ஜனவரி மாதத்திற்குள் துப்பாக்கி பாவனை சட்டத்தில் திருத்தம் - ஒபாமா
டிசம்பர் 14 ஆம் திகதி அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்திலு உள்ள நியூடவுன் நகரில் அமைந்திருக்கும் சிறுவர் பள்ளிக்குள் 20 வயது வாலிபன் ஒருவன் புகுந்து கண்மூடித்தனமாக நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகளும் 6 பெரியவர்களும் உட்பட 26 பேர் பரிதாபமாகப் பலியாகியிருந்தனர்.நாடு முழுதும் பேரதிர்ச்சியில் உறைய வைத்த இச்சம்பவத்தின் மூலம் அமெரிக்காவில் உள்ள துப்பாக்கிக் கலாச்சாரம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
இதனையடுத்து அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் உரிய ஆதாரங்களைக் காட்டி இலகுவாகத் துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசென்ஸும் துப்பாக்கியும் பெறலாம் என்ற சட்டத்தில் மாற்றத்தை, எதிர்வரும் 2013 ஜனவரி மாதத்திற்குள் தயாராக்கப் போவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவில் இதற்கு முன்னரும் நியூடவுனில் இடம்பெற்றது போன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.
வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் அடியோடு ஒழிக்க ஒரு உறுதியான திட்ட வரைவை தயாரித்துத் தன்னிடம் ஒப்படைக்குமாறு ஒபாமா, அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடென் தலைமையில் சில அமைச்சர்களும், தொண்டு நிறுவனப் பிரமுகர்களும் உள்ளடங்கிய குழு ஒன்றை அமைத்து அதற்கு கட்டளையிட்டுள்ளார்.
இக்குழுவிடம் அமெரிக்க துப்பாக்கிக் கலாச்சாரத்தினால் ஏற்படுகின்ற பாரதூரமான விளைவுகள் குறித்து நன்கு விளக்கப் படுத்தியுள்ளதாகவும், ஒரு சாதாரண நிகழ்வு போல் இதை எடுத்துக் கொண்டு விசாரணை, அறிக்கை பின்னர் புறக்கணிப்பு என்று இல்லாமல் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உறுதியான செயற் திட்டமே இது எனவும் ஒபாமா கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment