதுமில்லாத சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி ஜனநாயக உரிமைகள் மற்றும் அடிப்படை அரசியல் கொள்கைகளை செயலற்றுச் செய்துவிட்டது.
நெருக்கடியின் முழுச்சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் ஏற்றுவது என்னும் கொள்கை புரட்சிகர எழுச்சிகளைத் தூண்டும் என்பதை உணர்ந்துகொண்டு, ஆளும் வர்க்கம் பொலிஸ் சர்வாதிகாரத்திற்கான வடிவமைப்பை தயாரிக்கிறது. தொழிலாள வர்க்கமும் அதன் சொந்தத் தயாரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அனைத்து ஜனநாயக, சமூக உரிமைகளையும் பாதுகாத்தல் என்பதற்கு இன்று தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீன அரசியல் வலிமையை முதலாளித்தவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் போராட்டத்திற்காகத் அணிதிரட்ட வேண்டும்.
0 comments :
Post a Comment