Tuesday, December 18, 2012

நாட்டில் அசாதாரண காலநிலை இதுவரை ஆறுவர் பலி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டில் நிலவும் கடுமையான அசாதாரண கால நிலை காரணமாக பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதொட கடும் மழையும் தொடர்ச்சியாக பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மழை காரணமாக மாத்தளை, ரத்தோட்டை பிரதேச செயலகப் பிரிவில் ஐவரும் கண்டி, பாததும்பரையில் ஒருவருமாக ஆறு பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்..

அவர்களில் நால்வர் மண்சரிவு காரணமாகவும் ஒருவர் வெள்ள நீரைப் பார்த்ததால் ஏற்பட்ட இதய அழுத்தம் காரணமாகவும் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடும் மழை காரணமாக மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல், கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, காலி, பொலன்னறுவை, புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இம்மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக ஏழு மாவட்டங்களில் 1129 குடும்பங்களைச் சேர்ந்த 4633 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

அதேநேரம் இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டவர் களில் 735 குடும்பங்களைச் சேர்ந்த 3021 பேர் 17 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 66 வீடுகள் முழுமையாகவும் 695 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை மழை தொடராகப் பெய்து வருவதால் கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் 24 மணி நேர மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி குமாரி வீரசிங்க கூறினார்.


இதேவேளை அவர் கண்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்த கடும் மழை காரணமாக அக்குரணைப் பிரதேசத்தில் சுமார் 8 அடிகளுக்கு வெள்ள நிலைமை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் 150 க்கும் மேற்பட்ட கடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

குருநாகல் பிரதேசத்தில் 225 லயன் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதை குருநாகல் மாநகர முதல்வர் காமினிபெர முனகே மற்றும் மாநகர சபை உறுப்பினர் தியாகராஜா சென்று பார்வையிட்டனர். கண்டி - குருநாகல் வீதியின் பல இடங் களில் வீதிக்கு மேலால் வெள்ளம் பாய்ந்து செல்வதால் வாகனப் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment