யாழ்பாணம் 'உதயன்' பத்திரிகையின் தொடரும் விசமத்தனங்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'உதயன்' நாளிதழ் தனது செய்திகளினூடாக செய்து வரும் விசமத்தனங்கள் கணக்கிலடங்காதவை. பலர் உதயன் பத்திரிகையை வாசித்துவிட்டு சினம் கொள்வதும், அதில் கூறப்படும் செய்திகளுக்கு எதிர்மாறான முடிவுகளுக்கு வருவதும் தமிழ் மக்களின் பழக்கமாகிப் போய்விட்டது.
இன்னொரு பக்கத்தில் உதயன் தனது பத்திரிகையில் வெளியிடும் செய்திகள் குறித்து அவதூறு, செய்திகளைத் திரித்தல் போன்ற சட்டங்களின் கீழ் இலங்கை அரசாங்கம் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது எனக் கேள்வி எழுப்புவோரும் இருக்கின்றனர். அதேவேளை உதயன் இவ்வாறெல்லாம் பத்திரிகைச் சுதந்திரத்தைத் துஸ்பிரயோகம் செய்தும், எவ்விதமான சட்ட நடவடிக்கைக்கும் உள்ளாமாமல் இருப்பது, இலங்கையில் அதீதமான பத்திரிகைச் சுதந்திரம் இருப்பதன் அடையாளம் என வாதிடுபவர்களும் இருக்கிறார்கள்.
உதயன் பத்திரிகை செய்திகளை எவ்வாறு திரிக்கிறது, அந்தரங்க நோக்கத்துடன் செய்திகளை எவ்வாறு வெளியிடுகின்றது, சமூகத்தில் மதிப்பு மிகுந்த, அதேவேளையில் தனக்குப் பிடிக்காதவர்களை எவ்வாறு அவதூறு செய்கிறது என்பதற்கு சில உதாரணங்களைக் கீழே தருகின்றேன்.
1. சமீபத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், சிரேஸ்ட அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவின் சதோதரர் ஒருவர் சட்டத்தை மீறிச் செயல்பட்டதனால், அவரைக் கைதுசெய்து பிணையில் வெளிவர முடியாதவாறு காவலில் வைக்கும்படி அமைச்சரே பொலிசாரிடம் கோரியதால், அவரது தம்பியாரைப் பொலிசார் கைதுசெய்தனர். இந்த விடயத்தை — அதாவது அமைச்சரே தவறு செய்த தனது சகோதரரைக் கைது செய்யும்படி கோரிய முன்னுதாரணமான விடயத்தை — பெரும்பாலான ஊடகங்கள் மறைத்து, 'அமைச்சர் அப்பொழுது அவர், 'தான் செய்த புண்ணியம் காரணமாக இரண்டு ஜனாதிபதிகளின் காலத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றும் அதிஸ்டம் கிடைத்தது.
ஆனால் அதேநேரத்தில் தான் செய்த பாவத்தின் காரணமாக தனக்கு இப்படி ஒரு சதோதரர் வந்து வாய்த்தது' என மனம் வருந்திக் கூறியிருந்தார். சாதாரணமாக சமூகத்தில் பலர் இப்படி மனம் வருந்துவது வழமை. இதன் அர்த்தம் அதைக் கூறுபவர் ஏதோ பெரிய பாவம் செய்துவிட்டார் என்பதன் பொருள் அல்ல.
ஆனால் இந்தச் செய்தியை யாழ்ப்பாண உதயன் எவ்வாறு தலைப்பிட்டு வெளியிட்டது தெரியுமா? 'அமைச்சர் மைத்திரிபால தான் செய்த பாவங்களை ஏற்றுக் கொண்டார்!' மைத்திரிபால சொன்னது என்ன? உதயன் சொல்வது என்ன? வாழ்க! உதயனின் பத்திரிகா தர்மம்!!
2. 1998 இல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற 'லயன் எயர்' பயணிகள் விமானத்தை 48 பயணிகளுடனும், 6 விமானப் பணியாளர்களுடனும், 3 விமானிகளுடனும் சேர்த்து புலிகள் பூநகரிக்கு அருகில் வைத்துச் சுட்டு வீழ்த்தியிருந்தனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் அன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதேவேளையில் புலிகள் மீது ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
அண்மையில் அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் இருக்கும் புலி உறுப்பினன் ஒருவன் கொடுத்த தகவலின் அடிப்படையில,; கடற்படையினர் சுடப்பட்ட விமானத்தின் சில பகுதிகளை பூநகரிக் கடலில் மீட்டுள்ளனர். இந்த விடயம் மீண்டுமொருமுறை ஊடகங்களில் செய்தியாக இடம் பிடித்து, புலிகளின் மீது மக்களின் வெறுப்பைத் தூண்டி விட்டுள்ளது.
