Monday, January 21, 2013

இலங்கை அரசாங்கம் 89 தமிழ்க் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றியுள்ளது- கருணாநிதி

இலங்கை அரசு இதுவரை 89 தமிழ்க் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றியுள்ளது. 367 இந்து மதக் கோயில்களை இடித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 148 சிறிய ராணுவ முகாமும், 13 முக்கிய ராணுவ முகாம்கள் உள்ளன. இதனால் தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கான அநீதிகளை தடுக்க இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்று திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

இலங்கையில் தமிழ் மொழி, தமிழ்க் கலாசாரம், இந்து மதம் மற்றும் தமிழர் பண்பாடுகளை திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்ப் பகுதிகளையும், தமிழர்களையும் அழிக்கும் முயற்சியிலும் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. தமிழ்க் கிராமங்களின் பெயர்களுக்கு சிங்களப் பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழர்கள் வாழும் கிராமங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன.

இந்து மதக் கோயில்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளைக்கூட இலங்கை அரசு செய்யவில்லை. தமிழர் பகுதிகளில் ராணுவ முகாம்கள் உள்ளன. இது போன்ற நிலையால் இலங்கையில் தமிழர்கள் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

இலங்கை அரசு இதுவரை 89 தமிழ்க் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றியுள்ளது. 367 இந்து மதக் கோயில்களை இடித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 148 சிறிய ராணுவ முகாமும், 13 முக்கிய ராணுவ முகாம்கள் உள்ளன.

இதனால் தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா பல்வேறு மொழி, மதங்களைக் கொண்டு உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக திகழ்கிறது. அந்த அடிப்படையில் இலங்கை அரசின் அராஜகத்தை தடுத்து நிறுத்தும் தார்மிக கடமை இந்தியாவுக்கு உள்ளது.

எனவே, உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு, தமிழ்க் கலாசாரம் அழிக்கப்படுவதைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இதேபோன்ற கடிதம் ஒன்றை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அவர் அனுப்பியுள்ளார்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com