Wednesday, December 5, 2012

வட,கிழக்கிலிருந்து வருவோரை திருப்பி அனுப்பாதீர் அவுஸ்ரேலியாவிடம் மன்னார் ஆயர் கோரிக்கை

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதியிலிருந்து புகலிடம் தேடி வந்த தமிழர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என மன்னார் ஆயர் அதி.வண இராயப்பு ஜோசப் ஆண்டகை அவுஸ்திரேலியா அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு வருபவர்களுக்கு அரசியல் தஞ்சம் அளிக்குமாறு மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ஆயர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடிதம் ஒன்றை அவுஸ்திரேலியா தமிழ் அகதிகள் கழகத்தினூடாக அவர் அனுப்பியுள்ளதாக மன்னார் ஆயர் இல்லத்தகவல்கள் தெரிவிக்கின்றது.

இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டுத் திருப்பியனுப்பப்படும் தமிழ் மக்களுடைய பரிதாபகரமான நிலை தொடர்பாக நான் அவசரமாக உங்களுடைய கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

வெளிநாட்டில் அரசியல் அடைக்கலம் கோரிய பின்னர் திருப்பி அனுப்பப்படுபவர்கள் அரசாங்கத்தினாலும் அதனுடைய ஆயுதப் படையினராலும் துரோகிகளாகக் கணிக்கப்படுவார்கள் என்பதால், அவர்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டியவர்களாக இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இவர்களில் சிலர் படையினருக்கு தகவல் கொடுப்பவர்களாக இருப்பதற்குக் கட்டாயப்படுத்தப்படுவதால் சமூகத்திடையே பதற்ற நிலை உருவாகின்றது.

இவர்கள் இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாடுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும், விசாரணைகளுக்கும், கண்காணிப்புக்கும் மற்றும் ஏனைய வகையிலான துன்புறுத்தல்கள் மற்றும் பாகுபாடுகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள்.

இவ்வாறானவர்களுக்கு ஒரே ஆறுதலாகவும் பாதுகாப்பாகவும் இருக்கக்கூடிய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

பல சந்தர்ப்பங்களில் வேண்டப்படாதவர்கள் என அரசாங்கத்தினாலேயே அவ்வமைப்புக்கள் நாட்டைவிட்டே வெளியேற்றப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில், எமது பிராந்தியத்தில் தற்போது காணப்படும் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு பார்க்கும் போது அவுஸ்திரேலியாவில் அரசியல் அடைக்கலம் கோரியிருக்கும் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது மிகவும் ஆபத்தானது என்பதே எனது கருத்தாகும்.

இலங்கையிலிருந்து அடைக்கலம் கோரி வந்தவர்களை அரவணைத்துக் கொள்ளும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை பாராட்டி நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், இவ்வாறு அடைக்கலம் கோருபவர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அரசியல் பாதுகாப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இக்கடிதம் கடந்த 03 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

1 comments :

Anonymous ,  December 6, 2012 at 10:01 AM  

Spirituality is something related to what the Holy Bible says.It hasn't got anything to do with the dirty politics.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com