மக்களின் மனநிலையைக் கண்டு பொறுக்காத 'உதயன்' பத்திரிகை, இது பற்றி வெளியிட்ட செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டு விசமத்தனம் செய்துள்ளது. 2012 அக்டோபர் 29ஆம் திகதி 'லயன் எயார் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை' எனத் தலைப்பிட்ட செய்தியில் உதயன் பின்வருமாறு கூறுகின்றது:
'எனினும் அன்றைய காலகட்டத்தில் சிறிலங்கா இராணுவத்திற்குச் சொந்தமான விமானமாக இந்த லயன் எயர் செயற்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் அந்த விமானங்களிலேயே கொழும்பிற்கு சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு போக்குவரத்தும் நடைபெற்றது.
ஆனால் இவ்வாறான விமானங்களில் பயணத்தினை மேற்கொள்ள வேண்டாம் என பொதுமக்களிடம் விடுதலைப் புலிகள் பலமுறை கோரிக்கை விடுத்தனர் என்பதும் இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒன்றாகும்'
உதயனின் இந்தச் செய்தியில் பாரதூரமான பல விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.
ஒன்று - இந்த விமானம் இராணுவத்துக்குச் சொந்தமானது என்ற உதயனின் கூற்று பச்சைப் பொய்யாகும். அது தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானதாகும்.
இரண்டாவது — புலிகள் பல தடவை அறிவுறுத்தியும் பொதுமக்கள் அதில் பயணம் செய்ததால், புலிகள் சுட்டு வீழ்த்தியது சரிதான் என்ற கருத்துப்பட உதயன் எழுதியுள்ளது! இது எவ்வளவு மோசமான, மானிட விரோதமான, அந்த விமானத்தில் பயணம் செய்து மரணித்தவர்களின் ஆத்மாக்களை அவதூறு செய்யும் கருத்து!! உதயனின் இந்தச் செய்தி குறித்தும் இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வது அவசியமானது.
3. மூத்த அரசியல் தலைவர் அலவி மௌலானா அவர்களை இலங்கையில் அறியாதவர்கள் கிடையாது எனலாம். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர் நாடறிந்த தொழிற்சங்கவாதியுமாவார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி பல தடவைகள் பொலிசாரின் தாக்குதலுக்கு உள்ளானவர். சிறையில் அடைக்கப்பட்டவர். அவரின் தன்னலம் கருதாத சேவையைக் கருத்தில் கொண்டு சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம் அவரை மேல் மாகாண ஆளுநராக நியமனம் செய்தது. தற்பொழுது மகிந்தவின் அரசாங்கமும் அவரை மூன்றாவது தடவையாகவும் மேல் மாகாணத்தின் ஆளுநராக நியமித்துள்ளது. அவரது இந்த நியமனத்தை காமாளைக் கண்களால் பார்த்த உதயன் அச்செய்தியை எப்படி வெளியிட்டது தெரியுமா?
'தனது தள்ளாத வயதிலும் அலவி மௌலானா மூன்றாவது தடவையாகவும் மேல் மாகாண ஆளுநரானார்!' பாருங்கள்! எம்மையும் விட சிறுபான்மையான ஒரு சமூகத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரை, நேர்மை தவறாத நிர்வாகியை, அனைத்து இன மக்களினதும் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவரை, உதயன் எப்படி அவதூறு செய்கிறது பாருங்கள்!!
உதயன் பத்திரிகையின் உரிமையாளர் யாழ்ப்பாணம் மக்களின் பல கோடி ரூபா பணத்தைச் சுருட்டிய 'சாப்றா பினான்ஸ்' நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிர்வாகியும், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் ஆவார்.
அலவி மௌலானவைக் கேலி செய்யும் உதயன் பத்திரிகையை நடாத்தி வரும் அவரிடம் ஒரு கேள்வி. அலவி மௌலானா தள்ளாத வயதில் இருக்கிறார் என்றால், உங்கள் தலைவர் சம்பந்தன் மட்டும் 'தள்ளக்கூடிய' இளைஞனாகவா இருக்கிறார்?
1 comments :
Still there are people to believe the fabricated stories as true.Better
not to be illusioned,the time is running out,just think about the reality and chase out these type of ghosts out of the scene.
Post a Comment