Tuesday, December 11, 2012

மீண்டும் தமிழகத்திற்கு தண்ணீரை நிறுத்தியது கர்நாடகா.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடகா மீண்டும் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டிசம்பர் 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 5 நாட்களுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் ஒரு நாள் தாமதமாக வியாழக்கிழமை நள்ளிரவு முதலே தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்பட்டிருந்தது. பின்னர் இத்தாமதத்திற்கு மன்னிப்பு கோரி அதற்கு மாற்றீடாக, மேலதிக ஒரு நாள் சேர்த்து திங்கட்கிழமை மாலை வரை தண்ணீரை திறந்துவிடப்படும் என கர்நாடகா அறிவித்தது.

ஆனால் நேற்று கர்நாடக சட்டசபையில், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய போது, பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், 'ஞாயிற்றுக்கிழமையுடன் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்திவிட்டோம். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், காவிரி ஒழுங்குமுறை ஆணையம் விதித்த உத்தரவுக்கு எதிராகவும் கர்நாடக அரசு சார்பில் மீண்டும் மறுபரிசீலனை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளோம். எனவே எதிர்க்கட்சிகள் தர்ணாவில் ஈடுபடாது அமைதிகாக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

திங்கட்கிழமை வரை வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்னீர் திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியிருந்தது. அதற்கடுத்த நாளிலிருந்து டிசம்பர் மாதம் முடியும் வரை 12 டிஎம்சி தண்னீரை தமிழகத்துக்கு விட வேண்டும் என காவிரி கண்காணிப்பு குழு பரிந்துரைத்தது. ஆனால் இப்போது இவை இரண்டுமே நடக்க போவதில்லை என்பது புலனாகிரது.

காவிரி கண்காணிப்பு குழு பரிந்துரையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யவுள்ளோம் என்கிறார் ஜெகதீஷ் ஷெட்டர். ஆனால் காவிரி நதிநீர் ஆணையம் வெளியிட்ட உத்தரவை கர்நாடகா அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேல் முறையீட்டுக்கு காவிரி நதிநீர் ஆணையத்தையே நாடலாம் என வழக்கை ஜனவரி 4ம் திகதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். மீண்டும் எத்தனை தடவை தான் இப்படி உச்சநீதிமன்றத்திலும் காவிரி நதிநீர் ஆணையத்திலும் கர்நாடகா மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய போகிறது என கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இந்நிலையில் டிசம்பர் இறுதிக்குள் காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பை அரசு இதழில் வெளியிட மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு முன்பு கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய நான்கு மாநில முதல்வர்களை அழைத்து ஆலோசிக்க வேண்டும். அதில் உடன்பாடு எட்டினால் அரசாணையில் வெளியிடலாம் என்கிறார் அவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com