Monday, December 17, 2012

பாடசாலை விடுமுறையை கொண்டாட முடியுமா?

தற்போது மாணவர்களுக்கு பாடசாலை விடுமுறை விடப்பட்டிருக்கிறது. உண்மையில் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பும்போதும் விடுமுறையின்போதும் மாணவர்கள் மகிழ்ச்சிக்குப் பதிலாக வருத்தம் கொள்வார்களாக இருந்தால் அப்போதுதான் பாடசாலைகள் சிறப்பாக இயங்குவதாகச் சொல்லமுடியும் என்பார்கள். நம் மாணவர்களுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. பள்ளிக்கூடம் படிப்பு என்பதெல்லாம் தண்டனைகளாகவே உணரும் நிலைதான் அவர்களுக்கு இங்கு உண்டு. நத்தார், புதுவருடம், தைப்பொங்கல் என வரிசையாகப் பண்டிகைகளைக் கொண்ட இந்த விடுமுறைக்காலத்தை முழு மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளவும் பெற்றோர் அவர்களை அனுமதிக்கப் போவதில்லை.

அடுத்த வகுப்புக்குரிய பாடங்களை இப்போதே திணிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதுவும் அடுத்த வருடம் ஐந்தாம் வகுப்புக்குப் போகவிருக்கும் பிள்ளையாக இருந்தால் சொல்லவே வேண்டாம். புலமைப்பரிசில் பரீட்சை என்பது பெற்றோர்களின் கௌரவப் பிரச்சினையாக மாறிவிட்டது. அந்தப் பத்து வயதுச் சிறுவனோ சிறுமியோதான் அவர்களைச் சமூகத்தில் முந்தியிருப்பச் செய்ய வேண்டிய கடமையைக் கட்டாயமாகச் சுமந்தாக வேண்டும். தம்பிள்ளை புலமைப்பரிசிலில் தோற்றுவிடுவதை ஒவ்வொரு பெற்றோருமே மாபெரும் அவமானமாகக் கருதும் நிலைக்குச் சென்றிருக்கிறார்கள்.

படி, படி என பிள்ளைகளை மிரட்டப்படப் போகிறார்கள். ரியூசன் வகுப்புகள் மாதிரி வினாத்தாள்கள் என பிள்ளைகளை வாட்டியெடுப்பார்கள். மற்றைய வகுப்புகளைச் சேர்ந்த பிள்ளைகளும் வீட்டில் சும்மா இருந்துவிட முடியாது. பெற்றோரின் கிடுக்கிப்பிடியில் இது விடுமுறைக் காலமா பள்ளிக்கூடக்காலமா என்று அவர்கள் குழம்பிப்போகவே செய்வார்கள்.

அனைத்துத் துறைகளிலும் தங்கள் பிள்ளை கெட்டிக்காரராகி விடவேண்டும்,அதற்குரிய சகல வாய்ப்புகளையும் அளிக்க வேண்டும் என்பதற்காக இப்படி வருத்துகிறார்கள். இதனால் பணச் செலவோடு, குழந்தைகள் மன அழுத்தத்துக்கும் ஆளாகிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் பல முறை எச்சரித்துள்ளனர்.

இந்த விடுமுறை நாட்களில் கூட,காலையில் தொடங்கி, மாலை வரை பல்வேறு வகுப்புகளுக்குப் போய்க்கொண்டே இருக்கிறார்கள் குழந்தைகள். காலை ஐந்து மணிக்கு நித்திரை விட்டெழுவதிலிருந்து இரவு படுக்கப் போகும்வரை பிள்ளைக்கு இருக்கும் வகுப்புகளின் அட்டவணையைச் சொல்லி ஆனந்த அலுப்படைகிறார்கள் பெற்றோர். அவர்களது விளையாட்டு என்பது செல்போனிலுள்ள விளையாட்டுகளோடும், கம்ப்யூட்டர் விளையாட்டுகளோடும் நின்றுவிடுகிறது.

10ம் வகுப்பு முடிவதற்குள் குழந்தைகள் என்னவெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என நம் பெற்றோர் நினைத்தார்களோ, அதையெல்லாம் 5ம் வகுப்பு முடிவதற்குள் தங்கள் பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என இப்போதைய பெற்றோர் நினைக்கிறார்கள். பல தியாகங்களை செய்து, சக்தியை மீறி செலவு செய்து பிள்ளைகளை வளர்க்கிறார்கள்.

இத்தகைய நெருக்குதல்களிலிருந்து பிள்ளைகள் விடுதலையாக வேண்டும். பிள்ளைகளிடம் திறந்த மனதோடு பழகுவதும், தங்கள் தேவைகளையும் விருப்பத்தையும் வெளிப்படையாகச் சொல்லக்கூடிய நம்பிக்கையை அவர்களுக்குத் தருவதும் முக்கியம். விருப்பத்திற்குரிய துறைகளை அவர்களே தேர்ந்தெடுக்க விடுவதும், நம்மால் முடியாமல் போன ஆசைகளை எல்லாம் அவர்கள் மூலம் அடைந்துவிட முயலாமல் இருப்பதும் நல்லது.

குறிப்பாக பிற்கால எதிர்பார்ப்புகளை உத்தேசித்து இப்போது குழந்தையாக அவர்கள் வாழும் தன்மையையும், அந்தப் பருவ விளையாட்டுகளையும் சிதைத்து விட வேண்டாம். விடுமுறையை விடுமுறைக் கொண்டாட்டங்களுடனேயே அவர்கள் களிப்பதற்கு விடவேண்டும்.

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com