Saturday, December 8, 2012

போர்க்குற்றச்சாட்டு விசாரணைகள் சரியான திசையை நோக்கி நகர வேண்டும்.

இலங்கையில் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2009 மே மாதம் நடைபெற்ற இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட விடயம், இப்போது எல்லோருமே ஏற்றுக் கொள்ளும் ஒரு உண்மையாகிவிட்டது. இதில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விடயமாக இன்னமும் இருப்பது, யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பில் எந்தத் தரப்பு பொதுமக்களின் உயிரிழப்புகளுக்குப் பிரதான காரணகர்த்தாக்கள் என்பதுதான்.

அத்துடன் போர்க்களத்தில் நேரடி மோதலில் ஈடுபட்ட அரச படைகளையும், புலிப் படைகளையும் தவிர, இந்தப் போரில் மறைமுகமாக அல்லது பின்னணியில் இருந்து பங்கு வகித்து, பொதுமக்களின் இழப்புகளுக்குக் காரணகர்த்தாக்களான பிற சக்திகள் எவையெவை என்பதும் இன்னொரு விடயமாகும்.

இந்த இறுதிப் போரில் மட்டுமின்றி, நாட்டில் 30 வருடங்களாக நடைபெற்று வந்த இனவாத யுத்தத்தில் உள்நாட்டுச் சக்திகள் மட்டுமின்றி, சில பிராந்திய, சர்வதேச வல்லரசுச் சக்திகளும், ஐக்கிய நாடுகள் சபையும் கூட சம்பந்தப்பட்டு வந்துள்ளன என்பதும் இரகசியமான விடயமல்ல.

இறுதிப் போரின் போது, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட புலிகளின் பிரதான தலைமை அழிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்கள் அரச இராணுவத்திடம் சரணடைந்தனர். இறுதிக் கட்டப் போரின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதற்கு, அந்தப்போரின் போது புலிகளால் தமது பாதுகாப்பிற்காகப் பலவந்தமாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் அரச படைகளால் மீட்கப்பட்ட 3 இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் நேரடிச் சாட்சிகளாவர்.

ஆனால் போரின் போது நடைபெற்ற விடயங்களைக் கண்டறிவதற்கு, இந்த மக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினரைத் தன்னும் விசாரிப்பதற்கு இன்றுவரை இலங்கை அரசு மீது தொடர்ச்சியாகப் போர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வரும் சர்வதேச சக்திகள் முயன்றதாகத் தெரியவில்லை.

இலங்கை அரசு மீதான இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற உரிமை மீறல்கள் சம்பந்தமாகத் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன், தருஸ்மன் என்பவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழு இலங்கைக்குச் செல்லாமலும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமலும், ஒர் அறிக்கையைத் தயாரித்து செயலாளர் நாயகத்திடம் கையளித்தது. அதில் அரச படைகள் மீதும், புலிகள் மீதும் பல போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன.

ஆனால் அதன் பின்னரும், புலிகளைத் தவிர்த்துவிட்டு அரச படைகள் மீது மட்டும் புலி சார்புச் சக்திகளும், சில மேற்கத்தைய சக்திகளும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தன. ஆதன் அடிப்படையில், ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் மேற்கத்திய சக்திகளின் உதவியுடன் அமெரிக்கா இலங்கை அரசு மீது போர்க் குற்றப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த இறுதிக்கட்டப் போரில் மட்டுமின்றி, இலங்கையில் இனவாத யுத்தம் ஆரம்பித்த நாளிலிருந்து அதில் சம்பந்தப்பட்டு வந்த (ஒரு வகையில் அதற்குக் காரணமாகவும் இருந்த) இந்தியாவும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்து தான் ஒரு அப்பாவி போல நடித்ததுதான்.

ஆனால் இவையெல்லாம் நடந்து முடிந்து, இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, எல்லோரும் சுற்றி வளைத்துத் தாக்கி வந்த நிலையில், இப்பொழுது ஐ.நாவின் உள்ளக அறிக்கை என்ற ஒன்று 'கிணறு வெட்ட பூதம்' கிளம்பியது போல வெளிப்பட்டு, ஐ.நா அதிகாரிகளையே திருப்பித் தாக்கியுள்ளது. அந்த அறிக்கையின்படி, ஐ.நா இறுதிப் போரின் போது அப்பாவிப் பொதுமக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்ற மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இப்படியான குற்றச்சாட்டு வந்த பின்னர், ஐ.நா இந்தப் பாரதூரமான தவறை இழைத்ததிற்குக் காரணமான அதிகாரிகளை முறைப்படி விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களுக்குத் தண்டனை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இனிமேல் இப்படி நடந்து கொள்ளாமல் தவிர்பதற்கு, இதை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிக்கையுடன், ஐ.நா தலைமை அதைக் கைகழுவிவிட்டது. ஐ.நா தலைமையின் இந்த மெத்தனப் போக்கை, இலங்கை அரசு மீது தொடர்ச்சியாகப் போர்க் குற்றச் சாட்டுகளைச் சுமத்தி வரும் எந்த சர்வதேச சக்திகளும் பாரதூரமாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

ஐ.நா செய்தது சரி என்றால், இலங்கையும் இனிமேல் இவ்வாறான மனித உரிமை மீறல்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி, போர்க் குற்றச்சாட்டுகளிலிருந்து அதை
விடுவித்து விடலாம் தானே? எது எப்படியோ, இந்தப் போர்pன் போது ஏற்பட்ட உரிமை மீறல்கள் மீதான குற்றச்சாட்டுகள் இலங்கை அரசு மீது மட்டும் சுமத்தப்பட்ட நிலை மாறி, இப்பொழுது ஐ.நாவும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. அது ஒரு வகையில் நல்லதே. ஆனால் இன்னமும் சேர்க்கப்பட வேண்டிய குற்றவாளிகள் பலர் இருக்கின்றனர். முக்கியமாக போரின் ஒரு தரப்பாகவும், இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதற்குப் பிரதான காரணகர்த்தாக்களாகவும் இருந்த புலிகள், இந்தப் போர்க் குற்றச் சாட்டுகளில் இருந்து தப்பிவிட முடியாது. அவர்களது தலைமை அழிக்கப்பட்டுவிட்டது என்பதற்காக அவர்கள் எக்காரணம் கொண்டும் தப்ப முடியாது. அவர்களது இரண்டாம் மட்டத் தலைவர்கள் சிலரும், முக்கியமான செயற்பாட்டாளர்களும் அரசாங்கத்தின் வசம் இருக்கிறார்கள். பொதுமக்களின் அழிவுக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன்தான் காரணகர்த்தா என, இலங்கையில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சோல்கெய்ம் கூட அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் புலிகளின் நீட்சியாகப் பல புலம்பெயர் புலி அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. போரில் இந்த சக்திகளின் பங்கு குறித்து தருஸ்மன் அறிக்கையும்கூட சுட்டிக் காட்டியுள்ளது. இனப் பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்க்காமல், அதை யுத்தமாக மாற்றி, 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மக்கள் மேல் கொடூர யுத்தத்தை நடாத்திய ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுகளில் பங்கு வகித்தவர்கள், இன்றும் அக்கட்சியின் தலைமையை அலங்கரித்து வருகின்றனர். முதலில் அவர்களிடமிருந்தே இந்தப் போர்க்குற்றச்சாட்டுகளை ஆரம்பிக்க வேண்டும்.

இவர்களைவிட, போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தக்கூடிய புலிகளின் பிரதிநிதிகள் இலங்கைக்குள்ளேயே இருக்கிறார்கள். அவர்கள் வேறு யாருமல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே அவர்கள். கூட்டமைப்பு தமது தேவை கருதி புலிகளாலேயே உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் புலிகள் அழியும்வரை, புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று கூறி வந்தவர்கள். அதுமாத்திரமின்றி, இறுதிக்கட்டப் போரின் போது புலிகள் ஒரு சிறிய பகுதிக்குள் இலட்சக்கணக்கான மக்களைத் தமது பாதுகாப்புக் கேடயமாகப் பிடித்து வைத்திருந்த போது, ஒரு தடவை தன்னும் அந்த அப்பாவி மக்களை விடுவிக்கும்படி இந்தக் கூட்டமைப்பினர் புலிகளிடம் கோரவில்லை. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் போர்க் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்களே.

அத்துடன் இந்தப் போரைத் தொடர்ந்து நடாத்த வேண்டும் எனத் தென்னிலங்கையில் இயக்கம் நடாத்திய அனைத்து சிங்களப் பேரினவாத சக்திகளும்கூட போர்க் குற்றவாளிகளே. குறிப்பாக சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் போரை நிறுத்தி இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகச் சமாதான வழிகளில் தீர்வுகாண வேண்டும் என்பதற்காக, அவரது அரசாங்கம் 'வெண் தாமரை இயக்கம்' என்ற அமைப்பை உருவாக்கி சிங்கள மக்கள் மத்தியில் பெரியளவிலான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டது. ஆனால் இதற்கெதிராகப் போரைத் தொடர வேண்டும் எனப்போட்டி இயக்கமொன்றை ஜே.வி.பி ஆரம்பித்ததுடன், சிங்களக் கிராமப்புறங்களில் இராணுவத்துக்கு இளைஞர்களைத் திரட்டும் பிரச்சாரத்தையும் மேற்கொண்டது. எனவே இந்தப் போர்க் குற்றங்களில் ஜே.வி.பிக்கும் பாரிய பங்குண்டு.

2000ஆம் ஆண்டில் சந்திரிகா கொண்டு வந்த நல்லதொரு அரசியல் தீர்வைக் குழப்பியதில், ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஹெல உருமய, விக்கிரமபாகு கருணரத்ன என அனைவருக்கும் பங்குண்டு. சமாதானத் தீர்வைக் கொண்டுவர விடாமல் யுத்தத்தைத் தொடர வைத்த இக்கட்சிகள் போர்க் குற்றவாளிகள் இல்லையா?

இதேபோல, தமது பிழைப்புவாத அரசியலுக்காக அன்றிலிருந்து இன்றுவரை, இலங்கைத் தமிழரைப் போருக்குத் தூண்டி வந்த தமிழகத்தின் மு.கருணாநிதியிலிருந்து தொல்.திருமாவளவன் வரையிலான தமிழக சாக்கடை அரசியல்வாதிகளும் இந்தப் போர்க் குற்றங்களுக்கு உரியவர்களே.

எல்லாவற்றுக்கும் மேலாக 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற சுலோகத்தின் கீழ், இலங்கையில் போரை ஊக்குவித்து வந்த மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளும், தனது அரசியல் தேவைகளுக்காக தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதங்களும் இன்ன பிற உதவிகளும் வழங்கி ஆயுதப் போராட்டத்துக்கு வித்திட்டுவிட்டு, பின்னர் இலங்கை அரசின் பக்கம் நின்று யுத்தத்தை மறைமுகமாக வழிநடாத்திய இந்தியாவும் போர்க் குற்றவாளிகள் பட்டியலிலில் நிச்சயமாகச் சேர்க்கப்பட்டே தீர வேண்டும்.

இவ்வளவு குற்றவாளிகளும் இலங்கையில் நடைபெற்ற போரில் சம்பந்தப்பட்டிருக்க, உலகின் மிகவும் பயங்கரமான அமைப்பான புலிகள் இயக்கத்திடமிருந்து தமது நாட்டைப் பாதுகாப்பதற்காகப் போரிட்ட இலங்கை அரசின் படைகள் மீது மட்டும் போர்க் குற்றம் சுமத்துவது ஒரு தலைப்பட்சமானதும் அநீதியானதுமாகும்.

எனவே போர்க் குற்றச்சாட்டு விசாரணை என்பது, 30 வருடப் போரையும் உள்ளடக்கியதாக இருப்பதுடன், அதில் சம்பந்தப்பட்ட சகலரையும் விசாரிப்பதாகவும் இருக்க வேண்டும். முதலில் இலங்கை அரசு மீது மட்டும் சுமத்திய குற்றச்சாட்டு, இப்பொழுது ஐ.நாவையும் உள்ளடக்கியுள்ளது வரவேற்கத்தக்கதே. இது மேலும் விரிவு பெற்று நாம் மேலே குறிப்பிட்ட அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

வானவில்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com