Wednesday, January 2, 2013

பரமார்த்த குருவின் பகிரங்கக் கடிதம் - 11

டெல்லி மாணவிக்கு...

வணக்கம்.

உன் ஆத்மா சாந்தியடையட்டும்!


சகோதரியே - உன் கண்ணீர்க்கதை குறித்து ஏதும் எழுதாமல் போவது எவ்வகையிலும் நியாமில்லை என்று எண்ணி என் கடிதத்தின் பேசுபொருள் இம்முறை நீயாகிப்போனாய். இத்தனை நாளாய் உயிரோடிப்பவர்களுக்குத்தான் கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன். தற்போது இறந்துபோயுள்ள உனக்கு எழுதி, பிரதியை உயிரோடிருக்கும் ஏராளமான சகோதரிகளின் பாதுகாப்பிற்காய் சமர்ப்பணம் செய்கிறேன்.

23 வயதேயான உனது மரணம் காமவெறி பிடித்த, மனித இனத்தில் இணைந்துகொள்ளத் தகுதியில்லா ஆறு கயவர்களால் வன்புணர்ச்சி எனும் கத்தியால் வரையப்பட்டிருக்கிறது.

அதுவும் போக்குவரத்து நெரிசல்மிக்க இந்திய தலைநகர் வீதியில் ஓடும் பேரூந்தில் இந்தக்கோரம் நிகழ்ந்துள்ளது. உன்னோடு வந்த நண்பரும் உனக்கு முன்னமே அடித்துத் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.

உன்னைக்காப்பாற்ற இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் நடந்த மருத்துவப்போராட்டங்கள் வெற்றியளிக்காத நிலையில் நீ மரணத்தைச் சூடியிருக்கிறாய்.

வைத்தியர்கள் உன்னைக் காக்க கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த வேளை "அம்மா நான் வாழ ஆசைப்படுகிறேன்" என்று இந்தக்கேடு கெட்ட உலகில் மேலும் நீ கொண்டிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தாய்.

உன்னை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையில் உன் பெற்றோர் காணியை விற்று உனக்குப் பணம் தந்து நீ மருத்துவக் கல்லூரியொன்றில் படித்துக்கொண்டிருந்ததாகவும் அறிந்தேன். இதயம் வெடிப்பது போலாகிற்று எனக்கு!

உனக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் சகோதரி...

உன்னைத் துவம்சம் செய்த ராம் சிங், முகேஷ், அக்ஷய் தாக்குர், பவன், வினய் ஆகியயோர் மட்டும் காரணமல்ல உன் மரணத்திற்கு. நாகரிகம் என்ற பெயரில் இந்த உலகமே ஆராதித்துக்கொண்டிருக்கும் கலாசாரங்களும் உனது மரணத்திற்கான முக்கிய காரணங்கள்தான்.

சினிமா, இணையம் மற்றும் ஏனைய ஊடகங்கள் என எல்லாமே தற்போது மானுட ஆக்கத்தை அழகுபடுத்தும் பணியிலிருந்து விலகி ஏதோவொன்றைத்தான் செய்துகொண்டிருக்கின்றன. இன்று ஊடகங்களில் இடம்பெறுகின்ற பெரும்பாலான விளம்பரங்கள் கூட பெண்களைப் போகப்பொருளாகத்தான் பயன்படுத்துகிறது.

அத்தியவசியத் தேவைக்காக இணையத்தில் ஏதும் தேடும் போது கூட காரணமேயின்றி இச்சை தூண்டும் விடயங்கள் இயல்பாகவே தோன்றி மறையும் ஏற்பாடுகள் அதில் நிறையவே ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உனது மரணத்தில் கூட ஒருத்தி விளம்பரம் தேடியிருக்கிறாள்,

எவ்வாறு தெரியுமா...?

பொலிவூட் நடிகை சூசனா உனது மரணத்தைக் கண்டித்து அரை நிர்வாணப் போஸ் கொடுத்திருக்கிறாளாம்!

இன்று பெண்ணுடல் காண்பிக்காத சினிமாவுக்கு மவுசே இல்லை என்கின்ற அளவுக்கு அந்தத்துறையும் மாறிப்போய்விட்டது. ஐந்து நிமிட விளம்பரங்களில் கூட அத்தகைய கைங்கரியம்தான் கையாளப்படுகிறது. அச்சு ஊடகம் கூட இந்த விடயத்தில் குறைந்தவர்களல்ல.


இப்படியான ஒரு சமூகக்கட்டமைப்பில் இருந்துதான் உன் மீதான இந்தக் கொடூரம் முளைத்திருக்கிறது.

நீ மட்டுமல்ல சகோதரி... உனக்கு முன்னமும் பின்னரும் ஏராளமான கேவலங்கள் இந்த நவீன சமூகத்தால் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
சட்ட ஒழுங்கை சரி செய்வதோ ஆர்ப்பாட்டம் நடாத்துவதோ இந்தக் கேவலங்களுக்கு நிரந்தரத் தீர்வு அல்ல.

அது வேண்டுமானால் அரசியல்வாதிகள் அரசியல் செய்வதற்கான தீர்வாயிருக்கலாம். அதுபோல குற்றம் புரிந்தவர்களுக்கு அதிகப் பட்சத் தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்குவதும் இதற்கு நிரந்தரத் தீர்வாக முடியாது. ஏனெனில் உலகில் இதுவரை தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட எத்தனையோ குற்றங்கள் இன்னும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறதே தவிர அத்தண்டனை கண்டு குற்றங்கள் குறைந்ததை அவதானிக்க முடியவில்லை. அதற்காக அந்த வெறியர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. அவர்களை ஆயிரம் முறை தூக்கிலிட்டாலும் தகும்.

அப்படியானால் கூட உனதோ எனதோ ஆத்மாக்கள் சாந்தியடையச் சாத்தியமில்லை.

நான் இங்கு பேசிக்கொண்டிருப்பது நிரந்தரத் தீர்வு குறித்தும் உயிரோடிருக்கும் சகோதரிகளுக்கான உத்தரவாதம் குறித்தும், அவர்களை நீ உனது பட்டியலில் அழைத்துக்கொள்ள விரும்ப மாட்டாய் என்பதற்காகவுமே...! ஏனெனில் என்னை விடவும் உனக்குத்தான் அந்தக் கொடூரம், வலி எல்லாமே தெரியும்!

சகோதரியே, உனக்கான கடிதத்தில் உனது மரணத்திற்குக் காரணமான சமூகத்திற்கு சில வேண்டுகோள்களை முன்வைக்க ஆசைப்படுகிறேன்.


உலக ஆக்கத்திற்கான நாகரிகத்தை எல்லோருமாய்ச் சேர்ந்து கட்டியெழுப்புவது குறித்து ஆலோசியுங்கள்!

ஆபாசங்களை அம்பலமாக்காத அழகிய ஊடகக்கட்டமைப்பை உருவாக்கிக்காட்டுங்கள்! முடிந்தால் உலகத் தலைவர்கள் எல்லோரும் தத்தமது தேசத்திலுள்ள பள்ளிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் "மனிதாபிமானம்" எனும் விடயத்தை கட்டாய பாடமாக்குங்கள்!

இங்குதான் உங்களுக்குப் பிரச்சினையிருக்கிறது, மனிதாபிமானப் பாடத்தை நடாத்துவதற்கு பள்ளிகளிலிருக்கலாம், பல்கலைக் கழகங்களிருக்கலாம், அப்பாடத்தை கட்டாயமாக்க உத்தரவிடுவதற்குப் பாராளுமன்றமுமிருக்கலாம்... ஆனால் அந்தப் பாடத்தைக் கற்பிக்கத் தகுதியான மனிதர்களைத் தேடுவதில்தான் நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன.

ஏனெனில், உன்னைப் போல எத்தனையோ சகோதரிகளைப் பணம் கொடுத்துப் பயன்படுத்தும் பாராளுமன்றவாதிகளும், கல்வி வழங்கும் சாக்கில் சிறுமியென்றும் பாராது கலாய்த்துவிட்டுப் போகும் பள்ளிக்கூடவாதிகளும் ஒவ்வொரு தேசத்திலும் நிரம்பிக்கிடக்கிறார்கள்.

எனவே நான் மேற்சொன்ன வேண்டுகோள்களை நிறைவேற்றவது சற்றுக் கடினம்தான், ஆனால் நல்லவர்களும் இல்லாமலில்லை!

அவர்கள் முயற்சி செய்யலாம் முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை!!

இப்படிக்கு, பரமார்த்தகுரு.

(நன்றி: கிழக்கு|| வார இதழ் -11)

No comments:

Post a Comment