Tuesday, January 8, 2013

சோதனைச் சாவடியில் இராணுவத்திற்கும் துப்பாக்கி தாரிகளுக்கும் இடையில் கடும் சண்டை 13 பேர் பலி

தென் சீனக்கடலில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸின் அதிமோனன் நகரின் சோதனைச் சாவடியில் இரண்டு கார்களில் வந்த இனந்தெரியாதவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 13 துப்பாக்கிதாரிகள் பலியாகியுள்ளதோடு பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கு உள்ள சோதனைச் சாவடியில் இரண்டு கார்களில் வந்தவர்களை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் சோதித்தனர்.

அப்போது கார்களில் இருந்தவர்களில் 2 பேர் வெளியே கால்வாய்க்குள் குதித்தனர். பின்னர் அங்கிருந்தபடியே ராணுவத்தினர் மற்றும் போலீசாரை நோக்கி சுட்டனர். மற்றவர்கள் காரில் இருந்தபடியே தாக்கினர்.

இருதரப்பிற்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. 20 நிமிடம் நடந்த இந்த சண்டையில் கார்களில் வந்தவர்களில் 11 பேர் சம்பவ இடத்திலும் 2 பேர் மருத்துவமனையிலும் இறந்தனர். அவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக இருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது.

அவர்களிடமிருந்து 12 கைத்துப்பாக்கிகளும் இரு நீண்ட துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. காயமடைந்த காவலர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிலிப்பைன்சில் பல வருடங்களாக அரசியல்வாதிகள், போராளிகள், தீவிரவாதிகள் என பல தரப்பினரும் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர் என கூறப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com