Friday, December 28, 2012

அவுஸ்ரேலியாவுடனான டெஸ்ட் தொடரை இழந்தது இலங்கை- இரண்டாவது போட்டியிலும் தோல்வி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா வென்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் மெல்போர்னில் நடந்தது.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 156 ஓட்டங்களுக்கு சுருண்டது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 440 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஜான்சன் 73 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் இன்னிங்சை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணிக்கு லியான்(1) நிலைக்கவில்லை. அடுத்து வந்த பேர்டு டக் அவுட்டாக முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 440 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜான்சன் 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின் 304 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, அவுஸ்திரேலிய வேகத்தில் தடுமாறியது.

கருணாரத்னே 1 ஓட்டம் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தில்ஷன், அணித்தலைவர் ஜெயவர்தனா, தொடர்ந்து சமரவீரா என ஆட்டமிழக்க இலங்கை அணி தடுமாறியது.

போட்டியின் 16வது ஓவரில் ஜான்சன் வேகத்தில் காயம் அடைந்த சங்ககரா (27ழூ) வெளியேறினார்.

அடுத்து வந்த பிரசாத் (17) லியான் சுழலில் ஆட்டமிழந்தார். பிரசன்னா ஜெயவர்தனா, வெலகேதரா காயம் காரணமாக களமிறங்கவில்லை.

இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 103 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து அவுஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 201 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவிர, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என அவுஸ்திரேலியா கைப்பற்றியது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com