சென்னையில் நான்கு புலிகள் கைது. வெடி குண்டு தயாரித்ததற்கான ஆதாரங்களும் மாட்டின.
புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சென்னையில் தங்கியிருந்த நான்கு ஈழத்தமிழ் இளைஞர்கள் தமிழக கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரவாயல், தாம்பரம், பல்லாவரம், பொழிச்சலூர் பகுதிகளில் நேற்று முன்தினம், நடத்தப்பட்ட சோதனையின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்லாவரத்துக்கு அருகில் உள்ள பொழிச்சலூர் அண்ணா நகரில் ஈழத்தமிழர்கள் ஆறுபேர் தங்கியிருந்த வீட்டை, தமிழ்நாடு பொலிஸார் முற்றுகையிட்டு சோதனை செய்தனர்.
மடிக்கணினி, கைபேசிகள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்புக்கான உபகரணங்கள், அவற்றுக்குரிய புத்தங்கங்கள் அங்கிருந்ததாக கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சுரேஸ்குமார், உதயதாஸ், சுந்தரமூர்த்தி, மகேஸ்வரன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளதாக தமிழ்நாடு பொலிஸ் கூறியுள்ளது.
இவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக, சென்னையில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்து, வெவ்வேறு தொழில்களை செய்து வந்ததாகவும், வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் தமக்குப் பணம் அனுப்பி வைப்பவர் என்றும் கூறியுள்ளனர்.
போர் நடந்த போது, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தீவிரமாக களப் பணியாற்றியதாகவும், தாய், தந்தை, சகோதரிகள் என, அத்தனை சொந்தங்களையும் பறிகொடுத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இயக்கத்தில் இருந்து விடுபட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், அகதியாக, இங்கு வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர்கள், தாம் எவ்வித சதிச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட கியூ பிரிவு பொலிஸ் உயர் அதிகாரி,
'வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், விடுதலைப் புலிகள் நான்கு பேரை கைது செய்துள்ளோம். தமிழ்நாட்டில் இவர்கள் நாசவேலையில் ஈடுபட முயற்சி செய்யவில்லை.
ஆனால், இலங்கையில் உள்ள நண்பர்களை கைபேசியில் தொடர்பு கொண்டு நாசவேலையில் ஈடுபடுவது தொடர்பாக பேசியுள்ளனர்.
அதற்காக, இங்கு வெடிகுண்டு தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான ஆதாரங்களை பறிமுதல் செய்து, அவர்களை சிறையில் அடைத்துள்ளோம்.
தப்பியோடிய இரண்டு விடுதலைப் புலிகளை விரைவில் பிடித்து விடுவோம். சிறையில் அடைக்கப்பட்ட நான்கு பேரையும், காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.' என்று கூறினார்.
0 comments :
Post a Comment