இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படைகளுடன் இணைந்து இந்திய இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவினர், இரகசிய கூட்டுப் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நஹான் சிறப்புப்படை பயிற்சி நிலையத்திலேயே இந்தப் போர்ப்பயிற்சிகள் இடம்பெற்று வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணர்வுபூர்வமான விடயம் என்பதால், இதுபற்றிய தகவல்களை இரகசியமாகப் பேணிக் கொள்வதென இருநாட்டு அரசாங்கங்களும் முடிவு செய்திருந்ததாக, இந்தியாவின் உயர்மட்டப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 3ம் திகதி ஆரம்பமான இந்த 21 நாள் போர்ப்பயிற்சி, எதிர்வரும் 24ம் திகதி முடிவுக்கு வரவுள்ளது.
கடந்த இரண்டு பத்தாண்டு காலத்தில், கிளர்ச்சி முறியடிப்பில் தமது அனுபவங்களை இருநாட்டு சிறப்புப் படையினரும் பகிர்ந்து கொள்கின்றனர்.
முன்னதாக, இந்தப் போர்ப்பயிற்சி இந்தியாவின் தென்பகுதியிலேயே நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்களிடம் இருந்து எழுந்த எதிர்ப்புகளை அடுத்து, இமாசல பிரதேசத்துக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இந்தியாவில் கடந்த ஆண்டு 820 இலங்கை படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டில் 870 படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment