முல்லைத்தீவு வலயத்தில் 16ஆயிரம் மாணவர்களின் கல்வி பாதிப்பு!
முல்லைத்தீவுக்கல்வி வலயத்திற்குட்பட்ட 52 பாடசாலைகளில் 185இற்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையினால் 16750இற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் ம.ராஜ்குமார். தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் நடை பெற்ற போரின் போது பல பாடசாலைகளின் கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் பௌதீக வளங்களும் அழிவடைந்துள்ளன. மக்கள் இடம்பெயர்ந்து அதன் பின்னர் மீள்குடியமர்த்தப்பட்டு முல்லைத்தீவு கல்வி வலயத்திலுள்ள 56 பாடசாலைகளில்; 52 பாடசாலைகள் தற்போது இயங்கிவருகின்றன.
ஆனால் இங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் நிலை பற்றாக்குறையாகவே உள்ளது. இதில் ஆரம்பக் கல்விக்கு 73 ஆசிரியர்களும், இடைநிலை கல்வியில் கணிதம், விஞ்ஞானம், ஆகிய பாடங்களிற்கு 59 ஆசிரியர்களும், ஆங்கில பாடத்திற்கு 29 ஆசிரியர்களும், க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களிற்கு 15 ஆசிரியர்களும் கலைப்பிரிவு மற்றும் வர்த்தகப் பிரிவிற்கு 10 ஆசிரியர்களுமாக சுமார் சில நூற்றுக்கணக்கான ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது.
இதனைவிட வருடாந்த இட மாற்றம் பெறும் ஆசிரியர்களும், 2 வருட ஒப்பந்த அடிப்படையில் எதிர்வரும் மாசிமாதம் தமது சேவையை நிறைவு செய்து இடமாற்றம் பெற்று செல்ல இருக்கும் நிலையில் மேலும் ஆசிரியர் பற்றாக்குறை நிகழவுள்ளதாகவும் இது தொடர்பாக வடமாகாணக் கல்விப் பணிப்பாளருக்கும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள தாகவும், தற்போது நடைபெற இருக்கும் இடமாற்றத்தில் இவ் பற்றாக்குறையை நிறைவு செய்து தருவதாகவும் தெரிவித்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment