நோக்கிய நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிரடிச் சோதனை 3 ஆயிரம் கோடி வரிஏய்ப்பென புகார்
தமிழ் நாட்டின் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா செல்போன் தொழிற்சாலையில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு வரிஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து வருமான வரித்துறையில் அதிரடிச் சோதனை நடத்தியுள்ளனர்.
இங்கு செல்போனுக்கு தேவையான தளவாட சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் நோக்கியா செல்போன்களில் பெரும்பாலானவை இங்கு தயாராகின்றன.
தொழிற்சாலையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில், நோக்கியா நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு வரிஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, சென்னை வருமானவரித்துறையைச் சேர்ந்த சுமார் 20 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவினர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொழிற்சாலையில் நேற்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டார்கள்.
காலையில் தொடங்கிய சோதனை பிற்பகல் வரை நீடித்தது. சோதனை நடந்தபோது ஊழியர்களைத் தவிர வெளிநபர்கள் யாரையும் வருமானவரித்துறை அதிகாரிகள் உள்ளேவிடவில்லை.
இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் தெரிகிறது.
வருமானவரித்துறை சோதனை குறித்து நோக்கியா நிறுவன அதிகாரிகள் கூறுகையில், எங்கள் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் காண்பித்தோம் என்று தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment