Wednesday, December 26, 2012

பாகிஸ்தானுடனான முதலாவது T20 இல் மண் கவ்வியது இந்திய அணி

.
பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 20 ஓவர் போட்டிகளில் முதல் ஆட்டம் இன்று சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ஹபீஸ், இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.

இந்திய அணியில் ஆல்ரவுண்டர் புவனேஷ் குமார் சேர்க்கப்பட்டிருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடிய அஸ்வின், பியூஸ் சாவ்லா, அவானா நீக்கப்பட்டனர். பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளம் என்பதால் இந்திய அணி அதிக பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்கியது.

துவக்க விரர்கள் ரகானே-காம்பீர் இருவரும் சிறப்பாக ஆடினர். இருவரும் இணைந்து 77 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடியை சாகித் அப்ரிடி பிரித்தார். அவரது பந்தில் ரகானே ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன்கள் சேர்த்தார். 43 ரன்கள் சேர்த்த காம்பிர், ரன் அவுட் ஆகி வெளியேறினர்.

துவக்க வீரர்கள் பெவிலியன் திரும்பியதைத் தொடர்ந்து மற்ற விக்கெட்டுகளும் மளமளவென சரிந்தன. கோலி (9 ரன்கள்), டோனி (1 ரன்), யுவராஜ் (10 ரன்கள்), ரெய்னா (10 ரன்கள்) ஆகிய முன்னணி வீரர்கள் எவரும் களத்தில் நிலைக்கவில்லை. இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் உமர் குல் 3 விக்கெட்டுகளும், சயீத் அஜ்மல் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 12 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. நசீர் ஜாம்ஷெட் 2 ரன்களிலும், அகமது ஷேஜாத் 5 ரன்களிலும் புவனேஷ்குமார் ஓவரில் ஆட்டமிழந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் உமர் அக்மலையும் டக் அவுட் ஆக்கினார் புவனேஷ்குமார்.

தடுமாற்றத்துடன் இலக்கை நோக்கி பயணித்த பாகிஸ்தான் அணியை முகமது ஹபீஸ் - சோயிப் மாலிக் ஜோடி சரிவில் இருந்து மீட்டதுடன், வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஹபீஸ், 40 பந்துகளில் அரை சதம் (4 பவுண்டரி, 2 சிக்சர்) கடந்தார். மறுமுனையில் ஆடிய சோயிப் மாலிக்கும் அரை சதத்தை நெருங்கினார்.

இந்நிலையில் முகமது ஹபிஸ், 61 ரன்கள் எடுத்த நிலையில், இஷாந்த் சர்மா வீசிய பந்தை பவுண்டரி அடிக்க முயன்றபோது, புவனேஷ்குமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரையடுத்து மாலிக்குடன், கம்ரான் அக்மல் இணைந்தார்.

கடைசி 2 ஓவர்களில் 14 ரன்கள் தேவை என்ற பரபரப்பான சூழ்நிலையில், சோயிப் மாலிக் அரை சதம் கடந்தார். ஆனால் அடுத்த 3 ரன்கள் எடுப்பதற்குள் அக்மல் (1 ரன்) ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில், சோயிப் மாலிக், 4-வது பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதனால் பாகிஸ்தான் அணி 2 பந்துகள் மீதமிருந்த நிலையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. .

ஆட்டநாயகன் விருது முகமது ஹபிஸ்க்கு வழங்கப்பட்டது.



No comments:

Post a Comment